Last Updated : 28 Jul, 2017 10:02 AM

 

Published : 28 Jul 2017 10:02 AM
Last Updated : 28 Jul 2017 10:02 AM

சினிமாலஜி 14: இது சினிமா தர்மமா?

கவிதா, ப்ரியா, பார்த்தா, ப்ரேம் நால்வரும் ‘விக்ரம் வேதா’ மேட்னி ஷோ பார்க்க திரையரங்குக்குள் நுழைந்தனர். புகைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு வரிகளை மாதவனும் மதுவுக்கு எதிரான வரிகளை விஜய் சேதுபதி வாசித்ததுமே ‘அட’ என்ற உணர்வை ஏற்படுத்தியது.

விக்ரமாதித்தன் - வேதாளம் கதாபாத்திரங்களை அனிமேஷனலில் காட்டும்போதே, ‘ஓஹ் வாவ்... நம்ம ஆளுங்க எப்பவோ நான் - லீனியர்ல கதை சொல்ற உத்தியைக் கையாண்டுருக்காங்க’ என்று மைண்ட் வாய்ஸில் வியந்துகொண்டான் பார்த்தா. அதே உத்தியில் படம் நகர்ந்தது. போலீஸ் விக்ரம்தான் விக்ரமாதித்தன். தாதா வேதாதான் வேதாளம்.

இடைவேளை.

டிக்கெட்டுக்கும் பைக் பார்க்குக்குமே பாக்கெட் மணி சரியாய்ப் போனதால் நால்வரும் தேநீர்கூட அருந்தாமல் வராந்தாவில் ஒருவர் முகம் ஒருவர் பார்க்க நின்றுகொண்டிருந்தனர்.

“செம்மடா... ஒருத்தருக்கு மேல ஹீரோ இருந்தாலே நம்ம இயக்குநர்கள் திணறிடுவாங்க. இதுல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பக்காவா ஒர்க் அவுட் ஆன மாதிரி இருக்கு” என்று பார்த்தா தொடங்கினான்.

“ஆமா, விஜய் சேதுபதி என்ட்ரி செம்ம மாஸ்டா. ஆனா திரும்பத் திரும்ப முன்னாடி பார்த்த படங்கள்ல பார்த்த மாதிரியே இருக்குறாரு; ஒரே மாடுலேஷன்ல பேசுறாருன்னு எனக்கு மட்டும்தான் தோணுதா?” - சந்தேகம் கிளறினான் ப்ரேம்.

கோபத்தை வெளியே காட்டாமல் அடக்கிவாசித்த ப்ரியா, “ரொம்ப இயல்பா கதாபாத்திரத்தோட பொருத்திக்கிறதுனால, ஏதோ கஷ்டப்படாம ஜாலியா வந்துட்டுப் போற மாதிரி உனக்குத் தோணுதுன்னு நினைக்கிறேன். ஃபர்ஸ்ட் ஆஃப்தானே முடிஞ்சிருக்கு. செகண்ட் ஆஃப்ல விஜய் சேதுபதி கண்களையும் நெத்தியையும் மட்டுமாவது கவனி. தெரியும்” என்றாள் அழுத்தமாக.

“சரிம்மா. விட்ரு. கவனிக்கிறேன். விக்ரமாதித்தன் - வேதாளம் கதை சொல்லும் உத்தியை ரொம்ப ஸ்மார்ட்டா திரைக்கதையில கொண்டு வந்திருக்காங்க. தமிழில் வேற லெவல் சினிமா காட்டுற முயற்சியைப் பாராட்டியே ஆகணும். எல்லா விதமான ஆடியன்ஸும் ஓரளவு புரிஞ்சுகிட்டு என்சாய் பண்றதைப் பார்க்கும்போது ஏதோ நம்பிக்கை கிடைக்குது. இந்த மாதிரியான திரைக்கதை முயற்சிகளில் முன்னணி ஹீரோக்கள் வர்றதுதான் சாதகமான விஷயமே” என்று பாதையை மாற்றினான் ப்ரேம்.

சற்றே தயங்கித் தன் கருத்தை முன்வைக்க வந்த ப்ரியா, “இந்த மாதிரி கிராஜுவலா நம்ம ஆடியன்ஸை நான்-லீனியர் மாதிரியான திரைக்கதைகளுக்குத் தயார்படுத்தியிருந்தா ‘ஆரண்ய காண்டம்’ எல்லாம் செமத்தியா ஓடியிருக்குமோ?” என்று கேள்வி எழுப்பினாள்.

“அதோட லெவலை ரீசன்ட்டா வேற எந்தத் தமிழ்ப் படமும் எட்டலை” என்று நொந்துகொண்டான் ப்ரேம்.

“நீங்க பாதி படம் பார்த்துட்டே சினிமா அம்சங்களை மட்டும் வெச்சி பேசுறீங்க. அதுல எனக்குப் பிரச்சினை இல்லை. கதை பழசு மாதிரி தெரிஞ்சாலும், கதை சொல்ற உத்தி என்னையும் வியக்க வைக்குது. ஆனா, கதாபாத்திரங்களை அமைத்த விதமும், அதைக் காட்டும் விதமும் இன்னும் அப்படியே இருக்குற மாதிரி ஃபீல் பண்றேன்” என்று கொந்தளிப்பு மோடுக்கு மாறத் தயாரானாள் கவிதா.

‘ஆரம்பிச்சிட்டாடா...’ என்று முனகினான் பார்த்தா. ஆனாலும் அவள் தொடர்ந்தாள்.

“தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நல்லது, கெட்டது பத்தியெல்லாம் இந்தப் படத்துல பேசுறாங்க. எப்படி மாஸ் மசாலா ஹீரோக்களை ரவுடியா காட்டி மக்களை ரசிக்க வெச்சு, நெகட்டிவ் தன்மை மீது ஈர்ப்பை ஏற்படுத்துறாங்களோ, அதே மாதிரி தானே இங்கேயும் நடக்குது. வேதா பயங்கர கொலைகார கேங்ஸ்டர் தலைவராம். அந்த கேரக்டரை என்ட்ரி பண்ணும்போது, தியேட்டரை அதிரவைக்கிறதுக்குன்னே பர்ப்பஸா காட்சி அமைச்சது என்னவாம்? ரவுடிகளை ஆராதிக்குறதை இந்தப் படக்குழுவும் செஞ்சிருக்கு.”

“அம்மா தாயே... படம் பார்க்குற மூடு மாறிடப்போவது. வாங்க... உள்ளே போவோம். மத்ததைப் படம் முடிச்சுட்டு வெளிய வந்து பேசிக்கலாம்” என்று மூவரையும் சீட்டுக்கு அழைத்துச் சென்றான் பார்த்தா.

முடிந்தது படம்.

தங்களுக்குப் பிடித்த தேநீர் கடையில் பிளாக் டீ அருந்தியபடி நால்வரும் மீண்டும் பேசத் தொடங்கினார்கள்.

“நட்சத்திரத் தேர்வு தொடங்கி சவுண்ட் எஃபெக்ட்ஸ் வரைக்கும் எல்லா ஏரியாலயும் ரொம்ப நேர்த்தியா பண்ணியிருக்காங்க. எனக்கு முழு நிறைவு தந்திருக்கு” என்று புகழாரம் சூட்டத் தொடங்கினாள் ப்ரியா.

மூவரின் கண்களும் கவிதாவையே கவனித்தன. அவளோ தேநீரைச் சுவைப்பதிலேயே ஆழ்ந்திருந்தாள். பார்த்தா பேசத் தொடங்கினான்.

“நிச்சயமா. குறிப்பா, துணைக் கதாபாத்திரங்களைக் கச்சிதமா செதுக்கியிருக்காங்க. ‘காற்று வெளியிடை’யில் வீணடிக்கப்பட்ட ஷ்ரத்தா இதுல சூப்பரு. கதிர், ப்ரேம், விவேக் பிரசன்னா, ஹரீஷ் எல்லாருமே பக்கா. ஆமா... எல்லாப் படத்துலயும் வயசான போலீஸா பக்குவமாவும் நிதானமாவும் பேசிட்டே நரித்தனம் பண்ணுவாரே... அவருக்கும் இதுலே அதே மாதிரியான ரோல். ஒரு மாதிரி எரிச்சல் வருது.”

“என்னைப் பொறுத்தவரைக்கும் கதாபாத்திர உருவாக்கத்திலும் சரி, நடிப்பிலும் சரி... மாதவன்தான் கச்சிதம்” என்றான் ப்ரேம்.

“உன்கிட்ட ஆர்க்யூ பண்ண விரும்பலை.. உனக்குப் படம் ஓகேதானே?” - கவிதாவைக் கிளறினாள் ப்ரியா.

“ம்... ஒட்டுமொத்தமா பிடிச்சிருக்கு. சினிமாலஜி ஸ்டூடண்ட்டா ரொம்பவே பிடிச்சிருக்கு.”

“அப்ப கருத்தியல் ரீதியா?”

“முழுசா பிடிக்கலை.”

28CHRCJ_ARANYAKANDAM_ ‘ஆரண்யகாண்டம்’ படத்தில் ஜாக்கி ஷெராஃப்

பார்த்தா உள்புகுந்தான். “போலீஸ் தரப்புல இருக்குற கெட்டதையும், கேங்ஸ்டர் தரப்பில் உள்ள கெட்டதையும் பேலன்ஸ் பண்ணிதானே காட்டிருக்காங்க. ரெண்டு தரப்பையும் அப்படியே கொண்டாடலையே! போலி என்கவுண்டருக்குக் காரணமே சட்டரீதியிலான பின்னடைவுகள்தான்னு நல்லாவே சொல்லியிருக்காங்க. அதேபோல, போலீஸுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதுகாப்பும் சரியான பொருளாதாரத் தேவையும் பூர்த்தியாகலைன்றதையும் காட்டியிருக்காங்க. உனக்கு வேற என்னதான் பிரச்சினை?”

“எல்லாப் பார்வையாளர்களும் அப்படி யோசிக்க முடியுமா? போலீஸ் - கேங்ஸ்டர் இரண்டு தரப்பிலும் இருக்குற ஹீரோயிஸத்தைத்தான் தெளிவாகப் பதியவைக்கிறாங்க. முக்கியமான பிரச்சினைகளை ரொமாண்ட்டிசைஸ் பண்ணி கவனத்தைத் திசைத் திருப்புறதுதான் மறுபடி மறுபடி நடக்குது. ஆரம்பம் முதல் இறுதிவரை நல்லவனைவிட கெட்டவனையே நியாயப்படுத்துறதையும், அவனுக்கு ஆதரவாகவே மக்களின் மனநிலையையும் மாத்துறதையும் எமோஷன்ஸ் கலந்த ஹீரோயிஸம் மூலமா செய்றதை என்னால ஏத்துக்க முடியலை.”

“நான் ஒரு கதை சொல்ட்டா... அது ஒரு மாநிலமாம். அதுல இருக்குற அரசியல் கட்சிகள், தலைவர்கள் எல்லாருமே மோசமானவங்கதானாம். தேர்தல்ல நிக்கிற எல்லாருமே அப்படித்தானாம். நீ ஓட்டுப் போட்டே ஆகணுமாம். யாருக்கு ஓட்டுப் போடுவ?” என்றான் பார்த்தான்.

கொஞ்சம் யோசித்த கவிதா, “மோசமானவர்களில் ஓரளவு உருப்படியானவரை.”

“குட்... தமிழ் சினிமான்னு ஒண்ணு இருக்காம். அதுல தொண்ணூறு சதவீதம் படங்கள் அரைச்ச மாவையே அரைச்சு ரொம்ப மொக்கையாவே வருதாம். பத்து சதவீதத்துக்கும் குறைவாதான் உருப்படியான சினிமா வருதாம். அந்த உருப்படியான சினிமாவையும் கருத்தியல் சட்டகம் விட்டகம்னு சொல்லிக் கழுவியூத்துவியா? ஓரளவு உருப்படியா இருக்குற அந்தப் படங்களைக் கொண்டாடுவியா?”

ஆம், உங்களது பதில்தான் கவிதாவுடையதும்.

தொடர்புக்கு - siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x