Last Updated : 01 Jan, 2014 02:25 PM

 

Published : 01 Jan 2014 02:25 PM
Last Updated : 01 Jan 2014 02:25 PM

‘2014-ல் நான்’

புத்தாண்டு என்றதும் நம் ஞாபகத்துக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று உறுதிமொழிகள். ‘கோபப்பட மாட்டேன்’, ‘சிகரெட் பிடிக்கமாட்டேன்’, ‘போனில் பேசுவதை குறைத்துக்கொள்வேன்’, ‘குடிக்க மாட்டேன்’ என்றெல்லாம் விதம் விதமாக புத்தாண்டில் பலரும் உறுதி எடுத்துக்கொள்வது வழக்கம்.

இந்தப் புத்தாண்டின்போது நம் சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் என்னென்ன புத்தாண்டு உறுதிமொழிகள் எடுத்துள்ளார்கள் என்றும் இந்த ஆண்டில் அவர்கள் தீர்மானங்கள் என்னவென்றும் கேட்டோம்.

பிரபுதேவா:

‘‘குழந்தைங்களோட இந்தப் புத்தாண்டை மைசூரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். அவங்களுக்கு பிடிச்ச கிரீன் ப்ளேஸ், பார்ம் ஹவுஸ், கோழிப்பண்ணை எல்லாத்தையும் சுற்றி காட்டியாச்சு. பாலிவுட் சினிமாவில் நாளுக்கு நாள் என் மீது கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதை தக்க வைத்துக்கொள்ள இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பதுதான் என் இந்த ஆண்டு உறுதிமொழி. வரும் கோடை விடுறையில் வெளிவரத் திட்டமிட்டிருக்கும் அஜய் தேவ்கானின் புதிய படத்துக்கான வேலைகளில் இருக்கிறேன். கிறிஸ்துமஸ் தொடங்கி இப்போ வரைக்கும் எல்லோரும் மும்பையில் பண்டிகை கொண்டாட்டத்தில் மிதக்கிறார்கள். இந்த நேரத்தை குழந்தைகளோடு செலவழிக்கலாம் என்று மைசூர் வந்தேன். விரைவில் தமிழ் படம் இயக்குவதிலும் ஆர்வமாக இருக்கிறேன். அதுவும் இந்த ஆண்டு முடிவாகும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறேன்!’’

சஞ்சிதா ஷெட்டி:

‘‘ஹெல்த் ரொம்ப முக்கியம் என்பதில் தெளிவாக இருப்பேன். முழு ஆரோக்கியமாக இருந்தால்தான் புத்துணர்ச்சியுடன் வேலைகளைத் தொடர முடியும். அதற்காகவே ஒவ்வொரு நாளும் 2 மணிநேரம் யோகா, தியானம், டயட்புட் என்று உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறேன். இந்த ஆண்டும் அது தொடரும். என்கிட்ட கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. இந்த ஆண்டின் பரிசா புதிதாக 2 தமிழ்ப்படங்களில் நடிக்கப் போறேன். பெங்களூரில் இருந்து சென்னைக்கு குடிபெயர நல்ல வீடாக பார்த்து வருகிறேன். ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் ஷூட்டிங்ல இருக்க வேண்டும் என்று திட்டமிடுவேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அது முடியவில்லை. 2015ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலாவது படப்பிடிப்பில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”

விஷ்ணு விஷால்:

‘‘ எடுக்கும் உறுதிமொழிகளை ஒரு மாதம்கூட கடைபிடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். இருந்தாலும் இந்த புத்தாண்டில் தொடர்ந்து 2 மாதங்களாவது சைவ உணவையே சாப்பிட வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். முழுக்க முழுக்க காய்கறி, கீரைகள், பழங்கள் மட்டும் சாப்பிட்டு உடலை அழகாக இயற்கையாக கவனித்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். மற்றபடி ஜனவரி 17-ம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. அடுத்து இயக்குநர் சீனுராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்புக்கு பறந்துவிடுவேன். இந்த ஆண்டு முழுக்க தொடர்ச்சியா பிஸியாவே இருக்கணும்னு ஆசை இருக்கு.

ரம்யா:

ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும் உறுதிமொழியில் இதுவரை ஒன்றைக்கூட கடைபிடிக்க முடியவில்லை. ‘ஜங்க்புட்டை தவிர்க்க வேண்டும், அதிகமா கோபப்படக்கூடாது, வீட்டில் தோழிகளோட ரொம்ப நேரம் செலவழிக்க வேண்டும்’ இதெல்லாம் என்னோட இதற்கு முந்தைய ஆண்டு உறுதிமொழிகள். இதுவரைக்கும் ஒன்றைக்கூட ஒழுங்கா பின்பற்ற முடியலை. அதனாலேயே இந்த ஆண்டு உறுதிமொழிக்கு லீவ் விட்டாச்சு. இனி எப்பவும் யாரோட மனதையும் சங்கடப்படுத்தும்படியாக ஒரு சின்ன வார்த்தையையோ, முகபாவனையையோ காட்டக்கூடாதுன்னு ஆசைப்படறேன். அதை வேணும்னா இந்த ஆண்டு நிச்சயம் கடைபிடித்தே தீருவேன்னு எழுதிக்கோங்க!’’

கார்த்திகா:

‘‘ ஒவ்வொரு நாளையும் சவாலாவே எடுத்துப்பேன். புதிதா பிறந்திருக்கும் இந்த 2014 ம் ஆண்டில் என்னோட ஸ்பெஷல் வெறும் படங்கள் மட்டுமல்ல. நான் ஆசை ஆசையாய் மும்பையில் படித்துக்கொண்டிருக்கும் ‘பேச்சுலர் இன் பிசினஸ்’ பட்டப்படிப்பை இந்த 2014 ம் ஆண்டில் நல்ல மார்க்கோட முடிக்க போகிறேன். அதுதான் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்துக்கிட்டிருக்கு. இப்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் நாயகியா நடிச்சுட்டு இருக்கேன்.. இதைத்தவிர இரு தெலுங்கு படங்களிலும் நடிக்க இருக்கிறேன். அதேபோல, 2013ல் வெளிவந்த என்னோட முதல் கன்னடப்படம் 100 நாட்கள் ஓடி வெள்ளிவிழா படமாக பேர் வாங்கிக்கொடுத்திருக்கு. இப்படி திரைத்துறையில் அழகான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் முந்தைய ஆண்டுக்கும், நல்ல வாய்ப்புகளில் பயணிக்க வைத்திருக்கும் இந்த ஆண்டுக்கும் ரொம்ப நன்றி. எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!’’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x