Published : 02 May 2014 01:33 PM
Last Updated : 02 May 2014 01:33 PM

வேடிக்கை பார்க்கிறது பிலிம் சேம்பர்- கேயார் பேட்டி

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு (பிலிம் சேம்பர்) சமீபத்தில் நடந்த தேர்தலை, முதல்முறையாகப் புறக்கணித்திருக்கிறது தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். பிலிம் சேம்பர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுவந்த நிலையில், இந்தப் புறக்கணிப்பு தமிழ்த் திரையுலகில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயாரைச் சந்தித்தோம்...

பிலிம் சேம்பரின் தேர்தலை இம்முறை தயாரிப்பாளர் சங்கம் புறக்கணிக்க என்ன காரணம்?

ஆல் இந்தியா பிலிம் ஃபெடரெஷன் என்ற அகில இந்திய அமைப்புக்கு மேஜை, நாற்காலிகூடக் கிடையாது. ஆனால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இன்று 250 கோடி ரூபாய்க்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சொத்துகளோடு இருக்கிறது. இது நம்மவர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு, நாம் வளர்த்தெடுத்த அமைப்பு. தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் இன்று நமது உரிமைகள் பறிக்கப்படும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அமைப்பாகிவிட்டது. ஒரு சிலரின் சுயநலத்துக்காக, பிலிம் சேம்பர் பதவிகளைத் தங்களுக்குத் தலையாட்டுபவர்களுக்கு பிராக்ஸி வோட்டிங் என்ற குறுக்கு வழியைப் பயன்படுத்தி தாரை வார்க்கத் தொடங்கியிருப்பதே நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்க முதன்மையான காரணம். இவை தவிர இன்னும் பல காரணங்களை ஒரு பட்டியலே போடலாம்.

என்ன உரிமைகள் பறிக்கப்படுகின்றன? கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

தென்னிந்திய சினிமாவின் தாயகமாக அன்று தமிழ்நாடுதான் இருந்தது. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., பிரேம் நசீர் எல்லோரும் இங்கிருந்துதான் கிளை பரப்பினார்கள். அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைவரும் கலையெனும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்த காரணத்தால் பிலிம் சேம்பரைத் தென்னிந்தியா முழுமைக்குமான அமைப்பாகத் தமிழகத்தில் உருவாக்கினார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டு சினிமா கலைஞர்கள் மற்ற மாநிலங்களுக்குப் படப்பிடிப்புக்குச் செல்லும் போதும், நமது படங்கள் அங்கே வெளியாகும்போதும் இன்னும் பல்வேறு வழிகளில் நாம் பல கட்டுப்பாடுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

உதாரணத்துக்கு ஒன்று. ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் தமிழ்ப் படமொன்றின் படப்பிடிப்புக்குப் பத்து ஸ்டண்ட் கலைஞர்கள் தேவை என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்தப் பத்துப் பேரில் ஏழு பேரை ஆந்திர ஸ்டண்ட் கலைஞர்களில் இருந்தே அழைத்துக்கொள்ள வேண்டும். மூன்று பேரை மட்டும்தான் தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லலாம். இதுபோன்ற மாநிலங்களுக்கு இடையிலான சினிமா பிரச்சினை களைப் பேசித் தீர்க்கும் ஃபெடரல் அமைப்பாக சவுத் இந்தியன் பிலிம் சேம்பர் இருக்க வேண்டுமே தவிர, தமிழ் சினிமாவுக்கு ஏற்படும் எந்தப் பிரச்சினைகளையும் கண்டுகொள்ளாமல், தனிப்பட்ட மனிதர்களின் பிரைவேட் லிமிடெட் கம்பெனிபோல செயல்படக் கூடாது. அப்படி நடப்பதால்தான் 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த அமைப்பால் தமிழ் சினிமாவுக்குப் பலன் இல்லாத நிலை உருவாகிவிட்டது. பிலிம் சேம்பர் தேர்தலிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப் படாத நிலையும் தொடர்கிறது.

பிலிம் சேம்பரின் தலைவராக நீங்களும் பதவி வகித்திருக்கிறீர்களே?

நான் பிலிம் சேம்பரில் கமிட்டி மெம்பராகவும் பிறகு துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தபோது தமிழ்ப் படத் தயாரிப்பாளர் சங்கம் உயிரற்றதாக இருந்தது. பிலிம் சேம்பரில் இருந்துகொண்டுதான் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயிரூட்டினேன். பிலிம் சேம்பர் வளாகத்திலேயேதான் தயாரிப்பாளர் சங்கமும் இயங்கியது. ஆனால் டெலிபோன் பில் கட்டக்கூட வழியில்லாத நிலை. முக்தா சீனிவாசனால் நிறுவப்பட்ட சங்கம், பிறகு 1987-ல் தொடங்கி பல ஆண்டுகள் எந்தவிதச் செயல்பாடும் இல்லாமல் முடங்கிவிட்டது. அது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. அப்போது அதிகபட்சம் 90 உறுப்பினர்கள்தான் இருந்தார்கள். சங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல். பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசத்தை நியமனத் தலைவராகப் பொறுப்பில் அமர்த்தினேன். பிலிம் சேம்பரில் இருந்துகொண்டே தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைகளை எல்லாம் நான் எடுத்துச் செய்ய ஆரம்பித்தேன்.

மூன்று ஆண்டுகள் சங்கம் செயல்பட்ட பிறகு தயாரிப்பாளர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்போது பிரபல தயாரிப்பாளர்களாக இருந்த கோவை செழியன், கேயார்ஜி, நான் உட்பட பலரும் ஒரு இடத்தில் கூடி, நமது அமைப்பை வலுவானதாக மாற்ற வேண்டும் என்று பேசினோம். எல்லோரும் என்னைத் தலைவராக இருக்கும்படி வற்புறுத்தினார்கள். நான் அப்போது விநியோகத் தொழிலில் இருந்த தோடு, வரிசையாகப் படங்களை இயக்கித் தயாரித்துக்கொண்டிருந்தேன். எங்கள் குழுவில் மூத்தவரான கோவை செழியனைத் தலைவராக வழிமொழிந்தேன். ஏற்றுக்கொண்டார்கள். பிறகு கேயார்ஜியைத் தலை வாராக்கினோம்.

அன்று சங்கத்தில் இருந்த பணமே 16 ஆயிரம் ரூபாய்தான். பிலிம் சேம்பருக்கு இணையாகத் தயாரிப்பாளர் சங்கத்தை வளர்க்க வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தோம். பிறகு பிலிம் சேம்பருக்கு நான் தலைவராக ஆனபோது தேசிய விருதுக் குழுவில் இடம்பெற்று, தகுதி மிக்க தமிழ்ப் படங்களுக்காக டெல்லியில் போராடியிருக்கிறேன். ஆனால் இன்றைய பிலிம் சேம்பரிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியவில்லை. ஒரு விழா நடத்துவதில்கூடத் தமிழ்க் கலைஞர்களுக்கு உரிய பிரதிநிதித்தும் கொடுக்கப்படாதபோது, பிலிம் சேம்பரின் தேர்தலில் நேர்மையை எதிர்பார்க்க முடியவில்லை. அவ்வளவு ஏன், தலைப்புகளைப் பதிவு செய்யும் சின்ன விஷயத்தில்கூட அன்று தயாரிப்பாளர் சங்கத்துடன் இணக்கமான அனுகுமுறையைக் கடைப்பிடித்த பிலிம் சேம்பர் இன்று சில்லறைத்தனமாக நடந்துகொள்கிறது. நானே அதில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நண்பர் கமல் நடித்துவரும் உத்தம வில்லன் என்ற படத்தின் தலைப்பை முறைப்படி முதலில் பதிவுசெய்தவன் நான்தான். ஆனால் அந்தத் தலைப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளாமல் பிலிம் செம்பரில் அனுமதி கொடுத்து விட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கென்று தனியாகத் தமிழ் பிலிம் சேம்பர் தொடங்குவது இனி தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்களா? அல்லது சவுத் இந்தியன் பிலிம் சேம்பரையே தமிழ் பிலிம் சேம்பராக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

தென் மாநிலங்கள் அனைத்திலும் திரைப்படத் துறை வளர்ந்த பிறகு தனித்தனியாக பிலிம் சேம்பர்கள் தொடங்கப்பட்டுவிட்டன. அவை அந்தந்த மாநில சினிமா வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. இப்படியிருக்கும் சூழ்நிலையில் சவுத் இந்தியன் பிலிம் சேம்பர் முதலில் திருந்த வேண்டும். அது தயாரிப்பாளர்களையும் திரைப்படத் தொழிலையும் காக்கும் அமைப்பாக மாற வேண்டும். அதனால் அது ஒரு ஃபெடரல் அமைப்பாக மாறுவதுதான் சரியாக இருக்கும். மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டுக்கென்று தனியாக பிலிம் சேம்பர் தேவை என்பதை உணர்ந்துதான் மொத்த தமிழ்த் திரையுலகையும் 1988-ல் திரட்டி கடற்கரையில் மாநாடு நடத்தினேன். அப்போதே தமிழ் பிலிம் சேம்பர் அமைந்திருக்க வேண்டியது. ஆனால் இனியும் பின்தங்கியிருக்க முடியாது.

அடுத்த வார இந்து டாக்கீஸில்…

பி லிம் சேம்பர் பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இரண்டு அணிகளாகச் செயல்படுவது ஏன்? கலைப்புலி எஸ். தாணு துப்பாக்கி படத்திற்கு நடிகர் விஜயின் கால்ஷீட் பெறுவதற்காகத் தயாரிப்பாளர் சங்கப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தினாரா? எஸ்.ஏ. சந்திரசேகரன் தன்னைத் தானே தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அறிவித்துக்கொண்டது ஏன்? ஃபெப்சி தொழிலாளர் சம்பளப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது ஏன்? தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு கேயார் அளித்த சூடான பதில்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x