Published : 06 Jun 2014 01:26 PM
Last Updated : 06 Jun 2014 01:26 PM

வாழ்க்கையை மாற்றும் விண்கல்: இயக்குநர் ஆனந்த்

கட்டிடக் கலை பட்டப் படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கிவிட்டு, விண்கல் பின்னணியில் 'அப்புச்சி கிராமம்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த். படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...

இது கிராமத்துக் கதையா அல்லது அறிவியல் கதையா?

கிராமத்துக் கதை. அதன் பின்னணியில் ஒரு அறிவியல் சம்பவம் நடக்குது. அது எப்படி அவங்க வாழ்க்கையைத் திசை மாற்றுதுன்னு சொல்லியிருக்கேன். ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துட்டு இருக்கு, அது தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் விழுந்துடும்னு சொல்றாங்க. இந்தச் செய்தி இந்தக் கிராமத்தையும் சென்றடைகிறது. கிராமத்து மக்கள் இந்தச் செய்தியை முதல் தடவை கேட்கும்போது அலட்சியமா எடுத்துக்கிறாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சில சம்பவங்களால பயம் வர ஆரம்பிக்கிறது. ஒரு வேளை விண்கல் நம்ம கிராமத்துல விழுந்துட்டா, நாம என்ன ஆவோம்னு பயம் வரும்போது ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. குடும்பக் கதை, காதல் கதை இப்படிப் பல கதைகள் படத்துல இருக்கு. சின்ன சின்ன சவால்கள் இருக்கு. அவங்களோட பிரச்சினையை இந்த விண்கல் சம்பவம் எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை

ஒரு விண்கல் பின்னணியில் கதை பண்ணுவதற்கு என்ன காரணம்?

ஒருத்தனுக்கு 8 நாள்ல சாகப் போறோம்னு தெரியும்போது, அந்த 8 நாள்ல என்ன எல்லாம் பண்ணுவான் அப்படிங்கிறதை வைத்துதான் கதை எழுத ஆரம்பித்தேன். வாழ்க்கை கண் இமைக்கிற நேரத்துல முடியப் போகுதுனு தெரியும்போது சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் நேரத்தை வீணடிக்காமல் மிச்சம் இருக்கிற நேரத்தை எப்படி நல்ல விதமா உபயோகிக்கணும்னு எந்த ஒரு மனுஷனுக்கும் தோணும். அது எப்படிப்பட்டவரையும் மிச்சம் இருக்கிற நாட்கள்ல தப்பான வழியில் போக வைக்காது. பண்ணின தப்புக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடுறது எப்படின்னுதான் யோசிப்பாங்க. ஏதாவது நல்ல விஷயம் பண்ணனும்னு தோணும். இதுதான் படத்துல முக்கிய கோட்பாடா இருக்கும். இந்தக் கதையைச் சொல்ல விண்கல் பயன்பட்டதே தவிர, விண்கல்லை வச்சி ஒரு படம் பண்ணனும்னு நான் பண்ணல. இப்படி ஒரு கதையைக் கிராமத்துக் களத்துல பண்ணினா இன்னும் சுவாரசியமா இருக்கும்னு நினைச்சேன். விண்கல்லை வெச்சி நகரத்துல எட்டு கதை காண்பிக்கலாம். ஆனா நகரத்துல ரொம்ப பதற்றமான ஒரு வாழ்க்கை, பல்வேறு தரப்பட்ட மக்கள்னு வரும்போது ஒரு திருப்தி தராது. அதுவே கிராமமா இருந்தா நிலைமையே வேற. அவங்களுக்கும் அறிவியல் சம்பவம்கிறது புதுசா இருக்கும்.

முதல் படத்திலேயே இந்த மாதிரி கதையை எடுத்துருக்கீங்களே?

96-ல ஒரு செய்தி படித்தேன். உலகம் அழியப் போகுதுங்கிற நம்பிக்கையில் ஒரு கிராமத்துல இருக்கிற எல்லாரும் ஒரு நாள் இரவு முழுவதும் மது குடித்து மகிழ்ச்சியா ஒண்ணா இருந்திருக்காங்க. ஆனா, அடுத்த நாள் உலகம் அழியல. ஆனால், அவங்களோட ஒரு நாள் சந்தோஷம் எப்படி இருந்திருக்கும்? அந்தச் செய்திதான் எனக்கு இந்தக் கதையை எழுத உதவியா இருந்துச்சு.

டிரெய்லர்ல பார்த்தா காமெடி தூக்கலா இருக்கே?

இந்தப் படத்தோட மெயின் ப்ளஸ்ஸே நகைச்சுவை கலந்த படமா இருக்கிறதுதான். இது இல்லாம காதல் கதையும் இருக்கு. எதார்த்தமான ஒரு கிராமத்துல, எல்லாப் பாத்திரங்களையும் வைச்சு எவ்வளவு சுவாரசியமா காட்ட முடியும்னு யோசிச்சு பண்ணியிருக்கோம். ‘பம்பாய்' படத்துக்கு பிறகு நாசர் சார், கிட்டி சார் இரண்டு பேருமே சேர்ந்து நடிச்சிருக்காங்க.

சினிமாக்குள்ள நுழைந்ததைப் பற்றி சொல்லுங்க?

கட்டிடக் கலை முடிச்சு பயிற்சி பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்திலதான் இயக்குநர் ஹோசிமின் நட்பு கிடைத்தது. அவர்தான் முதல் முதலா என்னை துணை இயக்குநரா சேர்த்துக்கிட்டாரு. அப்புறம் பிரதாப் போத்தன் சார்கிட்ட விளம்பரத் துறையில் மூணு வருஷமா வேலை பார்த்தேன். ‘கஜினி' இந்தில பண்றோம், இந்தில திரைக்கதை என்ன பண்ணினா சுவாரசியமா இருக்கும்னு எனக்கு ஒரு டெஸ்ட் வைச்சாங்க. என்னோட மாற்றங்களைச் சொன்ன உடனே, கண்ணோட்டம் வித்தியாசமா இருக்குனு ஏ.ஆர். முருகதாஸ் வேலை பார்க்க சொன்னாரு. அந்த நேரத்துல ‘ஸ்டாலின்' பண்ண ஆரம்பிச்சார் முருகதாஸ். அப்பவே ‘துப்பாக்கி' படத்திற்கான கதையைத் தொடங்கிட்டோம். அதுக்கு அப்புறமா வெளியே வந்து முயற்சி பண்ணினேன்.

உங்களோட கட்டிடக் கலை, விளம்பரத் துறை அனுபவங்கள் சினிமாவுக்கு எந்த அளவிற்கு உதவியா இருந்துச்சு?

கட்டிடக் கலை ரொம்பவே உதவியா இருக்கு. அடித்தளத்தில் இருந்து ஒரு பெரிய கட்டிடத்தை எப்படி உருவாக்குவது அப்படினு மட்டும் அவங்க சொல்லித் தரலை. கலர், செட் வேலைகள், எதை முதலில் உருவாக்கணும், இப்படி நிறைய வேலைகள் கட்டிடக் கலை சொல்லிக் கொடுத்த விஷயம். அது எனக்கு சினிமா பண்ணும்போது, ஆர்ட் டைரக்டர் கூட பேசுறப்போ உதவியா இருந்தது. கட்டிடக் கலை படிக்கலைன்னா எனக்கு இதெல்லாம் தெரியாது. நிறைய கட்டிடக் கலை நிபுணர்கள், ஆர்ட் டைரக்டர் கிட்டதான் உதவியாளரா இருக்காங்க.

30 நொடி விளம்பரமோ, 20 நிமிடங்கள் கார்ப்பரேட் படமோ எடுக்கிறப்போ ஸ்டோரி போர்ட் வரையிறதுல ஆரம்பிக்கும். முன் தயாரிப்புப் பணிகள்ல ஆரம்பிச்சு போஸ்ட் புரடெக்‌ஷன் வரைக்கும் சினிமாலயும் அதுதான். இப்படி விளம்பரத் துறையில் இருந்து நிறைய கத்துக்கிட்டேன்னு சொல்லலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x