Last Updated : 11 Nov, 2016 11:57 AM

 

Published : 11 Nov 2016 11:57 AM
Last Updated : 11 Nov 2016 11:57 AM

மொழி கடந்த ரசனை 9: அதுவும் ஒரு தீபாவளி

எத்தனை நூறு படங்களுக்கு மத்தியிலும் தமிழர்கள் மனங்களில் கல்வெட்டாய் பதிந்த சில படங்கள் உண்டு. அவற்றில் ‘கல்யாணப் பரிசு’ ஒன்று. கால ஓட்டத்துக்கு மாற்றான கதையும் காலத்தால் அழியாத பாடல் வரிகளும் எப்போதும் சலிக்காத பின்னணிக் குரலும் இனிமையான இசையும் மிகச் சிறந்த இயக்கமும் கொண்டதாக விளங்கியது அந்தப் படம். அதை இயக்கிய ஸ்ரீதரே இந்தியிலும் இயக்கினார். கதை, நடிகர், நடிகை, இசை ஆகிய அனைத்தையும் விட, படத்தின் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எளிய, எழிலான, மனதைத் தொடும் பாடல் வரிகளின் கருத்தையும் உணர்வையும் இந்திப் படத்தில் கொண்டுவருவது இயக்குநருக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கியது.

‘உன்னைக் கண்டு நான் வாட’ என்ற சோகம் இழைந்தோடும் நினைவேக்கத்தையும், ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி / காளை ஒருவன்’ என்ற கைகூடாத காதல் தந்த விரக்தி உணர்வையும் பாமர மொழியில் நம் நெஞ்சில் பதித்தார் பட்டுக் கோட்டையார். அவரது கவித்திறனையும் மொழி ஆளுமையையும் இந்தி மொழிப் பாடலுக்குள் கொண்டுவருவது எளிதான முயற்சி அல்ல. இந்த மிகக் கடினமான பரீட்சையில் முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும் இந்தி மறுஆக்கத்தின் பாடல்களை எழுதிய ராஜேந்திர கிஷன், முக்கால் கிணறு தாண்டிவிட்டார் எனச் சொல்லலாம். அந்தப் படம் ‘நஜ்ரானா’ (பரிசு / வெகுமதி).

‘உன்னைக் கண்டு நான் வாட’ என்று ஜெமினி கணேசன் திரையில் பாடிய பட்டுக்கோட்டையின் வரிகள், இந்தியில் ராஜ்கபூரின் சோக நடிப்பில் ராஜேந்திர கிஷன் எழுதிய ‘ ஏக் வோ பீ தீவாலி தீ ஏக யே பீ தீவாலி ஹை’என்ற பாடலில் இவ்வாறு எதிரொலித்தது.

அதுவும் ஒரு தீபாவளி, இதுவும் ஒரு தீபாவளி,

அழிந்துவிட்ட தோட்டம், அழுகையில் தோட்டக்காரன்.

வெளியே தீபங்களின் ஒளி, ஆனால் உள்ளத்தில் இருள்

துன்பங்களைக் கொண்டுவரும் விடியலின் முன் வந்த

(இந்த இரவை) இனிமை தீபாவளி இரவாக எண்ணாதே.

எந்தத் தீபத்தை ஏற்றுவேன், என் கருமை படிந்த

இந்தத் தலையெழுத்தை மாற்ற? எவருடைய இதய தீபமும் இப்படி அணைந்திருக்காது. பயணத்தின் பாதியில் பறிகொடுத்த வழிப்போக்கனானேன்.

தமிழ்ப் படத்தின் வெற்றிக் கதாநாயகன் ஜெமினி கணேசன் கவுரவ வேடத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி நடித்த இந்த இந்திப் படத்தின் இசை அமைப்பாளர் ரவி என்று இந்தித் திரை உலகிலும் ‘பாம்பே ரவி’ என்று மலையாளத் திரை உலகிலும் புகழ் பெற்ற ரவி ஷங்கர் சர்மா. நம் எம்.எஸ். விஸ்வநாதன் போலவே, முத்தான பல பாடல்களைத் தந்த இந்த முன்னாள் மின்சாரப் பணியாளர், பனி பொழியும் மும்பை வெட்ட வெளி இரவுகளில் படுத்துறங்கியவர்.

‘கல்யாணப் பரிசு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ என்ற பாடலுக்கு இணையான பாடலை இந்தியில் முகமது ரஃபி பாடினார். தமிழ்ப் பாடலைப் பாடிய ஏ.எம். ராஜாவின் மானசீக குருவாகக் கருதப்பட்டவர் ரஃபி. தென்னாட்டிலிருந்து சென்று முதன்முதலாக இந்திப் படங்களில் பின்னணி பாடியவர் என்ற பெருமைக்கு உரிய ராஜா, ‘தென்னாட்டு ரஃபி’ என்று அழைக்கப்பட்டர். சீடனின் பாடலை குரு பாடிப் புகழ் பெற்ற அந்தப் பாடல், ‘ஏக் பியாசா துஜே மைக்கானா தியே ஜாத்தா ஹை, ஜாத்தே ஜாத்தே பீ யே நஜரானா தியே ஜாத்தா ஹை’ எனத் தொடங்குகிறது.

அதன் பொருள்:

வேட்கையுடைய ஒருவன் தரும் மதுக்கூடம் இது.

வெகுமதியாய் போகும் பொழுது தரும் பரிசு இது

காதல் சூதில் வெற்றியோ தோல்வியோ (எது அடைந்தாலும்)

எப்படிக் கழிக்க முடிந்ததோ அப்படிக் கழிந்தது துன்ப இரவு

நிறைவேறாத என் ஆசைகளைச் சுவராகக் கொண்ட படகை

நிம்மதியாக இறக்கிவிட்டாள் துன்பச் சுழல்கள் மிகு கடலில்

பயணம் தொடங்கிவிட்டது. பார்த்து என்ன பயன்

திரும்பி உலகத்தார்க்கு என்ன உரைப்பார்

இதையேதான் எப்பொழுதும்

காதல் சூதில் வெற்றியோ தோல்வியோ (எது அடைந்தாலும்)

எப்படிக் கழிக்க முடிந்ததோ அப்படிக் கழிந்தது துன்ப இரவு.

தமிழ்ப் பாடலில்…

ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாள்

அல்லும் பகல் காத்திருந்து பயிர் வளர்த்தாள்

பாசத்திலே பலனைப் பறிகொடுத்தாள்

கனிந்தும் கனியாத உருவெடுத்தாள்

என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டையாரின் பட்டு வரிகளை, இந்தி கஜலில் பழம் தின்று கொட்டைபோட்ட ராஜேந்திர கிஷனாலும் முழுமையாகக் கொண்டுவர முடியவில்லை.

நிறைவேறாத (என்) ஆசைகளைச் சுவராகக் கொண்ட படகை

நிம்மதியாக இறக்கிவிட்டாள் துன்பச் சுழல்கள் மிகு கடலில்

பயணம் தொடங்கிவிட்டது பார்த்து என்ன பயன் திரும்ப

என்ற அளவுக்குத்தான் சொல்ல முடிந்தது என்பது மக்கள் கவிஞருக்கு என்றும் புகழ் சேர்க்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x