Last Updated : 19 May, 2017 10:33 AM

 

Published : 19 May 2017 10:33 AM
Last Updated : 19 May 2017 10:33 AM

மொழி கடந்த ரசனை 32: உன்னை எங்கு அழைத்துச் செல்ல?

இந்தியா முழுவதும் வெளியாகிப் பெரும் வெற்றியடையும் பல இந்தித் திரைப்படங்களைப் பற்றிய ஒரு அடிப்படை உண்மை சுவையானது. அவற்றின் திரைக்கதை பெரும்பாலும் வங்காளம், தெலுங்கு, தமிழ், மராட்டி போன்ற இந்தி அல்லாத மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்லது நாடகங்களைச் சார்ந்தே அமைந்திருக்கும். இந்த வரிசையில் வங்காளத்துக்கு அடுத்தபடியாக விளங்குகிறது தெலுங்குப் படவுலகம். ‘மூக மனசுலு’ (ஊமை மனம்) என்ற தெலுங்குப் படம் 1964-ல் வந்தது. மறுபிறப்புக் கருத்தை மையமாகக் கொண்டு, நாகேஸ்வர ராவ், சாவித்திரி, ஜமுனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இந்த வெற்றிப்படமே பின்னர் 1967-ல் தெலுங்குப் படத்தின் இயக்குநரான அடுருத்தி சுப்பா ராவ் இயக்கத்தில் ‘மிலன்’ (சந்திப்பு) என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது.

சென்ற பகுதியில் நாம் கண்ட சசிகுமாரின் வெகுளியான தோற்றத்திற்கு முற்றிலும் மாறான முரட்டுத் தோற்றத்தில், ஆனால் அதே பாமரத்தன்மையுடன் கூடிய உடல் மொழியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் சுனில் தத், கே.ஆர். விஜயாவின் முகவெட்டும் சாவித்திரியின் அசாத்திய நடிப்புத் திறனும் இணைந்த நூதன், தெலுங்கு மொழிப் படத்தில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்த ஜமுனா ஆகியோரின் பங்களிப்பில் உருவான படம் இது. இதன் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு முக்கியக் காரணம் பாடல் ஆசிரியர் ஆனந்த் பக்ஷியா, இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த் பியாரிலாலா அல்லது பாடல்களை உணர்வு சிதையாமல் பாடிய முகேஷ், லதா மங்கேஷ்கர் ஜோடியா என்பது இன்றும் விடை காணாத இயலாத கேள்வி.

கங்கையில் படகு சவாரி செய்யும் தேன் நிலவுப் பயணத்தில் மணமகனுக்கு ஏற்படும் மனக்குழப்பம் அவர்களை ஒரு வயோதிகப் பெண்மணியிடம் இட்டுச் செல்கிறது. சென்ற பிறவியில் படகோட்டியாக இருந்த நாயகனின் காதல் கதையை, பிளாஷ்-பேக் உத்தியில் வெளிப்படுத்துகிறது இப்படம். மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலிக்காத முகேஷ்-லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா, பவன் கரே சோர், ஜியாரா ரே ஜூமே ஜைஸ்ஸே, பன் மே நாச்சே மோர்’ என்ற பாடல், மொழி, பொருள் கடந்த உணர்வின் அழகான வெளிப்பாடாகத் திகழ்கிறது.

கல்லூரிக்கு தினமும் சென்று வரும்போது பழக்கமான படகோட்டி, கல்லூரிப் பாட்டுப் போட்டிக்காக நாயகிக்குக் கற்றுக்கொடுக்கும் பாடலாக அமைந்த இப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் உச்சரிப்பு வேறுபாடு அடிப்படையில் பல பொருள் தரும் விதம் எழுதப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்.

படகோட்டி:

கார் மாதம் காற்றைப் போல

கங்கையின் முதலைகள் ஆர்பரிக்கும்

இந்தப் பருவத்தில்

கானகத்தில் நடனமிடும் மயில்போலக்

காதலர்கள் ஆடி மகிழும் பருவம் இது.

ராமன் தரும் இந்தக் கீழைக் காற்று அற்புதம்

நாயகி:

படகைச் சமாளி, படகோட்டியே பார் பாய்மரத்தை

படகோட்டி:

கீழைக் காற்றுக்கு எதிரே எதுவும் நடக்காது

நாயகி:

படகோட்டிக்குத் தெரியுமா நான் காட்டும் பார்வை

படகோட்டி:

உன்னை எங்கு அழைத்துச் செல்ல எனக் கேட்கிறது நதி அலை

நாயகி:

எங்கு விருப்பமோ அங்கு என்னை அழைத்துச் செல்.

சரணம்:

எவளுடைய காதலன் அன்னியன் ஆகிவிட்டானோ

அவனுக்குக் கொணர்ந்தேன் அன்பின் செய்தியை

கருமையான இந்த இடி மேகங்கள்

அருமையாக வனத்தில் ஆடும் மயில் போல.

படகோட்டியிடம் கற்றுக்கொண்ட இப்பாடலின் சரணமாக அமைந்த வரிகள் இவை. பின்னர் நாயகி கல்லூரி விழாவில் மேடையில் பாடும் வரிகள் இடையில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளக்கமாக அமைந்தவை. இவ்வரிகள் அவளின் மனதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருப்பதால் ஒரே பாடலாகக் கேட்கும்பொழுது சற்று வித்தியாசமாகத் தோன்றும்.

உச்சரிப்புக்குப் புகழ்பெற்ற முகேஷ் பாடிய பாடலின் தொடக்கத்தில் வரும் ‘சோர்’ என்ற சொல்லை நாயகி ‘ஷோர்’ என்று உச்சரிப்பார். பின்பு சுனில் தத், “அரே பாபா ஷோர் நஹின், சோர்.. சோர், தோர் என்று திருத்துவது மிகவும் புகழ் பெற்றது. ‘சோர்’ என்றால் முதலை, ‘ஷோர்’ என்றால் சத்தம், இரைச்சல். ‘தோர்’ என்றால் இடி.

பின்னர், ‘பிராப்தம்’என்ற பெயரில், சிவாஜி கணேசன் சாவித்திரி நடிப்பில் வெளிவந்த இப்படம் தமிழில் தோல்வி அடைந்தது. ஆனால் இப்படத்தில் ‘சந்தனத்தின் நல்ல வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்றல் காத்து,’ என்ற புகழ் பெற்ற பாடலிலும், ‘காத்து இல்லை, காற்று’ என்று திருத்தும் உத்தியும் தக்கவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x