Last Updated : 14 Apr, 2017 01:07 AM

 

Published : 14 Apr 2017 01:07 AM
Last Updated : 14 Apr 2017 01:07 AM

மொழி கடந்த ரசனை 29: எப்படிச் சமாளிப்பேன் உன் விழிகளை?

உயிருக்கு நிகராக, ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் உண்மைக் காதலில், காதலன், காதலி ஆகிய இருவருக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. எனினும் அதை வெளிப்படுத்தும் தன்மையிலும் அளவிலும், ஆண்,பெண்ணிடையே உள்ள பெரும் இடைவெளியின் அடிப்படைக் காரணம், நம் சமூக, பண்பாட்டு விழுமியங்களைச் சார்ந்தது.

‘இந்த உலகமே எதிர்ப்பினும் உன்னைக் கைவிட மாட்டேன், உன் செல்வம், குடும்பம் அனைத்தையும் நம் காதலுக்காகத் துறந்துவிட்டு என்னோடு வா, நான் பார்த்துக்கொள்கிறேன், அந்த அளவுக்கு உன்னைக் காதலிக்கிறேன்’ என்றெல்லாம் காதலன் கூறுவது போன்று காதலி, இங்கு கூற இயலுவதில்லை.

திரை தாண்டிய இந்த வாழ்வின் யதார்த்தத்தை ராஜா மெஹதி அலி கானின் பாடல், எளிய வரிகளில், மனதை வருடும் மென்மையான மதன்மோகன் இசை அமைப்பில் அழகாக வெளிப்படுத்துகிறது. ‘ஆப் கீ பர்ச்சாயியான்’(உங்களுடைய நிழல்) என்ற படத்தின் ‘அகர் முஜ் ஸே முகபத் ஹை’முஜ்ஜே ஸப் அப்னே கம் தே தோ’ என்று தொடங்கும் இப்பாடல் லதா மங்கேஷ்கரின் அமரத்துவமான பாடல்களில் ஒன்று.

‘ஆலயமணி’ திரைப்படத்துக்காகக் கண்ணதாசன் எழுதிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’என்று தொடங்கும் பாடலின், “அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையாக” என்ற ஆழமான கவித்துவ வரிகளை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ள இந்த இந்திப் பாடலின் பொருள்:

என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்
உன் துன்பம் அனைத்தையும் என்னிடம் தந்துவிடு
இந்த விழிகளின் ஒவ்வொரு
சொட்டுக் கண்ணீரையும் என்னிடம் தந்துவிடு
உன் மீது சத்தியம்
உன்னுடைய துக்கத்தை என் துக்கமாக மாற்றினால்
என் உள்ளத்தில் அமைதி ஏற்படும்.
உன்னுடைய இதய வலிகளை
என் நெஞ்சில் மறைத்துக்கொள்ள உடன்பட்டால் அமைதி ஏற்படும்.
துன்பத்தைத் தரும் அந்த ஒவ்வொரு துகள்களையும்
அன்பே எனக்கு நீ அளித்துவிடு
என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்.
உன் வாழ்க்கை ஊர்தியாக இருக்கும் துக்கங்களை
என் துன்பங்களின் வாகனமாக மாற்றிக்கொள்ளேன்
துக்கங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டு
அதை ஏன் குறைத்துக்கொள்ள மறுக்கிறாய்
தடுமாறும் உன் உள்ளத்தைக்
கொஞ்சம் எனக்குத் தா
என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்.
விழிகள் விடும் கண்ணீரை ஒருபோதும் மறைக்காதே
இந்தக் கண்களிலும் முகத்திலும்
இனிமையும் மகிழ்ச்சியும்
எப்பொழுதும் இருக்க வேண்டும்
உன் துக்கப் பெருமூச்சையும் துன்ப உலகையும்
என்னிடம் தந்துவிடு அன்பே உன் மீது சத்தியம்
என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்.

இந்தப் பாடலுக்கு நிகரான கழிவிரக்கமும் தியாக உணர்வும் ததும்பும் வேறொரு பாடலை எந்த மொழியிலும் எடுத்துக் காட்டிவிட முடியும் என்று தோன்றவில்லை. ‘ஆப் கீ பர்ச்சாயியான்’படத்தின், ‘மே நிஹாகேன் தேரே சஹேரே ஸே ஹட்டாவும் கைஸே’ என்று தொடங்கும் மற்றொரு பாடலும் இதே அளவு போற்றப்படும் இன்னொரு உணர்வை வெளிப்படுத்தும் பாடல். ‘அன்பே, ஆருயிரே, சந்திரன் போல் இருக்கிறாய்’ என்பது போன்ற வழக்கமான காதல் நிரம்பிய சொற்களைத் தவிர்த்துவிட்டு எழுதப்பட்டுள்ள பாடல் இது. ‘கஜல்’பாடுவதில் ஈடு இணையற்ற முகமது ரஃபியின் மென் குரலில் இன்றும் ஒளிரும் முத்தான கஜலாக மிளிர்கிறது.

இதன் பொருள்:

எப்படி அகற்றுவேன் என் பார்வையை
உன் எழில் முகத்திலிருந்து?
அதனால் நினைவிழந்துவிட்டேன்
எப்படி மீண்டும் இழந்த நினைவை அடைவேன்?
நிழலாய் முகத்தில் படிந்தது உன் நீண்ட கூந்தல்
கழலாய்ப் பெருகும் உன் கண்களின் மதுவை
மெதுவாய்க் குடித்து, மெதுவாய்க் குடித்து
நான் அடைந்த மயக்கத்தை ஐயோ
எப்படிச் சொல்வேன்?
அழகான உன் விழிகள் காட்டும்
அந்தக் குறும்பால் என் பார்வை
வீரியமிழந்து விடாது
உன் கண்ணை விட்டு விலகாது எங்கும்
அங்கும் இங்கும் அகலாது எப்படியோ, எப்படியோ,
உன்னைச் சமாளித்துவிடுவேன்
எப்படிச் சமாளிப்பேன் உன் விழிகளை?
நான் அறியேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x