Published : 19 Aug 2016 11:10 AM
Last Updated : 19 Aug 2016 11:10 AM

முன்பை விட இப்போது வேலை அதிகம்!- பி.சி. ஸ்ரீராம் சிறப்பு பேட்டி

உலக புகைப்பட தினம் இன்று

தமிழ்த் திரையுலகில் பி.சி. ஸ்ரீராமின் வருகைக்குப் பிறகே ஒளிப்பதிவாளர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. அவருடைய சீடர்கள் பலரும் இன்று இந்தியத் திரையுலகம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். எனினும், தன்னை ஒரு வளரும் கலைஞன் என்றே அவர் சொல்லிக்கொள்கிறார். திரைப்பட ஒளிப்பதிவு மட்டுமல்லாமல் பி.சி.

ஸ்ரீராம் எடுத்த ஒளிப்படங்களும் மிகவும் முக்கியமானவை. ஒளிப்பதிவு, தமிழ் சினிமாவின் இன்றைய போக்கு போன்றவற்றைப் பற்றி அவர் பேசியதிலிருந்து…

இன்று ‘உலகப் புகைப்பட தினம்’. நீங்கள் கூற விரும்புவது என்ன?

4 வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். ஏன் என்று நான் எனக் கேட்டதற்கு அன்றுதான் ‘உலகப் புகைப்பட தினம்’ என்றார்கள். அப்போதுதான் எனக்கு அப்படி ஒரு தினம் இருக்கிறது என்றே தெரியும். சமீப காலமாகத் தொழில்நுட்ப வளர்ச்சியால்தான் புகைப்பட தினம் என்பது கொண்டாப்பட்டுவருகிறது.

எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். இன்று புகைப்படக் கண்காட்சி நிறைய நடக்கிறது. அதில் வித்தியாசமான புகைப்படங்களைப் பார்த்து இளைஞர்களும் அதே போல் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுப் புது விஷயங்கள் நிறைய வந்துகொண்டே இருப்பதால் ஒரு இடத்தில் நம்மால் நிற்க முடியவில்லை. தொடர்ச்சியாகப் புது விஷயங்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதிருக்கிறது.

இப்போது கேமராக்கள் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டன அல்லவா...

எல்லா வளர்ச்சியுமே ஆரம்ப காலத்தில் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும். இன்று அனைத்து இளைஞர்கள் கையிலும் கேமரா இருக்கிறது. அவர்களுக்கென்று தனியாக ஒரு பார்வை இருக்கிறது. அதுதான் உலக மாற்றம். முன்பு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் ஸ்டூடியோவுக்குச் சென்று, லைட் எல்லாம் மாட்டியிருக்கும்; அதனிடையே நின்று எடுக்க வேண்டும். இன்று அப்படியா இருக்கிறது? நாமே செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். நம்மை நாமே பதிவு செய்துகொள்ளும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. தற்போது நீங்கள் எடுக்கும் ஒரு புகைப்படம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் அது ஒரு நல்ல புகைப்படமாக இருந்தால் மட்டுமே முடியும். ஆக, தற்போது எல்லோருடைய கையிலும் கேமரா இருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே ஒளிப்பதிவுத் துறையைத் தங்கள் துறையாகத் தேர்வுசெய்கிறார்கள்.

தற்போது திரையுலகில் அதிக அளவிலான ஒளிப்பதிவாளர்கள் இருந்தாலும் ஒன்றிரண்டு படங்களைத் தாண்டிப் பலரும் ஜொலிப்பதில்லையே…

ஒளிப்பதிவுத் துறை என்று மட்டுமல்ல, அனைத்துத் துறையிலுமே நிறைய பேர் இருக்கிறார்கள். ஒளிப்பதிவுத் துறை என்று தேர்வு செய்யும்போது அதில் சினிமா, ஆவணப்படம், குறும்படம் என நிறைய துறைகள் இருக்கின்றன. முன்பு ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர்கள் சினிமாவுக்கு வர மாட்டார்கள். இன்று சினிமாவுக்கு ஒளிப்பதிவு செய்பவர்களே ஆவணப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்கள். நீங்கள் ஒளிப்பதிவு செய்வதில் எது படைப்பாகிறது என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.

ஒரு காட்சியை ஒளிப்பதிவு செய்தவுடன் முன்பு திரையில்தான் காண முடியும். இன்று படப்பிடிப்பிலேயே எப்படி வந்திருக்கிறது என்பதை அங்கிருக்கும் மானிட்டரில் பார்த்துக்கொள்ள முடியும். இந்த வளர்ச்சியைப் பற்றி…

முன்பை விட வேலை அதிகம் என்றுதான் சொல்வேன். இன்று அனைத்துமே சபைக்கு வந்துவிடுகிறது. அதனால் கூடுதல் ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டியதிருக்கிறது. அப்போதைய காலகட்டத்தை விட, நம்மை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போதுதான் மேலோங்கியிருக்கிறது. இதையும் அடுத்த கட்ட வளர்ச்சியாகத்தான் பார்க்கிறேன்.

முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வந்தாலும், 2007-ம் ஆண்டில்தான் இந்திப் படத்துக்கு முதன்முதலில் ஒளிப்பதிவு செய்தீர்கள். என்ன காரணம்?

நான் இந்திப் படங்களே ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு இந்தி தெரியாது. ஒளிப்பதிவாளருக்கு மொழி அவசியமில்லை என்பது உண்மைதான். ஆனால், நாம் வேலை பார்க்கக்கூடிய படத்தின் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொன்னது. எனக்கு வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. அது மட்டுமன்றி, தமிழிலேயே நான் வெவ்வேறு வித்தியாசமான படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

இயக்குநர் பால்கி எனது நீண்ட கால நண்பர். கர்நாடகத்தில் பிறந்த தமிழர், இளையராஜா ரசிகர் வேறு. அவருக்குத் தமிழ் தெரியும் என்பதால், ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்வேன். ஒரு காட்சியில் இருவர் பேசிக்கொள்ளும்போது அதில் ஒளிப்பதிவாளர் லயித்திருந்தால்தான் ஒளிக்கு அர்த்தம் இருக்கும். அதனால் எனக்கு மொழி முக்கியமாகிவிடுகிறது. எனக்கு இந்தி தெரியாது என்றாலும் அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்று தெரிந்துவிடும்.

விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்துக் காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தீர்களே…

சில விஷயங்கள் கிடைக்கும் என்று நம்பும்போது கிடைக்கவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் அது. அது எனக்குள்ள கருத்து சுதந்திரம். எல்லாவற்றுக்கும் தகுதியான மனிதராக விக்ரம் அந்தப் படத்தில் இருந்தார். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் எனத் தோன்றியது. இந்திய சினிமாவில் இவ்வாறு நடப்பது சகஜம்தான். விக்ரம், உண்மையில் விருதுகளையெல்லாம் தாண்டிச் சென்றுவிட்டார்.

கன்னடம், மலையாளத்தில் வித்தியாசமான களங்களில் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழில்… (கேள்வியை முடிக்கும் முன்பே)

தமிழ் சினிமாவிலும் ‘ஆடுகளம்', ‘ஜிகர்தண்டா', ‘விசாரணை', ‘உறியடி' எனப் பல படங்கள் இருக்கின்றன. கன்னடம், மலையாளத்திலெல்லாம் குறைந்த அளவிலான படங்களே வெளிவருவதால் உடனடியாக வெளியே தெரிகிறது.

இங்கு ஒவ்வொரு வாரமும் நிறைய படங்கள் வருகின்றன. ஒரு படம் மக்களிடையே போய்ச் சேர்ந்து அடுத்த வாரம் மக்கள் திரையரங்கு வருவதற்குள் அடுத்த புதுப் படம் வெளியாகிவிடுகிறது. தமிழகத்தில் நிறைய நல்ல படம் பண்ணுகிறோம். தமிழ் சினிமா தற்போது ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் ஒரு படம் நன்றாக இருந்தால் உடனே விழுந்துவிடுவார்கள்.

ஒரு படம் மக்களிடையே சென்றடைவதற்கு நாமும் நேரம் கொடுக்க வேண்டும். அவசரப்படக் கூடாது. அளவுக்கு அதிகமான அவசரம், பல பேர் கஷ்டப்பட்டு உருவாக்கிய படைப்பை வீணடித்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x