Last Updated : 27 Jun, 2014 11:31 AM

 

Published : 27 Jun 2014 11:31 AM
Last Updated : 27 Jun 2014 11:31 AM

மாற்றுக் களம் : பிறகு

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘A Gentle Creature’ நாவல் மூன்று கலைஞர்களால் திரைப்படமாக்கப் பட்டிருக்கிறது. அதில் ஒன்று ராபர்ட் ப்ரெசன் இயக்கத்தில் வெளியான ‘A Gentle Women’ திரைப்படம்.

அடுத்து மணி கவுல் இயக்கத்தில் இதே நாவல் ‘நசர்’(1991) என்ற தலைப்பில் இந்தித் திரைப்படமாக வெளியானது. ராபர்ட் ப்ரேசனின் கதாநாயகிக்கும், மணி கவுலின் கதாநாயகிக்கும் இடையேயான வேறுபாட்டை நுட்பமாகக் கவனித்தால் இரு வேறுபட்ட கலாச்சார மையத்தையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

தற்போது பிரசன்னா விதானகேவின் இயக்கத்தில் ‘பிறகு’ (With you without you) என்ற தலைப்பில் மீண்டுமொரு முறை உயிர்பெற்றிருக்கிறது தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல். ராபர் ப்ரெசன், மணி கவுல் இருவரின் திரைப்படத்திலும் இல்லாத ஒரு நெருக்கத்தை இந்தத் திரைப்படம் தமிழ்ப் பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாகக் கொடுக்கும். மாபெரும் காதல் காவியமாக விரிந்த நாவலுக்குள், அரசியலை நுட்பமாக உட்புகுத்தி, அதனைத் தன்னுடைய மண் சார்ந்து அடையாளப்படுத்தியிருக்கிறார் விதானகே.

அடகுக்கடை வைத்திருக்கும், சிங்கள இனத்தைச் சேர்ந்த சரத்சிறி, செல்வி என்கிற தமிழ்ப் பெண்ணைக் காதலித்து மணக்கிறார். திருமணத்துக்குப் பிறகு தன்னுடைய கணவன் ஒரு முன்னாள் ராணுவ வீரன் என்கிற உண்மை தெரிந்ததும், இருவருக்கும் இடையே ஏற்படும் உறவுச் சிக்கல்தான் கதை.

தன்னுடைய கணவன் முன்னாள் ராணுவ வீரன் என்பதை செல்வி தெரிந்துகொள்ளும் இடத்தைவிட, அவன் ஏன் ராணுவத்தை விட்டு விலகினான் என்கிற உண்மையைத் தெரிந்துகொள்ளும் இடத்தில் செல்விக்கு ஏற்படும் கொந்தளிப்பும், ஆற்றாமையும் ஒரு போரின் வலியை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது. அரசு இயந்திரத்தின் அசுரத்தனமான செயல்பாடு, ராணுவத்தின் நடவடிக்கை இதெல்லாம் தனிமனித உறவுகளை எவ்விதம் சீரழிக்கின்றன என்பதற்கு இந்தக் காட்சிதான் சான்று.

இந்தத் திரைப்படத்தில் வரும் உடலுறவுக் காட்சி மிக முக்கியமானது. எவ்விதக் கிளுகிளுப்புக்காவும் இல்லாமல், இருவரின் காதலுக்காக சந்தோஷமடையவும், இறுதியில் இருவரின் பிரிவுக்காகத் துக்கமடை வதற்கும் இந்தக் காட்சிதான் காரணமாக இருக்கிறது. இந்த உடலுறவுக் காட்சியும், இறுதியில் செல்விக்கு ஏற்படும் நிலையைப் பதிவு செய்திருக்கும் காட்சியும் படிமங்களால் மட்டுமே உணர்த்தப்பட்டிருக்கின்றன. எந்த இடத்திலும், கழிவிரக்கத்தைக் கோராமல், படைப்பு அதன் படைப்புத் தன்மையையும், கதைத் தன்மையையும் இழக்காமல் பார்வையாளரை வருந்தச் செய்கிறது.

சிங்களப் பேரினத்தின் அடுத்தடுத்த சந்ததிகள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது, அவர்களுக்கு ஏற்படக்கூடிய குற்ற உணர்ச்சியே, இந்தப் படைப்பின் ஆகப்பெரும் வெற்றி. போர்க் காட்சிகள் இல்லை, போர் அரசியல் பற்றிய வசனங்கள் இல்லை. ஆனால் போர் பற்றி, அதன் அரசியல் தன்மை பற்றி, காதலின் வழியே மிக சிறப்பான படிமங்களால் நம்மை அதிரச்செய்கிறது இந்தப் படம். ஒரு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கூட, நகைச்சுவை, கேளிக்கை என சினிமாவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த தமிழ்நாட்டுத் திரைப்படக் கலைஞர்கள் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் வாழும் தமிழர்களின் ரசனையை மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் ரசனையையும் தமிழ் சினிமா பாழ்படுத்தியிருக்கிறது. அதற்கு இந்தப் படத்தின் பின்னணியில் ஒலிக்கும் தமிழ்ப் பாடல்களும், செல்விக்கு மிகப் பிடித்த தமிழ்க் கதாநாயகர் பற்றிய காட்சி களுமே சான்று. தமிழர்களின் வலியைக் கூட, இன்னொரு மொழி பேசும் கலைஞன்தான் பதிவு செய்ய முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x