Published : 13 May 2016 12:17 PM
Last Updated : 13 May 2016 12:17 PM

மறக்கப்பட்ட நடிகர்கள் 5: சூப்பர் ஸ்டார்களின் கதாநாயகி - பி.எஸ்.சரோஜா

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி, சகலகலாவல்லி பானுமதி, நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகையர் திலகம் சாவித்திரி, கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி என்று பத்துக்கும் அதிகமான கதாநாயகிகள் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த 50-களில்தான் பி.எஸ்.சரோஜாவும் பெரும்புகழ் பெற்றார். சேலம்தான் சரோஜா குடும்பத்தின் பூர்வீகம்.

பாடும் திறன், ஆடும் திறன், சர்க்கஸில் பார் விளையாடும் திறன் எனப் பன்முகத் திறமைகொண்ட பி.எஸ். சரோஜா 1929-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பாலசுப்ரமணியம் – ராஜலட்சுமி தம்பதிக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். பத்து மாதக் குழந்தையான சரோஜாவுடன் சென்னை ராயபுரத்தில் குடியேறியது அவரது குடும்பம். சரோஜாவின் தாத்தா தேர்ந்த வயலின் ஆசிரியர்.

அம்மா வாய்ப்பாட்டில் வல்லவர். களைப்புடன் வீடு வரும் கணவருக்காக ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடி அசத்துவாராம். தாத்தாவும் அம்மாவும் தந்த தாக்கம் காரணமாக இசையின்பால் ஈர்க்கப்பட பி.எஸ். சரோஜா, அம்மாவிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார்.

காந்தமாய் இழுத்த சர்க்கஸ்

பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட சரோஜா, ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் பள்ளிக்கூடம். ஒன்பது வயதுச் சிறுமியாக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சர்க்கஸ் அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறது. பள்ளி மைதானத்தில் முகாமிட்டிருந்தது ‘தமிழ்நாடு சர்க்கஸ்’. கேரள, ஒரிய பெண்கள், ஆண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சர்க்கஸ் கம்பெனிகள் புகழ்பெற்றிருந்த அந்தக் காலத்தில், தமிழ்க் கலைஞர்களைக் கொண்டு தமிழ் முதலாளிகளால் தொடங்கப்பட்டிருந்த சர்க்கஸ் கம்பெனி அது. இரவில் வண்ண விளக்குகள் மின்ன பேண்ட் வாத்திய ஒலியுடன் ஈர்த்த சர்க்கஸ் கூடாரம் பகலில் அமைதியாக இருக்கும்.

ஒருநாள் சர்க்கஸ் கூடாரத்தைக் கடந்து பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்த சரோஜா, கூடாரத்தின் உள்ளே “ ஆ...ஊ...” என்று கேட்டுக்கொண்டிருந்த ஒலிகளைக் கேட்டு உள்ளே நுழைந்துவிட்டார். அங்கே சிலம்பம்,

களரி, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் ஈடுப்பட்டிருந்தார்கள் சர்க்கஸ் கலைஞர்கள். அவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவர் சர்க்கஸ் வாத்தியார் டி.எம்.நம. மதியம்வரை பள்ளிக்கூடத்துக்கு மட்டம்போட்டுவிட்டு அங்கே ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்த சரோஜாவை ஒருநாள் கையும் மெய்யுமாகப் பிடித்தார் நாம.

“எவ்வளவு நாட்களாக இந்த வேலையைச் செய்கிறாய்?” என்று வாத்தியார் கேட்க, பயந்து நடுங்காமல் “ஒரு திங்களுக்கு மேல்” என்றார். அத்தோடு நிற்கவில்லை சரோஜா. அவர்கள் முன்னாள் அந்தர்பல்டியடித்துக் காண்பித்தார். அத்தனை சீக்கிரம் கற்றுக்கொள்ளக்கூடிய வித்தை அல்ல அது. ஆச்சரியத்துடன் சிறுமி சரோஜாவை அழைத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்தார் வாத்தியார் நாம “ கண்களால் பார்த்த ஞானத்தில் அந்தர்பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாள் உங்கள் மகள். அவள் இனி என் சிஷ்யப்பிள்ளை” என்றார்.

“ஐயோ இவளது அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார், சர்க்கஸ் வேண்டாம் “ என்று மன்றாடிப்பார்த்தார் அம்மா. ஆனால் பட்டினிகிடந்து சாதித்தார் சரோஜா. அப்பாவுக்குத் தெரியாமல் நாமயிடம் மூன்றே ஆண்டுகளில் முழு வித்தைகளைக் கற்றுக்கொண்ட சரோஜா 12 வயதில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.

ஜெமினியில் தொடங்கிய பயணம்

சர்க்கஸ் கம்பெனி மூடப்பட்டாலும் தனது சிஷ்யப் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து சர்க்கஸ் பயிற்சியளித்துவந்தார் நாமஸ்ரீ. இந்த நேரத்தில் ராயபுரத்தில் ராஜாஜி கலந்துகொண்ட பிரம்மாண்டமான காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கூட்டம் தொடங்கும்முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்துகாட்டச் செய்தார் வாத்தியார். இந்த சாகச நிகழ்ச்சியைக் கண்ட மக்கள் பலத்த ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள்.

ராஜாஜி பேசும்போது சாகச நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ராஜாஜியுடன் வந்திருந்தார் காங்கிரஸ் ஊழியரான தட்சிணாமூர்த்தி. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்த இவர், சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார். பின்னர் மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார். கோரஸ் பாடுவது, நடனமாடுவது, துணைநடிப்பு என எல்லாம் செய்யத் தெரிந்தவர் என்று ஜெமினி ஸ்டுடியோ வட்டாரத்தில் பிரபலமானர் சரோஜா. 1941-ல் வெளியான ‘மதன காமராஜன்' திரைப்படத்தில் குழுநடனம் ஆடியதன் மூலம் திரையில் முதல்முறையாகத் தோன்றினார். ஆனால் துணைநடிகை வேடத்துக்குக்கூட ஜெமினியில் கடும் போட்டி நிலவியதால் ஜெமினியிலிருந்து வெளியேறினார்.

பிறகு ‘ஜுபிடர் நிறுவனத்தில் சேர்ந்த அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு அமைந்தது. ஜுபிடர் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘குபேர குசேலா’வில் (1943) டி.ஏ.ஜெயலட்சுமியுடன் இணைந்து ஆடினார் பி.எஸ். சரோஜா. இந்தப் பாடல் காட்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

காதலும் கதாநாயகி வாய்ப்பும்

ஜுபிடர் நிறுவனம் அடுத்துத் தயாரித்த ‘மகா மாயா’ படத்தில் நடனமாடினார். இந்தப் படத்தின் நடன இயக்குநர் பண்டிட் போலோ நாத் சரோஜாவின் நடனத் திறமையைக் கண்டு அவரை மனம்விட்டுப் பாராட்ட, அவரிடம் மனதைப் பறிகொடுத்தார் பி.எஸ்.சரோஜா. வட இந்தியரான போலோ நாத் பரதக் கலையுடன் மணிபூரி, கதக் போன்ற நடனங்களிலும் விற்பன்னராக இருந்தார். அவற்றைத் தன் காதலியான சரோஜாவுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

தென்னிந்தியப் படங்களில் அந்நாளின் பிரபலமான நடன இயக்குநராகப் பணியாற்றிவந்த அவர், மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'பர்மா ராணி', 'ராஜராஜேஸ்வரி' ஆகிய படங்களில் தனி நடனம் ஆடும் வாய்ப்புகளை சரோஜாவுக்கு பெற்றுத்தந்தார். இவர்களது காதல், திருமணத்தில் முடிந்தது. கலாராணி என்ற முதல் மகள் பிறந்தாள்.

இளம் வயதில் தயாகி, இல்லறத்தில் ஈடுபாடு காட்டிய சரோஜாவுக்கு ‘தமிழ் சினிமாவின் தந்தை’

கே. சுப்பிரமணியம் வழியாக முதல் கதாநாயகி வாய்ப்பு அமைந்தது. பி.யு.சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்த அவரது 'விகடயோகி' திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகு பி.எஸ்.ராமையாவின் ‘தன அமராவதி' திரைப்படத்தில் கதாநாயகன் எஸ்.எம்.குமரேசனுக்கு ஜோடியாகத் தனிக் கதாநாயகியாக நடித்தார்.

‘தன அமராவதி’க்குப் பிறகு பிரபலமான கதாநாயகியாக உயர்ந்தார் சரோஜா. அன்றைய சூப்பர் ஸ்டார் டி.ஆர். மகாலிங்கத்துடன் 'பாரிஜாதம்' படத்தில் நடித்தவர், பின்னாட்களில் சூப்பர் ஸ்டார்களாக உயர்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, மலையாளப் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் திக்குரிசி சுகுமாரன் நாயர் ஆகியோருடன் நடித்துப் புகழ்பெரும் அளவுக்கு உயர்ந்தார். அவரது திரைப்பயணத்தின் நிறைவுப் பகுதியை அடுத்த வாரம் பார்க்கலாம்

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x