Last Updated : 19 Feb, 2016 10:42 AM

 

Published : 19 Feb 2016 10:42 AM
Last Updated : 19 Feb 2016 10:42 AM

மறக்கப்பட்ட நடிகர்கள் 2: முதல் ஆக்‌ஷன் கதாநாயகி! - கே. டி. ருக்மணி

ரசிகர் ஒருவரிடமிருந்து முதல்முதலாக வந்திருந்தது அந்த மடல். அம்மா தனபாக்கியம் கையில் கொடுத்த கடிதத்தை, ஆசையுடன் வாங்கி வாசித்தார் கே.டி. ருக்மணி. மனசெல்லாம் மகிழ்ச்சியின் மலர்த் தோட்டம்!

‘மதிப்பு மிக்க ருக்மணி் அவர்களுக்கு நமஸ்காரம். நான் உங்கள் தீவிர ரசிகன். ‘மேனகா’ படப்பிடிப்பில் உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன். “இதோ பாருங்கள்… மின்னல் கொடி கே.டி. ருக்மணியின் விலைமதிப்பற்ற ஆட்டோகிராஃப்” என்று ஆசையுடன் என் தகப்பனாரிடம் காட்டினேன். அவ்வளவுதான்… “சினிமாக்காரியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்ததோடு, வெட்கமில்லாமல் வீட்டிற்கு வந்து எங்கிட்டேயே அதைப் பெருமையாக வேறு காட்டுகிறாயா...?’ என்று சொல்லி என்னை அடித்ததோடு உடனே அதைத் தபாலில் திருப்பி அனுப்பச் சொல்லிவிட்டார்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் ஆட்டோகிராஃபைத் திருப்பி அனுப்பினாலும் நான் என்றும் உங்கள் ரசிகமணிதான். அதை என் தகப்பனாராலும் மாற்ற முடியாது. இப்படிக்கு உங்கள் ரசிகன்.”

கடிதத்தைப் படித்து முடித்ததும் ருக்மணிக்கு அவமானமும் பெருமையும் மாறிமாறி உள்ளத்தை அழுத்தின. ‘சினிமாவில் நடிப்பது அத்தனை இழிவானதா...? அதிலும் இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக, ‘பாரிஸ் பியூட்டி’ என்று வர்ணிக்கப்படும் தன்னை ஒரு தந்தை எப்படி தரக்குறைவாக நினைக்கலாம்? இவர்கள் இன்னும் எத்தனை காலம் பெண்களைக் கட்டுப்பெட்டிகளாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள்?’ அவரது மனக்குரல் சுள்ளென்று மூளையை உசுப்ப, அந்தக் கடிதத்தைக் கிழித்துப்போட்டார் ருக்மணி.

பத்து வயதில் ருக்மணிக்குக் கலைப்பித்து ஆரம்பித்தது அம்மாவிடமிருந்து. தாயோடு விடாப்பிடியாக நாடகம் பார்க்கத் தவறாமல் சென்றார். மேடையில் ஆடப்பட்ட நாட்டியங்கள் ருக்மணியையும் அறியாமல் அவருக்குள் குதிபோட்டன. மறுநாள் அவற்றை அப்படியே ஆடிக் காண்பித்தார். வீடு வியப்பில் ஆழ்ந்தது.

ஊமைப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டம். ருக்மணி சினிமா நடிகை ஆனார். அவரது முதல் மவுனச் சித்திரம் ‘பேயும் பெண்மணியும்’. டைரக்டர் ஆர். பிரகாசம் அவருக்கு வழங்கிய முதல் வெளிச்சம். அடுத்து இம்பீரியல் ஸ்டுடியோவின் ‘பாமா விஜயம்’. படம் வெளியான நான்காவது நாளில் ருக்மணிக்கு வெள்ளிக் குத்துவிளக்கு பரிசாகக் கிடைத்தது. ‘டெவில் அண்ட் தி டான்சர்’ என்கிற ஆங்கில சினிமாவிலும் ருக்மணி நடித்தார். ராஜா சாண்டோ இயக்கிய ‘விப்ரநாராயணா’, மற்றும் சி.வி. ராமனின் இயக்கத்தில் ‘விஷ்ணு லீலா’ ஆகிய மவுனச் சித்திரங்களிலும் ருக்மணி தோன்றினார்.

முதல் ஆக்‌ஷன் நாயகி!

“சண்டைப் படம் ஒன்று எடுக்கப்போகிறோம். நீங்கள் ஆண் உடையில் வர வேண்டும். அதோடு துப்பாக்கி சுடுதல், நீந்துதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், கத்திச்சண்டை செய்தல், சிகரெட் பிடித்தல், குதிரைச் சவாரி என ஆண்மகன் செய்யும் அத்தனையும் செய்ய வேண்டும்” என்றார் இயக்குநர். கே.டி. ருக்மணி கொஞ்சம் தயங்கினாலும் ஆர்வமாகக் கேட்டார். “போயும் போயும் ஆண் பிள்ளை உடையிலா நடிப்பது?”

“அதிலென்ன தவறு? வீரமான பெண் ஆணுக்கு இணையானவள்தானே?” என்று இயக்குநருடன் வீடு தேடி வந்த பட முதலாளிகள் உசுப்பேற்ற “பட ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள். இந்தாருங்கள் நீங்கள் கேட்கும் தொகை” என ருக்மணியின் தாயாரைப் பணத்தால் அர்ச்சித்தார்கள்.

அப்படியும் ருக்மணிக்கு உடன்பாடு இல்லை. இயக்குநர் பட்டியலிடும் வித்தைகளைத் தன்னால் செய்ய முடியுமா? ஏதாவது இசகுபிசகாகி அடிபட்டுவிட்டால் அப்புறம் யார் நடிக்கக் கூப்பிடுவார்கள்?” ருக்மணி அரைமனதுடன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அம்மா பணத்தை எண்ணி பீரோவில் வைத்துப் பூட்டினார். ருக்மணி ‘முடியவே முடியாது’ என்று அடம் பிடித்தார். டைரக்டர் கே. சுப்ரமணியம் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ருக்மணியை ரொம்பவும் வற்புறுத்தினார்கள்.

சர்க்கஸ் அழகியும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுமான நாடியா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தி ஸ்டண்ட் சினிமாவை ருக்மணிக்காகத் திரையிட்டுக் காட்டினார்கள். ருக்மணியின் அச்சம் அகலப் பத்து நாட்கள் ஆயின. ஒரு வழியாகத் தமிழின் முதல் முழு நீள ஆக்‌ஷன் சினிமா ‘மின்னல் கொடி’ ஒளிபெறத் தொடங்கியது. “யோகம் வரும் நேரத்தில் தைரியமும் வரும் என்பார்கள். அந்த மாதிரி அசட்டுத் துணிச்சல் எனக்கும் வந்துவிட்டது” என்று பட பூஜையில் பேட்டியளித்தார் ருக்மணி. என்றாலும் அவர் மனதுக்குள் அச்சம் இன்னும் இருக்கவே செய்தது. அவர் பயந்ததுபோலவே குதிரைச் சவாரி செய்யும்போது கீழே விழுந்து பலத்த அடி. உடனே சுதாரித்துக்கொள்ள இயலாதவாறு மாதக் கணக்கில் படுத்த படுக்கையில் கிடந்தார்.

“அவள் இனிமேல் நடிக்க மாட்டாள். தயவுசெய்து விட்டுவிடுங்கள்” என்ற அன்னையின் வேண்டுகோள் வீணாயிற்று. “என் மகள் ஒழுங்காக முழு சினிமாவையும் நடித்துக்கொடுப்பாள் என்று காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள். கை நீட்டிப் பணமும் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது ருக்மணியால் முடியாது என்று சொன்னால், உங்களின் மைனர் பெண்ணுக்குப் பதிலாக நீங்கள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என டைரக்டர் அமர்நாத்திடம் இருந்து மிரட்டல் வந்தது. மெல்ல ருக்மணியின் உடல் தேறியது. ‘மின்னல் கொடி’ மறுபடியும் கேமராவில் படர்ந்தது.

கதாநாயகிகளின் அன்றைய நிலை

கே.டி. ருக்மணியிடம் முதல் ஆக்‌ஷன் பட அனுபவம் பற்றிக் கேட்டார் நிருபர். “பம்பாயில ‘மின்னல் கொடி’ ஷுட்டிங். கேரள ராஜாவின் பங்களா உச்சியிலிருந்து குதிக்க வேண்டும். கால்களில் கனத்த பூட்ஸ்கள் வேறு. அப்பப்பா போதும் போதும் என்றாகிவிட்டது. அந்த கணத்தோடு தொலைந்தேன் என்றே நினைத்தேன். நல்ல நேரம். எனக்கு ஒன்றும் நேரவில்லை. என் நடிப்பு பல படங்களில் தொடர்ந்தது” என்று கூறினார் ‘மின்னல் கொடி’ ருக்மணி. தமிழ் சினிமாவில் கதாநாயகியொருவர் முதல்முறையாக இரட்டை ஜடை போட்டுக்கொண்டு வந்து நடித்த முதல் படமும் அதுவாக இருந்தது.

மின்னல்கொடியைத் தொடர்ந்து ஆக்‌ஷன் ஹீரோயின் வாய்ப்புகள் அவரைத் துரத்தின. கே.டி. ருக்மணி தமிழ் சினிமாவின் முதல் ‘ஆக்‌ஷன் ஹீரோயின்’ என்ற அழியாப் புகழைப் பெற்றார். விஜயலலிதா, ஜோதிலட்சுமி, விஜயசாந்தி, அனுஷ்கா ஆகியோருக்கு அவரே முன் மாதிரி.

கே.டி.ருக்மணி தன் முத்திரையை அழுந்தப் பதித்த மற்ற படங்களில் ‘தூக்குத் தூக்கி’, ‘மனோகரா’, ‘மேனகா’, ‘சாமூண்டீஸ்வரி’, ‘ஜெயக்கொடி’, ‘பஸ்மாசர மோகினி’, ‘வீரரமணி’, ‘சாந்தா’, ‘திருமங்கை ஆழ்வார்’ ஆகியவை அடங்கும்.

நாற்பதுகளின் தொடக்கத்திலேயே ஆக்‌ஷன் ஹீரோயின் ஆகிவிட்டாலும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளின் நிலை எப்படியிருந்தது? ருக்மணியே சொல்கிறார்: “எந்த வசதியும் இல்லாத காலம். மேக் அப் போட்டுக்கொள்ளக்கூடத் தெரியாது. அதற்கென யாரும் இருக்க மாட்டார்கள். நாங்களேதான் போட்டுக்கொள்வோம். அது அழகாகவும் இருக்காது. கடைசி வரையில் ஒரு நாள் கூட நான் பிறரிடம் ஒப்பனை செய்துகொண்டது கிடையாது. விதவிதமான ஆடை அணிகலன்கள், எதுவும் தர மாட்டார்கள்.

ஒரே சேலையை அணிந்து படம் முழுக்க நடிப்போம். இருபது ரூபாய்க்குத் தரமான விலையுயர்ந்த புடவைகள் கிடைக்கும். பட அதிபர்கள் அதை வாங்கிக் கொடுக்கவும் யோசிப்பார்கள்.

‘வாங்க. உட்காருங்க’ என்ற வசனத்தை மெதுவாகப் பேசினால் முகத்தில் மகிழ்ச்சியைக் காட்ட முடியும். ஆனால் அது சரியாக ஒலிப்பதிவு ஆகாது. உரத்த குரலில் ஓங்கிச் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். பீச்சில் கடல் அலைகளின் ஒலி கேட்காமல் படமெடுக்கப் பத்து நாட்கள் ஆகும். டைரக்டர் வைத்ததே சட்டம். நடிகைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பு மரியாதை கிடைக்காது. என்னதான் வளர்ந்த ஹீரோயின் என்றாலும் ‘ருக்மணிக்கு எதற்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் எனக் கேட்டு, நானூறு ரூபாய்க்கு வேறு ஒருத்தியைத் தயார் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் நான் ‘மின்னல்கொடி’ ஆனேன்” என்ற கே.டி.ருக்மணியின் பூர்விகமும் குடும்பப் பின்னணியும் பதிவாகாமலேயே போய்விட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x