Published : 01 Jun 2014 01:04 PM
Last Updated : 01 Jun 2014 01:04 PM

ஃப்ளாஷ் பேக் - இயக்குநர் பாண்டிராஜ் எழுதும் தொடர்: ஒளி கொடுத்த புளி!

எனது இளமை பிராயங்களின் நினைவுகளில் லண்டியனின் (லாந்தர்) வெளிச்சமும், சிம்னியின் புகையும் படிந்திருக்கிறது.

ஊரில் மின்சார இணைப்பிருந்த வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். என்னுடைய வீட்டில் ஒரு நீல நிற பெயின்ட் அடிக்கப்பட்ட லண்டியன் விளக்கிருந்தது. அந்த லண்டியனுக்கு திரி போட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி, எரிய வைப்பது ஒரு தனி கலை. எல்லோருக்கும், கைவராது.

மாலை மசங்கி இருள் தொடங்கும்போதே, லண்டியனை எடுத்து துடைக்க ஆரம்பித்துவிடுவோம். அழகாய் அதன் கண்ணாடியை கழற்றி, அனவுடி துணியை வைத்து துடைக்கவேண்டும். சிலர் விபூதியை லேசாக தூவி துடைப்பார்கள். அந்த விளக்குகள் இன்னும் பிரகாசமாய் ஒளிரும். ஒரு பெண்ணின் கையில் லண்டியனை கொடுத்து துடைக்க சொல்லி பார்த்தாலே, அவள் குடும்பம் நடத்தப்போகும் லட்சணம் தெரிந்துவிடும் என்று சொல்வார்கள். அதிகமாக திரியை தூண்டிவிடாமல் லண்டியனில் ஒரு பொட்டு அளவு வெளிச்சம் வருமாறு அழகாய் வைக்க அம்மாக்களால் தான் முடியும். திரியை ஏற்றி இறக்கும் அந்த கண்ட்ரோல் மூலம், ஃபேட்-இன், ஃபேட்-அவுட் செய்து இருளிலும், ஒளியிலும் ஒவ்வொரு காட்சியாய் மனதில் ஓட்டிபார்ப்போம்.

சில வீடுகளில் லண்டியனுக்கு பதில் முட்டை கிளாஸ் சிம்னிகள் இருக்கும். பித்தளை, இங்க் பாட்டில், குவார்டர் பாட்டில், மருந்து பாட்டில் என்று பலவகை சிம்னி விளக்குகளை ஊருக்குள் பார்க்க முடியும். டீ கடைகள், திருவிழாவில் கொட்டை உருட்டும் இடங்கள், பலசரக்கு கடைகளில் டெமக்கரான் பூச்சிக்கொல்லி டப்பாவிலோ / பீர் பாட்டிலிலோ ஜம்போ சைஸ் சிம்னி விளக்குகளை உருவாக்கியிருப்பார்கள் (குறியீடாக உணர்த்துகிறார்கள் - இரண்டுமே உயிர்க்கொல்லி என்று!). இதற்கு இன்னொரு பெயர் காண்டா விளக்கு. கரகாட்டம், பூச்சொரிதல் விழாக்களில் பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை பார்க்கலாம்.

வீட்டில் எரியும் விளக்கு திரி முழுதும் எரிந்தோ, மண்ணெண்ணெய் தீர்ந்தோ அணைந்து விடக்கூடாது என்பதில், மிகவும் கவனமாய் இருப்பார்கள். தேர்வு நேரங்களில் மண்ணெண்ணெய் வாங்கி ஸ்டாக் வைக்க சொல்லி பில்ட்டப் கொடுப்பேன். “அம்மா, விடிய விடிய படிக்கப் போறேன், மண்ணெண்ணெய் இருக்கா? எனக்கு ரெண்டு பாட்டில் வேணும்” என்றெல்லாம் கடுமையாக சீன் போடுவேன். சிம்னி விளக்கில் படிக்கும்போது, நம்மை சுற்றி விட்டில்களும் ஈசல்களும், வட்டம் அடிக்கும், பாடம் படிக்கும்!

காலையிலேயே என்னை எழுப்பிவிட்டு, படிக்க சொல்வார் அப்பா. எனக்கோ சத்தம் போட்டு படித்தால்தான் மனதில் ஏறும். ஆனால் காலையில் மட்டும் அமைதியாக, படிப்பேன். இல்லை, படிப்பது போல தூங்குவேன். ஒரு நாள் படிக்கிறேன் என்று பாசாங்கு செய்துவிட்டு கையில் புத்தகத்தோடு தூங்கிக்கொண்டிருந்த என்னை அப்பா விட்டு விளாசி எடுத்துவிட்டார். அன்றிலிருந்து எப்போ படிக்க உட்கார்ந்தாலும் சத்தம் போட்டுதான் படிக்க வேண்டும் என்று ஆர்டர் போடப்பட்டது. என்னடா இது நாம் மட்டும் காலையிலேயே எழுந்து படிக்க வேண்டியிருக்கிறதே என்ற கடுப்பில், யாருமே தூங்கக்கூடாது என்று முடிவெடுத்து நான் கத்தி கத்தி படித்ததில் எதிர் வீடு பக்கத்துக்கு வீடு என பலருக்கும் தூக்கம் போய்விட்டது. எப்பூடி!

கரண்ட் விளக்குல படித்தால் இன்னும் அதிகம் மதிப்பெண் எடுக்க முடியும், லண்டியன்ல படிக்கிறதால தான் மதிப்பெண் குறைவதாக அப்பாவிடம் காரணம் சொல்லிப்பார்த்தேன். “லண்டியன்ல படிச்சு உன்னால என்ன எடுக்க முடியுமோ, எடு.. இல்லைனா விடு”, என்று போய்க்கொண்டே இருப்பார். இப்படியே நான் எப்போது கரண்ட் பத்தி பேசினாலும், அதை கட் பண்ணுவதில் எங்க அப்பா குறியாய் இருப்பார். ஒருவழியாய் எங்கள் வீடு இருக்கும் ஏரியாவுக்கு நெய்க்குணத்தில் இருந்து மின்சார இணைப்பு கொண்டுவரலாம் என முடிவெடுத்தார்கள். அப்போது எந்த வழியாக இணைப்பை கொண்டுவருவது என்பதில் அப்பாவுக்கும் அடைக்கலங்காத்தான் பெரியப்பாவுக்கும் சின்ன வாக்குவாதம் வருகிறது. எதிர்வீடுதான் பெரியப்பாவுடையது. பெரிய ரோட்டுக்கு எதிரெதிர் வரிசைகளில் இரண்டு வீடுகளும் இருக்கும். பெரியப்பா, என்ன சொன்னாலும் அப்பா கேட்பார், அவ்வளவு மரியாதை அவருக்கு. அப்போதுதான் எல்லோருடைய வீட்டுக்கும் இணைப்பு கொடுக்க வசதியாக, எங்கள் வீட்டு வாசலில் இருந்த புளியமரத்தை வெட்ட சொல்லி பெரியப்பா வற்புறுத்த, அப்பாவோ முடியாது என்கிறார்.

“வருஷத்துக்கு பன்னிரண்டு மூட்டை புளியம்பழம் காய்க்குது, இதை வெட்ட முடியாது” என அப்பா முறுக்க, அவர்கள் பக்கமாகவாவது மின் இணைப்பை கொண்டுவரலாம் என்றால், சரியாக பெரியப்பா வீட்டு வாசலில் இருந்த உசிலை மரத்தை வெட்ட வேண்டி வருகிறது. அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். “அந்த மரத்து நிழலுலதான் ஒட்டு மொத்த குடும்பமும் மதியத்துல உட்காந்து இளைப்பாறுது, அதனால வெட்ட முடியாது” அவர் வீம்பு காட்ட சிலமாதம் கரண்ட் இழுக்கும் முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

என்ன யோசித்தாரோ பெரியப்பா, திடீரென அவர்களின் வீட்டிற்கு பின்புறமாய் வரும்படி விராச்சிலையில் இருந்து மின்இணைப்பு கொடுத்துவிட்டார். சரி, அங்கிருந்து இழுத்துக்கொள்ளலாம் என்றால் பெரியப்பா அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். எங்க பக்கத்துல இருந்து கரண்ட் இழுக்க நான் உசுரோட இருக்க வரைக்கும் சம்மதிக்க மாட்டேன், அதோட இங்கிட்டு இருந்து அங்கிட்டு கரெண்ட் வயர் போற பாதை இடத்துல நான் மாடிவீடு கட்டப்போறேன் என்று சபதமே எடுத்து விட்டார். இவ்வளவுக்கு பிறகும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் இருந்த இணக்கம் கொஞ்சமும் குறையவில்லை. நல்லது கெட்டதுகளில் ஒன்றாய் இணைந்தே இருந்தோம். இப்படியே நான் ப்ளஸ் டூ முடிக்கும் வரை எங்கள் வீட்டில் கரெண்ட் இல்லை. ஒரு வழியாய் நான் உதவி இயக்குநர் ஆன பிறகுதான் எங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுத்தார்கள். ஆனால், அந்த இணைப்பை வாங்க கூட பணம் கட்ட முடியவில்லை. எந்த புளிய மரத்தை வெட்டமாட்டேன் என்று அடம் பிடித்து பலவருடம் வீட்டுக்கு மின்சார இணைப்பு வருவது தடைபட்டதோ, அதே மரத்தை செங்கல் சூளை விறகிற்கு விற்றுவிட்டு வந்த பணத்தைக்கட்டிக் கரென்ட் கனெக் ஷன் வாங்கினார் அப்பா.

கிராமங்களில் யாராவது இறந்து போனால், அவர்களை கிடத்தியிருந்த இடத்தின் தலைமாட்டில் ஒரு லண்டியனை தொடர்ந்து மூன்று நாட்கள் வரை எரிய வைப்பார்கள். இந்த வீட்டின் வெளிச்சமாய் இருந்தவர் இன்று ஒளியாய், நெருப்போடு நெருப்பாகிவிட்டார் என்று சொல்லாமல் சொல்லும் மௌன சாட்சிகள் அவை. ஆனால் இன்று அந்த லாண்டியன் விளக்குகளே, நம்மை விட்டு மரணித்துவிட்டது!

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வந்த மின்வெட்டுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி என்று தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மகிழ்ச்சியான நேரத்தில், எங்கோ உற்பத்தியாகும் மின்சாரம் நம்மை வந்தடைய அமைக்கப்படும் ஒவ்வொரு டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் மின்சார தந்தி கம்பிகள் நடும் பாதை நெடுகிலும், எத்தனை எத்தனையோ மரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றுக்கு பின்னும் கூட இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கலாம்.

உணர்ந்து பயன்படுத்துவோம், மின்சாரத்தை மிச்சப்படுத்துவோம்!

தொடர்புக்கு: pandirajfb@gmail.com, ஓவியம்: செ.இளஞ்செழியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x