Last Updated : 28 Feb, 2014 12:00 AM

 

Published : 28 Feb 2014 12:00 AM
Last Updated : 28 Feb 2014 12:00 AM

பெண்ணைக் கடத்தினார் அசோகன்- பாராட்டி மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்!

மூன்று நொடி வசனத்தைக்கூட மூன்று நிமிடம் நீட்டி முழக்கிப் பேசிப் புதிய பாணி கண்டவர். பட்டை தீட்டப்பட்ட புருவத்தை உயர்த்தினால், பச்சைப் பிள்ளைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் வெலவெலத்துப்போவார்கள். அவர்தான் எஸ்.ஏ. அசோகன். இயற்பெயர் அந்தோணி. ‘மணப்பந்தல்’ படத்துக்காக அசோகன் ஆக்கினார் இயக்குநர் டி.ஆர். ராமண்ணா.

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.ஏ. படிக்கும்போதே கருத்தரங்கப் பேச்சாளர் என்று பெயர் வாங்கியவர். ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வெளிப்படும் அவருடைய நடிப்பு, கல்லூரி வளாகத்தைத் தாண்டியும் பாராட்டிப் பேசப்பட்டது. இந்தியாவிலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் நாடகப் போட்டி ஒன்று நடந்தது. ஜோசப் கல்லூரி சார்பில் அசோகன் கலந்துகொண்டார். முதல்பரிசாகத் தங்கப் பதக்கம் கிடைத்தது.

சினிமா ஆர்வம் துரத்த, சென்னைக்கு வந்து சேர்ந்தார். எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் ‘மூன்று பெண்கள்’ தொடங்கி, ‘திருமணம்’, மாய மனிதன்’, ‘பக்த சபரி’ எனச் சிறியதும் சற்றுப் பெரியதுமான படங்களில் நடித்தார். நண்பர்கள் உதவியுடன் டைரக்டர் ஜோசப் தளியத் அறிமுகமானார். அப்போது சி.எல். ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க, ‘விஜயபுரி வீரன்’ படத்தை இயக்கிவந்தார் தளியத். அந்தப் படத்தில் அசோகனுக்கு ஒரு முக்கிய வேடம் கிடைத்தது. அந்தப் படத்தின் உதவி இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தருடன் ஏற்பட்ட பழக்கம் நெருங்கிய நட்பாக விரிவடைந்தது. பின்னாளில் அவரை ஏவி.எம். நிறுவனத்துக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அசோகன். ஏவி.எம். நிறுவனத்தையும் எம்.ஜி.ஆரையும் பல மட்டங்களில் சந்தித்துப் பேசி சம்மதிக்கவைத்து, ‘அன்பே வா’ படம் உருவாகக் காரணமாக இருந்தவரும் அசோகன்தான்.

‘மணப்பந்தல்’, ‘இது சத்தியம்’, ‘காட்டு ராணி’ படங்களின் மூலம் கதாநாயகனாக வலம்வந்தார் அசோகன். அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்களில் குணச்சித்திர, வில்லன் வேடங்கள் குவிந்தன.

எல்லோரிடமும் எளிதில் நட்பாகிவிடும் அசோகனுக்கு எம்.ஜி.ஆர்., ஏவி.எம்.சரவணன், சின்னப்பா தேவர், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர் ஆகியோர் மிக நெருக்கமானார்கள். எம்.ஜி.ஆருடன் 80 படங்களுக்குமேல் நடித்துள்ள அசோகன், அவரைவைத்து ‘நேற்று இன்று நாளை’ படத்தைத் தயாரித்து, சோதனைக்கிடையே வெற்றி கண்டார்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அசோகனுக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோயமுத்தூர் சரஸ்வதிக்கும் தீவிரமான காதல். திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்து, பெண் கேட்கப் போனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. “இனிமேல் சரஸ்வதியை சந்திக்கக் கூடாது. மீறினால் போலீஸில் புகார் செய்து விடுவோம்” என்று மிரட்டுகிறார்கள்.

அப்போதைக்கு ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பட பூதம்போலக் கையைக் கட்டி நின்றவர், தகுந்த நேரம் பார்த்துக் காந்திருந்தார். நேரம் வந்தது. குடும்பத்தினர் கண்களில் எதையும் தூவாமல், தப்பித்துவந்தார் சரஸ்வதி. தயாராக இருந்த அசோகன் அவரைக் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துசேர்ந்தார்.

எம்.ஜி.ஆருக்குத் தகவல் தரப்பட்டது. அசோகனைப் பாராட்டிய அவர், உடனடி யாகத் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்., ஏவி.எம். சகோதரர்கள், ஏ.சி. திருலோகசந்தர் ஆகியோர் நுங்கம்பாக்கம் ஃபாத்திமா சர்ச்சில் கூடினார்கள். தேவாலயத்தின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. சரஸ்வதிக்கு மேரி ஞானம் என்று பெயர் சூட்டப்பட்டு, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த திருமணம் என்பதால் பெண் வீட்டார் போலீஸில் புகார்செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஆகிவிட்டது. நெருங்கிய நண்பர் ஜெய்சங்கர் வெளியூர் படப்பிடிப்பிலிருந்து திரும்பிவந்து அசோகன் – மேரி ஞானம் தம்பதிக்குத் தனது வீட்டில் சிறப்பான விருந்துவைத்து மகிழ்ந்தார்.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x