Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

நீதி கிடைக்கும்வரை
 விட மாட்டேன்!: உதயநிதி ஸ்டாலின்

சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாத சமத்துப் பையன் உதயநிதி ஸ்டாலின். அரசியல் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு வார்த்தைகளையும் அளந்து பேசுகிறார். அதே நேரம் மனதில் பட்ட ஆதங்கத்தைப் பளிச்சென்று உடைக்கும் துணிவுக்கும் குறைவில்லை. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி‘ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகமான உதயநிதிக்கு இன்று வெளியாகியிருக்கும் 'இது கதிர்வேலன் காதல்' இரண்டாவது படம். பரிட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் +2 பையனைப் போல ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்...

முதல் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இரண்டாவது படம் காப்பாற்றுமா?


நிச்சயமா! படத்தில் கதிர்வேலன் என்ற கேரக்டர் பண்ணியிருக்கேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணன் கேரக்டரருக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர். அப்பாவுக்கு ரொம்ப பயந்த பையன். ஆஞ்சநேய பக்தன். பெண்ணுங்களே பிடிக்காது. இப்படியிருக்குற ஒரு பையன் கோயம்புத்தூர் போறான். அங்க பவித்ராவைப் பாத்து காதலிக்கிறான். நண்பன் உதவுகிறான். இப்படிப் போகும் கதை.

காதலர்கள், நண்பன் என்பதைத் தவிர வேறு என்ன புதுமை?


‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நான், ஹன்சிகா, சந்தானம் இப்படி எங்களுக்குள்ளதான் கதையே போகும். ஆனா, இதுல எல்லாரையும் சுற்றியும் கதை நகரும். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி', ‘சுந்தரபாண்டியன்' படத்தையும் சேர்ந்து பண்ணினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் படம். முகம் சுளிக்க வைக்கிற எந்த ஒரு காட்சியும் இருக்காது. படம் முடிச்சு வெளியே வர்றப்போ அப்பா -
பையன் உறவுக்கான படமா பேசப்படும். முழுக்க காதல் கதைன்னு சொல்ல மாட்டேன்.
ஃபேமிலியோட பார்க்க பெஸ்ட்டான படம்.


நிஜத்திலும் நீங்க ஆஞ்சநேயர் பக்தனா?


நிஜத்துல எனக்கு சாமி பக்தி எல்லாம் கிடையாது. கோவிலுக்கு எல்லாம் போகவே மாட்டேன். சில விஷயங்கள் ஒத்துப் போகும். அவ்வளவுதான்.


படத்தில் உங்க குடும்ப விஷயங்களும் நிறைய இடம் பிடிச்சிருக்காமே ?


படத்தோட கதை விவாதம் நடந்தப்போ
 எங்கப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கேன். அதை பிரபாகரன் அப்படியே படத்துல வைச்சிட்டார். எனக்கு டப்பிங் பேசறப்போ
கூட இது தெரியல. ‘உங்கப்பா பத்தி சொன்னீங்களே.. அதைத்தான் காட்சியாக மாற்றிவிட்டேன்' அப்படின்னு சொன்னார். நான் தினமும் எங்கப்பாகிட்ட பேசிருவேன், இல்லன்னா நேர்ல பாத்துருவேன். பேசாம ஒரு நாள்கூட இருந்ததில்லை. அதைத்தான் அவர் காட்சியாக வைத்து விட்டார். என்னோட காதலுக்கு முதல் சப்போர்ட் எங்கப்பாதான். என்னோட ஒரிஜினல் கேரக்டரை இந்தப் படத்துல பண்ணல. இயக்குநர் பிரபாகரனுக்கும் காதல் திருமணம்தான். அவரோட கதையா இருக்கலாம்னு நினைக்கிறேன்.


இதுக்கு அடுத்து நடிக்கிற படத்திலும் நயன்தாராவோட கூட்டணி தொடருதே? ஏதும் கெமிஸ்ட்ரி விசேஷமா?

கெமிஸ்ட்ரியும் இல்ல, பிசிக்ஸும் இல்ல.
என்னோட ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல ஹாரிஸ், சந்தானம், பாலசுப்பிரமணியம் இருந்தாங்க. ‘இது கதிர்வேலன் காதல்'
படத்துலயும் இருக்காங்க. ‘நண்பேன்டா'லயும் இருக்காங்க. அதே மாதிரிதான் அடுத்த படத்துல நயன்தாரா இருக்குறதும்.
ஒரு ஹிட் காம்பினேஷன் திருப்பியும் சேருவதில் தப்பில்லையே.

நகைச்சுவைக் கதைகளிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?


எனக்கு காமெடி ஈசியா வருது, பண்றேன். அடுத்து நடிக்கப்போற ‘நண்பேன்டா' படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' இரண்டாம்பாகம்னு சொல்லலாம். நானும் சந்தானமும் பயங்கர கலாட்டா பண்ற படமாயிருக்கும். மற்ற படங்கள் பண்ணலாம் அப்படிங்குற நம்பிக்கை வரல. நம்பிக்கை வர்றப்போ பண்ணுவேன்.

நடிப்பு, தயாரிப்பு, விநியோகம்னு கலக்குறீங்க. பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இல்லையா?


முதல் காரணம் நடிகர்கள் சம்பளம். பெரிய நடிகர்கள் பண்ணினா அவருக்கு ஏற்றாற்போல பெரிய இயக்குநரைத்தான் பாக்கணும். இரண்டாவது காரணம் இப்போ நானே ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னோரு ஹீரோ கிட்ட போய் தேதி கேட்கிறதுக்கு நானே நடிச்சுடுவேன். பெரிய பட்ஜெட் படங்கள் இனிமேல் பண்ண மாட்
டேன்னு சொல்ல மாட்டேன். பண்ணுவேன். ஆனால் வியாபார ரீதியில் நல்லா போக
ணும். அந்த மாதிரி கரெக்ட்டான டீம் அமைஞ்
சுட்டா தயாரிக்கத் தயாரா இருக்கேன்.

வரி விலக்கு பிரச்சனையில் தொடர்ந்து போராடிகிட்டு இருக்கிங்களே?


இப்ப இருக்குற வரி விலக்குக் குழுவே வேண்டாம் அப்படின்னு நீதிமன்றத்துல வழக்கு போட்டுருக்கேன். படத்தைப் பார்த்து அவங்களுக்கு முடிவு எடுக்கத் தெரியல. அதனால நீதிமன்றமே ஒரு குழு அமைக்க வேண்டும் அப்படின்னு கேட்டிருக்கேன். நீதி கிடைக்கும்வரை விட மாட்டேன். தயாரிப்பாளர் சங்கத்துலயும் புகார் கொடுத்தேன். யாரும் ஒரு நடவடிக்கையும் எடுக்கல. இப்போ எனக்கு மட்டும் நடக்கல.
அரசாங்கத்திற்கு யாரெல்லாம் எதிரா இருக்காங்களோ எல்லாத்துக்கும் வரி
விலக்கு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. ஜில்லா, வீரம் இப்படி எந்தப் படத்துக்கும் வரிவிலக்கு கொடுக்கலயே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x