Last Updated : 28 Mar, 2014 12:00 AM

 

Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM

நாகேஷை நடிகராக்கிய ராமாயணம்!

கிருஷ்ணா ராவ் – ருக்மணி அம்மாளின் ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டியாகப் பிறந்தவர் நாகேஷ். அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பணம் திருடி, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். ஆனால், சினிமா வில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் நடித்தபோதிலும் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி முதல் மாணவராக இருந்தார்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படிக்கும்போது அம்மை நோய் தாக்கியதில் முகம் முழுக்கத் தழும்புகள் ஏற்பட்டதில் ரொம்பவே கலங்கிப்போய்விட்டார். உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி ஐதராபாத்துக்குச் சென்று பல வித வேலைகளைச் செய்தார். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த அப்பாவின் ஆலோசனைப்படி ரயில்வே தேர்வு எழுதி சென்னை மண்டலத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்தார்.

மேற்கு மாம்பலத்தில் தங்கியிருந்த அவருக்குக் கவிஞர் வாலி (அப்போது வாலி அல்ல, ரங்கராஜன். சினிமாவுக்குப் பாட்டெழுதத் தீவிரமாக முயற்சி செய்துவந்தார்), ‘தங்கப் பதக்கம்’ ஸ்ரீகாந்த், பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான தாராபுரம் சுந்தர்ராஜன் ஆகியோர் நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு சினிமா வாசனை பக்கத்தில் அடித்துக்கொண்டிருந்தபோதும் நாகேஷின் மனம் சினிமாவை நாடவில்லை. அப்படி நாட வைத்தது ஒரு பிழை செய்த பேறு.

அவர் குடியிருந்த அறைக்குப் பக்கத்தில் இருந்த தேவி பாடசாலையில் நாடக கோஷ்டிகள் அடிக்கடி ஒத்திகை நடத்துவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார் நாகேஷ். அப்படி ஒருநாள் போகும்போது ஒரு நடிகர் கம்ப ராமாயணத்தில் வரும் குகன் படலப் பாடலைத் தப்புத்தப்பாய்ப் பாடியிருக்கிறார். சின்ன வயது முதல் சிறு பிசகுமில்லாமல் மனப்பாடம் செய்துவைத்திருந்த கவிச்சக்ரவர்த்தி கம்பனின் பாடலை ஒரு நடிகன் கொடூரமாகக் கொலை செய்வதை அவரால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. திடகாத்திர மான அந்த நடிகரைத் திருத்த முயன்ற நாகேஷ், அவர் முன் போய் நின்றார்.

“சார்! தப்பா நெனைக்காதீங்க. இஷ்டப்பட்டு கம்பன் எழுதின பாட்டை நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு தப்புத்தப்பா பாடறீங்க. நான் வேணும்னா அந்த வரிகளை தெளிவா எழுதித் தரட்டுமா?’’ என்று நாகேஷ் கேட்டதும் ஆத்திரம் அடைந்துவிட்டார் அந்த நடிகர். “யாருய்யா கண்டவனை எல்லாம் உள்ளே விட்டது?’’ என்று கம்பெனி ஆட்களைப் பார்த்து சத்தம்போட்டுவிட்டு, நாகேஷை மிக நெருங்கி வந்து, “நடிப்புனா என்னன்னு தெரியுமா? ஒம்மூஞ்சிக்கெல்லாம் நடிப்பு வருமா? இப்போதைக்கு உன்னோட மொகத்துல மட்டும்தான் தழும்பு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தீன்னா ஒடம்பு முழுக்க தழும்பாயிடும்’’ என்று எச்சரித்ததைப் பார்த்து நாகேஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார் நாகேஷ். மறுநாள் அலுவலகத்தில், நாடகம் நடத்தும் மாராவிடம் வாய்ப்பு கேட்டார். முதலில் ஏளனமாகப் பார்த்து மறுத்தவர், நாகேஷின் தொடர் கெஞ்சலால் சம்மதித்தார். வயிற்று வலிக்காரன் வேடம்.

முதலில் மேடையில் தோன்றிய நாகேஷ், ‘அம்மா’ என்ற ஒற்றை வார்த்தையை, வயிற்றைப் பிடித்தபடி பல மாடுலேஷன்களில் பேச, கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., வயிற்று வலிக்காரனாக நடித்தவரின் பெயரென்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டு நாகேஷுக்குப் பரிசுக் கோப்பை வழங்கினார். பிறகு சினிமா அவரை அரவணைத்துக்கொண்டது. நகைச்சுவை வேடம், குணசித்திர வேடம் எனப் பல விதமான பாத்திரங்கள் ஏற்று நடித்த அவர், நாயகனாகவும் கலக்கினார். ‘அதிர்ஷ்டக்காரன்’ படத்தில் இளம் நாயகி படாபட் ஜெயலட்சுமிக்கும் முன்னணிக் கதாநாயகியாக இருந்த கே.ஆர். விஜயாவுக்கும் ஜோடியானார்.

எடுத்துக்கொண்ட வேடம் எதுவானாலும் அதில் பட்டையைக் கிளப்பிய அந்த மாபெரும் கலைஞன் திரையுலகில் நுழையக் காரணமாக அமைந்த அந்த நாடக நடிகருக்குத்தான் தமிழ் சினிமா நன்றி சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x