Last Updated : 21 Oct, 2016 10:16 AM

 

Published : 21 Oct 2016 10:16 AM
Last Updated : 21 Oct 2016 10:16 AM

நகர்வலம் - மதுரை ‘சிந்தாமணி’: வெற்றியும் வீழ்ச்சியும்!

மக்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் தொடர்புள்ளது திரையரங்கு. மதுரை ‘சிந்தாமணி தியேட்டர்’ தமிழக சினிமா, அரசியல் வரலாற்றோடு தொடர்புள்ளது. 90 வருட வரலாறு கொண்ட மதுரை சிந்தாமணி தியேட்டர் இடிக்கப்படுவதைப் பழைய ரசிகர்கள் வேதனையுடன் பார்த்துச் செல்கிறார்கள்.

தரை தட்டிய கப்பல்!

நாம் அங்கே சென்றிருந்தபோது, தியேட்டர் வாசலில் ரிக் ஷாவை நிறுத்தி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் காமராஜபுரம் என்.ஜாகீர் உசேன். அவரது கண்கள் தியேட்டரை வெறித்தபடியிருந்தன. தியேட்டரைப் பற்றி விசாரித்தபோது, உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்:

“இது வெள்ளைக்காரன் காலத்திலேயே கட்டுன தியேட்டர் தம்பி. ராட்சத கப்பல் மாதிரியே இருக்கும் தியேட்டரோட அமைப்பு. உள்ள போனா, கடல் மாதிரி இருக்கும். ஆயிரம் சீட். மதுரையைச் சுற்றி முப்பது நாப்பது மைல் சுற்றளவுல, பணக்காரப் பசங்க ஏதாவது பார்ட்டின்னா இங்கதான் வருவாங்க. ‘அம்சவல்லி’ ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, தியேட்டர்ல படம் பார்த்தாத்தான் அந்த பார்ட்டி முழுமையடையும். இப்போ இந்தத் தியேட்டர், தரை தட்டுன கப்பல் மாதிரி ஆகிப்போச்சு” என்கிறார்.

“இந்தத் தியேட்டர்ல முதல்ல ரிலீஸ் ஆன படத்தைப் பார்த்தவங்க, இப்ப உயிரோட இருக்கிறதுக்கே வாய்ப்பில்லை. தன்னோட 200-வது படமான ‘திரிசூலம்’ வெள்ளி விழா கொண்டாடியபோது, சிவாஜி கணேசன், தன்னுடைய மனைவி கமலாம்மா, மகன்கள் ராம்குமார், பிரபு, மகள்கள் சாந்தி, தேன்மொழின்னு குடும்பத்தோட வந்தார். ‘அடிமைப்பெண்’ வெள்ளி விழாவுக்குப் புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் வந்திருந்தாங்க. ‘களத்தூர் கண்ணம்மா’ ஓடிக்கொண்டிருக்கும்போது, குழந்தை நட்சத்திரமான கமல ஹாசன் தியேட்டருக்கு வந்திருக்கார். அவ்வளவு ஏன்? என்னோட தலை தீபாவளிக்கு புதுப் பொண்டாட்டியோட இந்தத் தியேட்டருக்குத்தான் வந்தேன். இவ்ளோ பெரிய தியேட்டரான்னு ஆச்சரியப்பட்டுப்போனா, அதுக்காகத்தானே கூட்டிக்கிட்டு வந்தேன்” என்கிறார் நெல்பேட்டை ஆட்டோ டிரைவர் ஆர்.பூபதி.

உதிரும் சித்திரம்

பிரதான கேட் வழியாகத் தியேட்டருக்குள் நுழைந்தோம். முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தது மாதிரி இருந்தது. ஒரே வெறுமை. தியேட்டரின் உச்சியில் நின்று, அதை இடித்துக் கொண்டிருந்தார்கள் சிலர். பால்கனிக்குச் செல்லும் மாடிப்படியில் ஏறுகையில், மண்ணும், செங்கல்லுமாகச் சிந்தாமணியின் சித்திரம் உதிர்ந்துகொண்டிருந்தது.

எல்லீஸ் நகர் ரமேஷிடம் பேச்சுக்கொடுத்தோம். “இடிக்கிற வேலையில இருக்கிறவங்கள்ல முக்காவாசிப் பேரு, இங்க படம் பார்த்தவங்கதான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஞாபகம் இருக்கு. எனக்கு இந்த தியேட்டரோட முட்டை போண்டா ரொம்பப் பிடிக்கும் மற்ற தியேட்டர்களில் எல்லாம் முட்டை போண்டாவுக்குள்ள அரை முட்டைதான் இருக்கும். இங்கே முழு முட்டையோட சேர்த்து, கிரிக்கெட் பால் சைஸ்ல இருக்கும். வெறும் 3 ரூபாய், 5 ரூபாய்க்கு முட்டை போண்டா சாப்பிட்டிருக்கேன். தியேட்டரை இடிக்கிறதுக்கு ஆயுத பூஜை அன்னைக்குப் பூஜை போட்டோம்.

இங்கதான் டிக்கெட் கொடுப்பாங்க, இங்க தான புரொஜெக்டர் இருந்துச்சி, இங்க தான் சீல்டுகளை அடிக்கி வெச்சிருந்தாங்க, இங்கதான் கேன்டீன் இருந்துச்சின்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நினைவைப் பகிர்ந்துக்கிட்டோம். நான் கடைசியா உட்கார்ந்து படம் பார்த்த சீட்கூட ஞாபகம் இருக்கு. தியேட்டரோட ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு ஞாபகத்தைக் கொண்டுவருது. அதை இடிக்கும்போது, கண் கலங்குது சார்” என்றார் வேதனைப் புன்னகையோடு...

இரவே வந்த கூட்டம்

தியேட்டர் இடிக்கப்படுவதைப் பார்ப்பதற்காகத் தள்ளாத வயதிலும் வந்திருந்தார் மதுரை பீ.பீ. குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கணேசன். “அப்ப நான் பள்ளிக்கூடம் படிச்சிக்கிட்டு இருந்தேன் சார். 1970 பொங்கலுக்கு எம்ஜிஆரோட ‘மாட்டுக்கார வேலன்’ படம் ரிலீஸாச்சு. 1966 பொங்கலுக்கு வந்த ‘அன்பே வா’, 1968 பொங்கலுக்கு வந்த ‘ரகசிய போலீஸ்’னு எல்லாமே சூப்பர் ஹிட். அதனால ‘மாட்டுக்கார வேலன்’ படத்தைப் பாத்தே ஆகணும்னு முடிவு பண்ணிருந்தேன். போஸ்டரில் எம்ஜிஆர் கையில் வைத்திருந்த கம்புக்குப் பதில், கரும்பைப் போட்டு விளம்பரம் செய்திருந்தார்கள்.

காலையில 5 மணிக்குப் போனா, ராத்திரியே ஒரு கூட்டம் தியேட்டர் வாசல்ல படுத்துக் கிடக்கிறது தெரிஞ்சுது. ‘சத்தியம் நீயே தர்மத்தாயே’ங்கிற பாட்டோட படம் ஆரம்பிச்சுது. முத ரெண்டு நிமுஷம் திரையே தெரியாத அளவுக்குப் பூவும், கலர் கட்டிங் பேப்பருமா பறக்கவிட்டாங்க ரசிகருங்க. அடுத்த நாளும் படத்துக்குப் போனேன். இப்படியே தொடர்ந்து நாலு நாள் கூட்டத்துலேயும் படம் பார்த்தேன். எப்படி அந்தப் படத்தையும், பாட்டையும் என்னால மறக்க முடியதோ அதேமாதிரி தியேட்டரையும் என்னால மறக்கவே முடியாது” என்றார்.



கற்பனையும் உண்மையும்

“ஆரம்பத்துல இது டூரிங் டாக்கீஸா இருந்துச்சி. ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ன்னு ஒரு படம் வருஷக்கணக்குல ஓடுச்சாம். அந்த லாபத்துல சௌராஷ்டிரா ஆளு ஒருத்தர் கட்டுன தியேட்டர்தான் இது” இப்படி நிறைய பேர் தியேட்டரைப் பற்றி நிறைய கற்பனைக் கதை சொல்கிறார்கள். ஆனால், உண்மை வேறு.

“எங்கப்பா எம்.எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி சினிமா தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தவர். ‘ராயல் டாக்கீஸ் டிஸ்ட்டிரிபியூட்டர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தினார். பல படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். அதில் ஒன்று எம்.கே.டி.தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ (1937). அது ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. உண்மையில் அந்தப்படத்தின் முக்கியக் கதாபாத்திரம், சிந்தாமணியாக நடித்த கே.அஸ்வத்தம்மாதான். ஆனால், எம்.கே.டி.தியாகராஜ பாகவதருக்கே இப்படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.

அவரது முதல் மெகா ஹிட் படமும் இதுதான். இந்தப் படத்தில் கிடைத்த லாபத்தில்தான், சிந்தாமணி என்ற பெயரிலேயே தியேட்டர் கட்டினோம். 1936-ல் அப்பா உலகச் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது லண்டனில் ஓடியான் தியேட்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். அந்த வடிவமைப்பிலேயே கட்டப்பட்டதுதான் சிந்தாமணி தியேட்டர். பிறகு இதே வடிவமைப்பில் தமிழகத்தில் பல தியேட்டர்கள் கட்டப்பட்டன.

இந்த தியேட்டர் தொடங்கப்பட்டபோது, என்.எம்.ஆர்.வெங்கடகிருஷ்ணய்யா, மதுரைக்காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன், என்.எம்.ஆர்.கிருஷ்மூர்த்தி, என்.எம்.என்.சேஷய்யர்னு நாலு பேர் பார்ட்னராக இருந்தனர். கொஞ்ச காலத்திலேயே அதிலிருந்து விலகினார் சுப்பராமன். இவர்களுக்குப் பிறகு பிள்ளைகள், பிறகு பேரன்கள் தியேட்டரை நடத்தினார்கள். 2008-ல் தியேட்டரை விற்றபோது, 12 பேர் பங்குதாரர்களாக இருந்தோம்.

அந்தக் காலத்தில் சினிமா தொழில் லாபகரமாக இருந்தது. எப்போது மினிமம் கியாரண்டி என்று வந்ததோ, அதன் பிறகே தியேட்டர்கள் நலிவடைய ஆரம்பித்துவிட்டன. இப்போதுள்ள சூழலில், சினிமா தொழிலை நியாயமாகச் செய்ய முடியாது. எங்கள் குடும்பத்தில் வசதியிருந்தும் யாரும் இப்போது சினிமா துறையைத் தேர்ந்தெடுக்காததற்கு அதுவும் ஒரு காரணம்” என்றார் எம்.கே.ஜவவஹர்பாபு வருத்தத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x