Last Updated : 06 Dec, 2013 12:00 AM

7  

Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

துல்லியமாக ஒலிக்கும் ராஜ இசை!

இளையராஜாவின் இசைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. பட்டியல் வகை உணர்வுகளில் அடங்கும் சோகம், காதல் பரவசம் போன்றவற்றைத் தாண்டி பரிவு, இரக்கம், சுய இரக்கம் என்று பல மெல்லிய உணர்வுகளை, ஒரு எழுத்தாளனுக்குரிய நுட்பத்துடன் இசைக்குறிப்புகளாக எழுதிவிட அந்த மனிதரால் முடியும். தொழில்நுட்ப ரீதியான மேதமையும், மிகச்சிறந்த ஒலி அறிவும் கொண்டு அவர் உருவாக்கிய பாடல்கள் இசை ரசிகர்களின் ஆராதனைக்குரியவை என்பதெல்லாம் நாம் அறிந்ததே.

பல்வேறு விதமான இசைக்கருவிகளைக் கொண்டு அவர் உருவாக்கிய பாடல்களை அதே ஒலிக்கலவையின் முழுவெளிப்பாட்டுடன் பெரும்பாலும் நாம் கேட்பதில்லை. நுணுக்கமாக அவர் பயன்படுத்திய இசைக் குறிப்பின் இனிய ஓசைகள் நம் காதில் விழாமல் போகவும் செய்கின்றன. எம்பி3 என்ற ஒலிவடிவில்தான் நாம் பரவலாக அந்தப் பாடல்களைக் கேட்கிறோம். இதனால் பல இசைக்கருவிகளின் ஒலி நம் காதை வந்தடைவதில்லை.

Interlude எனப்படும் நிரவல் இசையில் ஜாலங்கள் புரிந்த இளையராஜாவின் பாடல்களில் இருக்கும் இசை நுணுக்கத்தை, நம் செவிகள் தவறவிட்ட சிறப்பு சப்தங்களை மீண்டும் கேட்டு ரசிக்கும்வண்ணம் அவரது பாடல்களை டி.டி.எஸ் மற்றும் ஹை-ஃபை தொழில்நுட்பங்களின் துணையுடன் உயிர்ப்பித்திருக்கிறார் முத்துசாமி. கோயமுத்தூரில் செயல்படும் ‘ஹனி பீ ’ (Honey Bee) என்ற ஆடியோ நிறுவனத்தின் உரிமையாளரும் சவுண்ட் இன்ஜினியருமான முத்துசாமி, மின்னணு தொடர்பான பணிகளில் அனுபவம் வாய்ந்தவர். சாலிடேர், டயனோரா போன்ற டிவி தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்தவர். ஒலி பற்றிய அபாரமான நுண்ணறிவுத் திறனும் தொழில்நுட்பத்தின் துணையும் அமையப்பெற்ற இவர், இளையராஜாவின் இசை நுணுக்கங்களை துல்லியமாக ஒலிக்க வைத்துப் பரவசமூட்டுகிறார்.

அவரது கைவண்ணத்தில் 'புதிய பூவிது பூத்தது’ பாடல் தன் ஒலிச்சிறப்பின் உச்சத்தில் ஒலிக்கிறது. ‘இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்’ பாடலில் மறைந்திருக்கும் மந்திர ஒலிகள் காற்றை நனைக்கின்றன. இசையும், தொழில்நுட்பமும் இணைந்து புரியும் ஜாலம் வியக்கவைக்கிறது. இளையராஜாவின் பாடல்களுடன் உறங்கச்செல்லும் ரசிகர்கள் முத்துசாமி தயாரித்துள்ள சிடிக்களைக் கேட்டால் சிலிர்த்துவிடுவார்கள்.

மகத்தான ஒரு பணியைச் செய்துள்ள முத்துசாமியிடம் இது சாத்தியமானது எப்படி என்றால் பணிவுடன் புன்னகைக்கிறார். “அய்யா (ராஜாவை அவர் அப்படித்தான் விளிக்கிறார்) இசையமைத்த பாடல்கள் இசையின் உச்சம். பாடல் பதிவின்போது ஒலியமைப்பில் அவர் செலுத்திய கவனம், ரசிகர்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதாக நான் நினைக்கவில்லை. எம்பி3 என்ற ஒலிவடிவில் பாடல்கள் compress செய்யப்படுவதால் அந்த நுணுக்கங்கள் மறைந்துவிடுகின்றன. இந்தப் பாடல் ஃபைல்கள் அதிகம்போனால் 2 அல்லது 3 எம்பி தான் இருக்கும். ஆறு ட்ராக்குகளைத் தனித்தனியே நான் பிரித்து உருவாக்கியிருக்கும் அய்யாவின் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். எத்தனை பிரம்மாண்டமாக அந்தப் பாடல்கள் இசைக்கப்பட்டன என்று புரியும். இந்தப் பாடல் ஃபைல்கள் ஒவ்வொன்றும் 45 - 70 எம்பி கொண்டவை. இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன” என்கிறார் முத்துசாமி.

சீனாவுக்குத் தனியாகப் பயணம் செய்து டிடிஎஸ் தொழில்நுட்பம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொண்டு திரும்பிய அவர், இளையராஜாவிடம் இதுபற்றிப் பேசியபோது அதை அவர் மகிழ்வுடன் வரவேற்றாராம். “பின்னர் பிரசாத் ஸ்டுடியோவிலேயே இதைச் செய்துகாட்டிய பின்னர் அய்யாவுக்கு மேலும் திருப்தி. தொடர்ந்து பல பாடல்களை டிடிஎஸ்சில் செய்யச் சொன்னார்” என்கிறார் முத்துசாமி. வேண்டும் என்று கேட்பவர்களுக்குத் தனது செலவிலேயே கூரியர் மூலம் இந்த சிடிக்களை அவர் அனுப்பிவைக்கிறார். கேட்டு ரசித்த ரசிகர்கள் அவருக்கு அனுப்பிய கடிதங்களும் மின்னஞ்சல்களும் கணக்கற்றவை.

ராஜாவின் இசையை புதிய மலர்ச்சியுடன் கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள், முத்துசாமியின் வங்கிக் கணக்குக்கு தங்களால் முடிந்த தொகையை அனுப்பி வைக்கின்றனர். “நிச்சயம் பணத்தை எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. அய்யாவின் ரசிகர்கள் எனக்கு செய்யும் அன்பு இது!” என்கிறார் முத்துசாமி.

“டிடிஎஸ் தொழில்நுட்பம்தான் மனிதக் காதுகளுக்கு ஏற்ற ஒலியமைப்பாகும். இப்போது புழக்கத்தில் இருக்கும் டால்பி சர்ரவுண்ட் என்ற தொழில்நுட்பத்தில் இந்த நுணுக்கங்கள் வெளித் தெரிவதில்லை” என்று சொல்லும் முத்துசாமி இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

தான் ஆராய்ந்த அற்புதப் புதையலுக்கு உயர்ந்த அங்கீகாரம் வேண்டும் என்று ஒருவர் விரும்புவதில் ஆச்சரியம் என்ன?

தொடர்புக்கு: ilaiyaraaja.muthusamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x