Published : 02 Oct 2015 10:40 AM
Last Updated : 02 Oct 2015 10:40 AM

திரை வெளிச்சம்: முடங்கும் திரையுலகம்?

பேய்ப் படங்கள் அதிகம் வெளிவரும் இந்தக் காலத்தில் தமிழ்த் திரையுலகையே ஏதாவது பேய் அல்லது பூதம் பிடித்திருக்குமோ என்று தோன்றுகிறது. அந்த அளவுக்குச் சிக்கல்கள் தமிழ்த் திரையுலகைப் பிடித்து ஆட்டுகின்றன. பட வெளியீடு, திரையரங்க வசூல், தொலைக்காட்சி உரிமை எனப் பல்வேறு பிரச்சினைகள் பன்முகத் தாக்குதல் தொடுக்க, சில மாதங்களுக்குப் படம் வெளியிடுவதையே நிறுத்திவைக்கலாம் என்று முடிவெடுக்கும் நிலைக்குப் போயிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த முடிவுக்கு இதர சங்கங்களின் ஆதரவும் இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழ்த் திரையுலகக் கூட்டமைப்பின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மாபெரும் பொருட்செலவில் பல படங்கள் தயாராகிவரும் சூழலில், இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை, க்யூப் விலை உயர்வு உள்ளிட்ட விஷயங்களால் தமிழ்த் திரையுலகம் முடங்கும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார்கள் முன்னணித் தயாரிப்பாளர்கள். பணம் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலானவர்களால் அந்தப் பணத்தைத் திரும்ப எடுக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். எதனால் இந்த நிலை வந்தது?

இசை, தொலைக்காட்சி உரிமைகள்

ஒரு தயாரிப்பாளருக்கு முதலில் வரும் வரவு என்றால் இசை உரிமையும் தொலைக்காட்சி உரிமையும்தான். இந்த இரண்டு உரிமைகள் மூலமாகப் பணம் என்பதே இல்லை என்கிற சூழல்தான் தற்போது நிலவுகிறது. முன்பு ஒரு படம் தயாராகி வரும்போதே, பல்வேறு இசை நிறுவனங்கள் அப்படத்தின் இசையமைப்பாளரைப் பொருத்து இசை உரிமைக்கான விலையை நிர்ணயம் செய்யும். தற்போதைய நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. படத்தின் இசை முழுமையாகத் தயாரான உடன், அனைத்து இசை நிறுவனங்களுக்கும் சென்று இசையைப் போட்டுக் காட்டி வாங்க வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவ்வாறு அவர்கள் வாங்கினாலும், தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் பணம் வருவதில்லை. சிறு முதலீட்டுப் படங்கள் என்றால் அப்படத்தின் இசையை யாருமே சீந்துவதே இல்லை என்பது தனிக்கதை.

தொலைக்காட்சி உரிமம் விற்காமல் 100-க்கும் அதிகமான படங்கள் குவிந்து கிடக்கின்றன. பெரிய நாயகர்கள், இயக்குநர்களின் படங்கள் என்றால் மட்டுமே தற்போது தொலைக்காட்சி உரிமம் வாங்கப்படுகிறது. மற்ற படங்கள் வாங்கப்படுவதில்லை. முன்பு ஒரு படத்தின் உரிமையைக் கைப்பற்றத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவும். ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நடையாக நடந்தாலும், யாருமே படங்களை வாங்குவதில்லை. பெரிய படங்கள் பூஜை போடும்போதே தொலைக்காட்சி உரிமம் விற்கப்படுகிறது.

இசை, தொலைக்காட்சி உரிமம் மட்டுமன்றி க்யூப், திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகளால் தமிழ்த் திரையுலகில் ஒரு தேக்க நிலை உருவாகியுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவரத் தமிழ்த் திரையுலகக் கூட்டமைப்பின் அவசரக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, தமிழ்த் திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சிவா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் , தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பற்றிப் பேசினார். “தற்போது விளம்பரத்துக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் பெரிய தயாரிப்பாளருக்கு 2 கோடி ரூபாயும், சிறு தயாரிப்பாளருக்கு 1 கோடி ரூபாயும் சேமித்துக் கொடுத்திருக்கிறோம். நானும் படங்கள் தயாரித்துவருகிறேன். இதனால் எனக்கும் பாதிப்பு வரும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை” என்றார்.

“சினிமா வியாபாரம் தொடர்பாக அனைத்துத் தயாரிப்பாளர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் படங்கள் திரையிடுவதை நிறுத்தி வைத்துத் தற்போது நிலவும் பிரச்சினைகளை முடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடையே ஒற்றுமை வேண்டும். அதே நிலையில், நடிகர்களும் தங்களுடைய சம்பளத்தைக் குறைக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், தொலைக்காட்சி உரிமத்தைக் கணக்கில் கொள்ளாமல் திரையரங்க வசூலைக் கணக்கில் கொண்டு படங்கள் தயாரிக்குமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்புச் செலவைக் குறைப்பது பற்றிப் பேசினார். “பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கும்போது, படங்களைத் தயாரித்துவரும் தயாரிப்பாளர் களிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். படப்பிடிப்பு நாட்களைக் குறைத்தால் மட்டுமே தயாரிப்புச் செலவு குறையும். எந்த ஒரு நடிகரும் எனக்கு இவ்வளவு சம்பள உயர்வு வேண்டும் என்று கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள்தான் அதிகமாகக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கும் தயாரிப்பாளர் போக வேண்டும். அப்படிப் போனால் மட்டுமே அங்கு என்ன நடக்கிறது, எவ்வளவு செலவாகிறது என்பது தெரியவரும். தயாரிப்பாளர்கள்தான் நடிகர்கள் சம்பளத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

பட வெளியீடு இல்லை

தற்போது நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்ப்பதற்காக, அக்டோபர் 23-ம் தேதி முதல் படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இதற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

பெரிய முதலீட்டுப் படங்கள் பெரும் செலவில் விளம்பரம் செய்யும் நிலையில் சிறிய முதலீட்டுப் படங்களால் அவற்றுடன் போட்டிபோட முடியாத நிலை இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையை மாற்ற, விளம்பரங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தயாரிப்பாளர் சங்கம் விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறி அதிகப்படியாக விளம்பரம் செய்ததற்காக ‘தனி ஒருவன்’ படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்குத் தடை (ரெட்) போடும் தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிக்கலில் ‘தூங்காவனம்', ‘வேதாளம்'?

கமல் ஹாசன் நடிக்கும் 'தூங்காவனம்' மற்றும் அஜித் நடிக்கும் 'வேதாளம்' ஆகிய படங்களை நவம்பர் மாத முதல் வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். அக்டோபர் 23-ம் தேதிக்குப் பிறகு புதிய படங்கள் வெளியிடத் தடை விதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இவ்விரண்டு படங்களுக்குமே சிக்கல் எழுந்துள்ளது. இது பற்றி விநியோகஸ்தர் ஒருவரிடம் விசாரித்தபோது, “இரண்டு படத்தின் பொருட்செலவுமே அதிகம். இரண்டு படங்களுமே எல்லா ஏரியாக்களுக்குமான விநியோக உரிமைகளை விற்றுவிட்டார்கள். இதனால் வெளியீட்டில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது” என்கிறார். தயாரிப்பாளர் சங்கத்திற்குள் முதலில் ஒற்றுமை இல்லை. அவர்கள் ஒரு முடிவு எடுத்தால், அதற்கு மற்றொரு தயாரிப்பாளர் எதிர்ப்பு தெரிவிப்பார். இது காலம் காலமாக நடைபெற்றுவருகிறது. இதையெல்லாம் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை என்கிறார் அலட்டிக்கொள்ளாமல்.

என்ன நடக்கப்போகிறது என்பது பேய்ப் படங்களைவிடவும் மர்மம் நிறைந்த ஒன்றாகத்தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x