Published : 03 Dec 2016 09:25 AM
Last Updated : 03 Dec 2016 09:25 AM

திரை விமர்சனம்: சைத்தான்

தினேஷ் (விஜய் ஆண்டனி) ஐ.டி. நிறுவனத்தில் பணி யாற்றுகிறார். அவருக்கு ஐஸ் வர்யாவுடன் (அருந்ததி நாயர்) திருமணம் ஆன சில நாட்களில், மண்டைக்குள் விநோதமான குரல்கள் கேட்கின்றன. அந்தக் குரல்களின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார் விஜய் ஆண்டனி. இது விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மனநல மருத்துவரின் சிகிச்சை வேறு சில ‘உண்மை’களைப் புலப் படுத்துகிறது. விடாமல் துரத்தும் அந்தக் குரலின் பேச்சைக் கேட்டு, ‘ஜெயலட்சுமி’யைத் தேடி அலைகிறார் விஜய் ஆண்டனி. யார் அந்த ஜெயலட்சுமி? விஜய் ஆண்டனிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? இதில் அவர் மனைவிக்கு என்ன தொடர்பு ஆகியவைதான் ‘சைத்தான்’ சொல்லும் கதை.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ என்ற நாவலின் சில பகுதிகளைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அறிமுகப் படத்தையே சைக்கலாஜிக்கல் திகில் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. திகிலும் சுவா ரஸ்யமுமான சம்பவங்களால் இடைவேளை வரை படம் விறு விறுப்பாக நகர்கிறது. ஆனால், முதல் பாதி எழுப்பும் எதிர்பார்ப்பு களை இரண்டாம் பாதி புஸ்வாண மாக்கிவிடுகிறது.

கோவையற்ற காட்சிகள், நாயகியின் பாத்திரப் படைப்பில் இருக்கும் தெளிவின்மை, முன் ஜென்ம ஞாபகத்துக்குச் சொல்லப் படும் காரணம் போன்ற பலவீன மான காட்சிகள் படத்தின் மீதான ஈர்ப்பைக் கரையச்செய்கின்றன. கடைசிக் கட்டத்தில் வில்லனை அறிமுகப்படுத்துவது செயற்கை யாக இருக்கிறது.

பரிசோதனைக்காக மனித உடலில் செலுத்தப்படும் மருந்து ஏற்படுத்தும் விளைவுகள் திரைக் கதைக்குத் தேவையான விதத்தில் வசதியாக மாறுகின்றன. ஜெய லட்சுமியைத் தேடித் தஞ்சாவூர் செல்லும் விஜய் ஆண்டனி, அடுத்த காட்சியில் மருத்துவமனையில் இருக்கிறார். மருந்து மாஃபியா கும்பலால் அனுப்பி வைக்கப்படும் நாயகியின் பின்னணி என்ன வென்று தெரியவில்லை. இப்படிப் பல காட்சிகளுக்குத் தெளிவான காரணம் இல்லை. விஜய் ஆண்டனியை, மனநல மருத் துவரே ‘முன் ஜென்ம’த்துக்கு அழைத்துச் செல்வது ஏற்கும்படி இல்லை. கொடூர வில்லனைக் கடைசியில் காமெடியன் போலக் காட்டுவது அபத்தம்.

சாஃப்ட்வேர் பொறியாளராக வும் தமிழாசிரியராகவும் வரும் விஜய் ஆண்டனி, ஆக்‌ஷன் அவதாரமும் எடுக்கிறார். நடிப்பில் குறைவைக்கவில்லை. ஆனால், கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் அவரது முகபாவனைகள், பேச்சு, உடல்மொழி எல்லாமே ஒரே மாதிரி இருப்பது சலிப்பூட்டுகிறது. நாயகியாக வரும் அருந்ததி நாயருக்குப் பொருத்தமான வேடம். குழப்பத்தையும் கோபத் தையும் நன்றாக வெளிப் படுத்துகிறார்.

விஜய் ஆண்டனியின் இசை யில் இரண்டு பாடல்களும் கேட்க வைக்கின்றன. ‘ஜெயலட்சுமீஈஈ...’ என படம் முழுவதும் பின்தொட ரும் விசித்திரமான ஒலி செவிகளை ஈர்க்கிறது. பிரதீப் காளிபுரயாத்தின் ஒளிப்பதிவு படத்தின் தொனிக்கு ஏற்ப அமைந்துள்ளது. வீரா செந்தில்ராஜின் எடிட்டிங்கில் த்ரில்லர் படங்களுக்கே உரிய எடிட்டிங் காணப்படவில்லை.

சவாலான கதைக்கு இழுவை யான திரைக்கதை சைத்தானைத் தடுமாற வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x