Published : 14 Sep 2014 10:25 AM
Last Updated : 14 Sep 2014 10:25 AM

திரை விமர்சனம்: சிகரம் தொடு

ஏடிஎம் கொள்ளை பற்றிய பத்திரிகைச் செய்தியின் பக்கங்கள் புரள, கேமரா ஏடிஎம் இயந்திரத்துக்குள் புகுந்து பின் நம்பர் எப்படிப் பணத்தை வரவழைக்கிறது என்கின்ற தொழில்நுட்பத்தை மிக நுட்பமாகக் காட்ட, படத்தின் டைட்டில் ஓடுகிறது. அட! சமீபத்திய பரபரப்பான பிரச்சினையான ஏடிஎம் கொள்ளையைக் கதைக்களமாகக் கொண்ட படமா என்னும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் மட்டும் கேட்க, மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸிலிருந்து மருத்துவர்கள் யாரையோ பதற்றத்தோடு கொண்டுசெல்கிறார்கள். அவர் உடம்பிலிருந்து குண்டு வெளியே எடுக்கப்படுகிறது. கேமிரா மேலே தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார விளக்கின் ஒளிக்குள் செல்ல, “சில மாதங்களுக்கு முன்பு” என்று பிளாஷ்பேக் தொடங்குகிறது.

சிறந்த போலீஸ் அதிகாரியாகச் செயல்பட்டு ஒரு காலை இழந்த செல்லப்பா (சத்யராஜ்) தன் மகன் முரளி பாண்டியனை (விக்ரம் பிரபு) போலீஸ் அதிகாரியாக்க துடிக்கிறார். போலீஸ் வேலையை வெறுக்கும் மகன், அப்பாவின் ஆசையைத் தட்ட முடியாமல் வேண்டா வெறுப்பாகப் போலீஸ் அதிகாரியாக ஆகிறான். போலீஸ் வேலையை வெறுக்கும் டாக்டர் அம்புஜத்தை (மோனல் கஜ்ஜார்) காதலிக்கிறான்.

அட, டைட்டிலில் காட்டிய ஏடிஎம் கொள்ளை எங்கப்பா? அதுவும் இடையிடையே தலை காட்டுகிறது. ஒருமுறை ஏடிஎம் சென்டருக்கு வரும் கதாநாயகனின் தாத்தா, அப்பாவைக் கொள்ளையர்கள் தாக்குகிறார்கள். செல்லப்பா கொள்ளையர்களைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். கொள்ளையர்கள் செல்லப்பாவைச் சுட்டுவிட்டு அம்புஜத்தையும் கடத்திச் சென்று தலைமறைவாகிறார்கள்.

முரளி கொள்ளையர்களைக் கண்டு பிடித்தானா? தன் காதலியை மீட்டானா?

கொள்ளை நடப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிக்கும் காட்சிகளில் புத்திக்கூர்மை பளிச்சிடுகிறது. புலன் விசாரணை விறுவிறுப்பாகக் காட்டப்படுகிறது. ரகசிய எண்ணைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்கிம்மர் டிவைஸ், பின் ஹோல் கேமரா, போலி கார்டுகள் உற்பத்தி என ஏடிஎம் கொள்ளையின் ஆணி வேரை வெளியே உருவிக் காட்டுகிறது படம்.

ஏடிஎம் கொள்ளை விஷயத்தைத் துல்லியமாகச் சித்தரிக்க ஏகப்பட்ட உழைப்பைச் செலுத்தியிருக்கும் இயக்குநர், கொள்ளை புலனாய்வு என்னும் விறுவிறுப்பான கட்டத்துக்கு வர அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். கொள்ளை விவகாரத்தில் தொடங்கும் படம் கதாநாயகன் போலீஸ் ஆவானா மாட்டானா என்பதிலேயே பாதிக்கு மேல் ஓடுகிறது. இடையில் தல யாத்திரை, காதல் என்று ஏகப்பட்ட சுற்றல்கள்.

விக்ரம் பிரபு, போலீஸ் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். சண்டையெல்லாம் நன்றாகப் போடுகிறார். ரொமான்ஸ், சென்டிமென்ட் காட்சிகளில் ஒட்டாமல் இருக்கிறார். அப்பா-மகன் சென்டிமென்ட் சத்யராஜின் நடிப்பால் ஓரளவு மனதைத் தொடுகிறது. மோனல் கஜ்ஜாரின் கதாபாத்திரம் வெறும் ஸ்டிரியோடைப். சதீஷ் முதலான காமெடி நடிகர்கள் நேரத்தைக் கடத்த மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள்.

இமானின் பாடல்களில் ‘பிடிக்குதே’ பாடல் மட்டும் கொஞ்சம் பிடிக்கிறது. கொள்ளையின் போது பின்னணி இசை வெறும் இரைச்சல். மற்ற காட்சிகளில் இதம். விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. வட இந்தியக் காட்சிகளும் இரவுக் காட்சிகளும் பொருத்தமான விதங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

இருபது நிமிடத்துக்கு மட்டும் கதை எழுதிவிட்டு இரண்டரை மணி நேரம் படம் காட்டியிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x