Published : 03 May 2016 08:57 AM
Last Updated : 03 May 2016 08:57 AM

திரை விமர்சனம்: களம்

ஒரு பழைய ஜமீன் வீட்டை அபகரிக்கும் ரியல் எஸ்டேட் தாதா (மதுசூதன் ராவ்), அமெரிக்கா விலிருந்து திரும்பும் தனது மகனுக்கு (அம்ஜத் கான்) அதைப் பரிசாக அளிக்கிறார். அம்ஜத், தன் மனைவி (லட்சுமி ப்ரியா), பத்து வயது மகள் ஆகியோருடன் அந்த வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார். அங்கே அமானுஷ்ய சக்திகள் இருப்பதை லட்சுமிப்ரியா உணர்கிறார். முதலில் அதை நம்ப மறுக்கும் அம்ஜத், பிறகு கண்கூடாகக் கண்ட பிறகு அந்த வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்கிறார்கள். மந்திர வாதி சீனிவாசனும் கலை யரங்கத்தின் பொறுப்பாளர் பூஜாவும் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அந்த அமானுஷ்ய சக்திகள் யார்? அம்ஜத் குடும்பத்தால் வெளியேற முடிந்ததா?

படத்தின் திரைக்கதை சரியான பாதையில் பயணிக் கிறது. பயணத்தின் முடிவில் வரும் திருப்பமும் ‘அட’ என்று சொல்ல வைக்கிறது. ஆனால் பயமுறுத்தும் காட்சிகளில் புதுமை இல்லை. தவிர, ஒரே மாதிரியான பூச்சாண்டிக் காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன. 103 நிமிடங்களே ஓடும் படம் இப்படிப் பொறு மையை சோதிப்பதால் படத்தின் முடிவில் வரும் திருப்பம் போதிய வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தாமல் போகிறது.

அசரவைக்கும் இறுதிக் கட்டத் திருப்பத்தை வைத்துக் கொண்டு எதற்கு முக்கால் வாசிப் படத்தின் திரைக் கதையை முஸ்தீபுகளிலேயே கதாசிரியர் சுபிஷ் சந்திரனும் இயக்குநர் ராபர்ட் ராஜும் வீணடித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வீட்டில் தனியாகத் தங்கும் மதுசூதன் ராவுக்கு ஏற்படும் அனு பவம் மட்டுமே கவனத்தை ஈர்க்கிறது.

நட்சத்திரத் தேர்வு சரி யாக அமைந்துள்ளது. அனேக மாக எல்லாக் கதாபாத்தி ரங்களுக்கும் உரிய முக்கியத் துவம் கிடைத்திருக்கிறது. தாதாவாகவும் முரட்டு அப்பாவாகவும் மதுசூதன் ராவ், அப்பாவின் செயல்பாடுகள் பிடிக்காமல் ஒதுங்கிய மகனாக அம்ஜத் கான், அந்நியர்களை எளிதில் நம்பி விடும் லட்சுமிப்ரியா, வேலைக் காரியாக வரும் கனி, நவீன பேயோட்டியாக சீனிவாசன், அமானுஷ்ய சக்திகளைப் பற்றி விளக்கும் பூஜா என அனைவரும் தத்தமது கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருகிறார்கள். திடீர் ஆச்சரியமாக நாசர் தோன்றும் ஓரிரு காட்சிகள் அழுத்தமாக மனதில் பதிகின்றன.

மிகப் பழைய வீட்டை அதன் பாரம்பரிய அழகு கெட்டுவிடாத வண்ணம் நவீனமாக மாற்றிய கலை இயக்குநர் செந்தில் ராகவன், அந்த வீட்டின் ஸ்டோர் ரூமையும் அங்கிருக்கும் பொருட்களையும் அங்கே பொருத்திய விதத்திலும் படத்துக்கு முதுகெலும்பாக உதவியிருக்கிறார். ஒளிப் பதிவாளர் முகேஷ் கதைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். இருள் நிறைந்த காட்சிகளைக்கூட கேமரா துல்லியமாகப் பதிவுசெய்கிறது.

இசை பிரகாஷ் நிக்கி. மிகப் பெரிய பங்களிப்பைத் தந்திருக்க வேண்டிய இசை தன் பங்கைச் சரியாகச் செய்யவில்லை.

தரமான திகில் படம் தர முயன்ற இயக்குநர் புதிய காட்சிகளையும் விறுவிறுப்பான சம்பவங்களையும் உருவாக்கத் தவறிவிட்டார். கடைசிக் கட்டத் திருப்பம், கலை இயக்கம், நடிப்பு ஆகியவை படத்தை ஓரளவு காப்பாற்றுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x