Published : 04 Jul 2016 08:28 AM
Last Updated : 04 Jul 2016 08:28 AM

திரை விமர்சனம்: அப்பா

சமுதாயம், அரசாங்கம், கல்விமுறை எனப் பல சிக்கல்களைத் தன் படங்களில் பேசிவரும் சமுத்திரக்கனி, அப்பா படத்தில் எடுத்துக்கொண்ட விஷயம் ‘குழந்தை வளர்ப்பு’.

நெய்வேலியில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தயாளன் (சமுத்திரக்கனி). தன் மகனை இயல்பாக வளர்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவர் மனைவி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். எப்போது, எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்பது முதல் எல்லா விஷயங்களும் அவர்களுக்குள் மோதலை உருவாக்குகின்றன. ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி தன் மகனைத் தனியே வளர்க்க வேண்டிய நிலை உருவாகிறது.

பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவோ தன் மகன் மீது தன் ஆசைகளையும் கனவுகளையும் சுமத்துகிறார். ‘வெற்றிகரமான’ வாழ்க்கைக்குச் சிறு வயதிலிருந்தே அவனைத் தயார்படுத்தத் தொடங்கிவிடுகிறார். இன்னொரு அப்பாவான நமோ நாராயணன் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தன் மகனை ‘இருக்கிற இடம் தெரியாமல்’ வளர்கிறார்.

இப்படி வெவ்வேறு முறைகளில் வளரும் குழந்தைகளின் பயணங்கள் எப்படி அமைகின்றன என்பதே ‘அப்பா’.

“இந்த உலகம் ரொம்ப அழகானது” என்று தன் மகனிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. “இந்த உலகம் ரொம்ப மோசமானது” என்று சொல்லித் தன் மகனை வளர்க்கிறார் தம்பி ராமையா. இந்த முரண்பாடுதான் மொத்தப் படமும். குழந்தையை வளர்க்கும் முறையில் இன்று உள்ள சிக்கல்கள் பலவற்றையும் பதின் பருவத்து இனக் கவர்ச்சி உட்பட படம் அலசுகிறது.

பிரச்சினை என்னவென்றால், எல்லாவற்றையும் வசனங்களின் மூலமாக அல்லது நாடகத்தனமான சம்பவங்கள் மூலமாகக் கையாள்கிறது. பிரச்சினைகளையும் அவற்றின் விளைவுகளையும் முன்வைக்கும் விதத்தில் திரைப்படம் என்னும் கலையின் அம்சங்கள் குறைவாகவும் பட்டிமன்ற அம்சங்கள் அதிகமாகவும் உள்ளன.

சம்பவங்களும் திருப்பங்களும் இயல்பாக இல்லை. காது கொள்ளாத அளவுக்குப் புத்திமதி சொல்லப்படுகிறது. தீவிரமான விஷயத்தைப் பேசும் திரைப்படம், தான் கையாளும் விஷயத்தைப் பார்வையாளர்களின் அனுபவமாக மாற்ற வேண்டும். ‘அப்பா’ படம் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தைப் ‘பேசுகிறது’. அனுபவமாக மாற்றவில்லை.

சிறார்களின் உலகை நெருங்கிப் பார்க்கும் முயற்சி பாராட்டத்தக்கது. அவர்கள் கனவுகளையும் ஏக்கங்களையும் பிரதிபலிக்கும் இடங்கள் இயல்பாக உள்ளன. குறிப்பாகத் தம்பி ராமையாவின் பையனின் அனுபவங்கள் நன்கு உருப்பெற்றிருக்கின்றன. நமோ நாராயணனின் பையனின் பாத்திரம் கலகலப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தன் அணுகுமுறையில் தெளிவு, நெருக்கடிகளில் உடைந்துபோகாத உறுதி, சிறுமை கண்டு பொங்குவது, அடுத்த தலைமுறையினரிடம் இயல்பாக உரையாடும் பக்குவம் ஆகியவற்றை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. கண்களில் கண்ணீர் தளும்பத் தெருத்தெருவாகத் தன் மகனை தேடும் காட்சிகளில் நெகிழவைக்கிறார்.

இவருக்கு மறு துருவமாக வரும் தம்பி ராமையாவும் பட்டையைக் கிளப்புகிறார். கண்டிப்பும் பதற்றமும் மிகுந்த அப்பாவாக இவரது உடல் மொழியும் பேச்சும் அட்டகாசம். படம் முழுவதும் பார்வையாளர்களின் கோபத்துக்கு இலக்காகும் இவர், கடைசிக் காட்சியில் ஒடுங்கிப்போய் உட்காரும்போது பார்வையாளர்களின் அனுதாபத்தையும் ஈர்த்துக்கொள்கிறார்.

அறிமுக நடிகை பிரீத்தி, மனக் கொதிப்பை நன்கு வெளிப்படுத்துகிறார். வினோதினி, கையறு நிலையைக் கச்சிதமாகக் காட்டிவிடு கிறார். ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், நீலநந்தினி, காப்ரியல், ராகவ், நசாத் போன்ற சிறுவர்களின் நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார் நசாத்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் நெய்வேலியின் சூழலை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இளையராஜாவின் பின்னணி இசை சில காட்சிகளில் கதைக்கு வலு சேர்க்கிறது.

பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் ஆகிய மூன்று தரப்பினருக்குமான செய்திகள் படத்தில் இருக்கின்றன. அவை மிகுதியும் ‘செய்தி’யாகவே இருப்பதுதான் பிரச்சினை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x