Last Updated : 04 Mar, 2016 12:32 PM

 

Published : 04 Mar 2016 12:32 PM
Last Updated : 04 Mar 2016 12:32 PM

திரைவிழா: இசையின் வரலாற்றுத் தருணம்!

இளையராஜா உருவாக்கிய இசை யுலகம் பிரபஞ்சத்தைப் போல் விரிவானது. அதில் புதிய கிரகங்களைத் தேடி அடையும் பரவச உணர்வை ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு ரசிகன் அனுபவித்துக்கொண்டே இருக்கிறான். ஆயிரம் படங்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. லட்சக்கணக்கான ரசிகர்களின் உணர்வுடன், நினைவுகளுடன் கலந்துவிட்ட இசைத் தருணங்களின் தொகுப்பு.

அந்தச் சாதனைக்கான மரியாதை செய்யப்பட வேண்டும் எனும் ரசிகனின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாகவே ‘இளையராஜா 1000’ எனும் மாபெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது விஜய் டி.வி. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்துக்குள் அன்று திருவிழாக் கோலம்தான். நடுத்தர வயதினர், இளைஞர்கள், வயதானவர்கள் என்று எல்லா வயதினரையும் பார்க்க முடிந்தது. வளாகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனரில் புன்னகைத்துக்கொண்டிருந்த இளையராஜாவின் படத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பலர் வரிசையில் நின்றதைப் பார்த்தபோது, காலத்தைக் கடந்த கலைஞனின் பிரம்மாண்டம் புரிந்தது.

அந்தத் திறந்த வெளி அரங்கில் மேடைக்கு அருகில் அமரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் நான்கு புறமும் பெரிய திரைகளில் நிகழ்ச்சி திரையிடப்பட்டது ஓர் ஆறுதல். முறைப்படி நிகழ்ச்சி 7 மணிக்கு மேல்தான் தொடங்கியது. அதற்கு முன் சில பாடல்கள் பாடப்பட்டன. ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலின் முகப்பு இசையுடன், இந்நிகழ்ச்சி தொடர்பான காணொளிக் காட்சியில் இளையராஜா தோன்றியபோது ரசிகர்கள் சிலிர்ப்புடன் கைதட்டினர். ‘மெளன ராகம்’, ‘நாயகன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கோவைகளை ராஜாவின் இசைக் குழு வாசித்தது.

அரசன் ஒருவனுக்குரிய மரியாதையுடன் ராஜாவின் வருகையை ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘ராம் ராம்’ என்று ‘ஹே ராம்’ படத்தின் இசை ஒலிக்க கம்பீரமாகக் காரிலிருந்து இறங்கிய ராஜா, பிறகு கடைசி வரிசையில் இருந்த ரசிகர்கள் வரை நேரில் நடந்து சென்றார். தனது சாதனைக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு அவர் காட்டிய மரியாதை அது. ஸ்மார்ட்போன்களின் ப்ளாஷ் மழையில் நனைந்த பின்னர், மேடையேறிய அவரது முகம் கனிந்திருந்ததையும், கண்கள் பனித்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

கிட்டாரிஸ்ட் பிரசன்னா இளையராஜாவின் தீவிர ரசிகர். அவரது விருப்பப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ராஜாவின் பாடல்களே அவரது ரசனையைச் சொல்லும். அமெரிக்காவைச் சேர்ந்த டிரம்மர், கிட்டாரிஸ்ட்டுடன் இணைந்து ‘ஏ… உன்னைத்தானே’, ‘அந்திமழை பொழிகிறது’, ‘தூங்காத விழிகள்’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ஆகிய பாடல்களை பிரசன்னா இசைத்தபோது, ராஜா பாடல்களின் யுனிவெர்சல் தன்மையை உணர முடிந்தது.

கவுதம் மேனன், கார்த்திக்குடன் இணைந்து ராஜாவின் பாடல்களை இசைத்தபோதும் பிரசன்னா அசத்தினார். ’கோடைகாலக் காற்றே’, ‘நீதானே எந்தன் பொன் வசந்தம்’ அந்தப் பாடல்கள் ‘மெட்லி’யாக அல்லாமல் முழுமையாகப் பாடப்பட்டிருந்தால் அற்புதமாக இருந்திருக்கும். தன்னிடம் இசை கற்றுக்கொள்ள அதிகாலை நேரத்தில் ராஜா தன் வீட்டுக்கு வந்தத் தருணங்களை அவரது குருவான டி.வி. கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். ஜென்ஸி, உமா ரமணன், ஷைலஜா, சித்ராவுடன் பி.சுசீலாவும் மேடையேறினார். சுசீலாவைத் தவிர மற்றவர்களின் இசை வாழ்க்கை ராஜாவால்தான் உருவாக்கப்பட்டது என்று ஷைலஜா சொன்னபோது மொத்தக் கூட்டமும் ஆமோதித்தது.

பரவசமும் பதற்றமும் நிறைந்த குரலில் ‘தெய்வீக ராகம்’ பாடலை ஜென்ஸி பாடிய அந்த சில வினாடிகள் ரசிகர்களின் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டிருக்கும். முதல் ரசிகன் என்ற முறையில் ராஜாவின் சிறப்புகளைப் பஞ்சு அருணாச்சலம் மனம் திறந்து பேசினார். கேரளாவிலிருந்து வந்திருந்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு அற்புதமான வீச்சுடன் ராஜாவின் பாடல்களை இசைத்துக் காட்டியது. நிகழ்ச்சியின் இறுதியில் ‘மருதநாயகம்’ படம் மீண்டும் தொடங்கப்படுவதை சூசகமாகச் சொன்னார் கமல்.

ஏற்கெனவே யூட்யூபில் கேட்டிருந்தாலும் ‘பொறந்தது பனையூரு மண்ணு’ பாடலை ’மருதநாயகம்’ படக் காட்சிகளுடன் பார்த்தபோது அதன் வீச்சு பல மடங்கு வெளிப்பட்டது.

இந்நிகழ்ச்சி தொடர்பான பல பேஸ்புக் பதிவுகள், இணைய இதழ்களின் செய்தித் தொகுப்புகள் சொல்வதுபோல், மாபெரும் இசை நிகழ்ச்சியை எதிர்பார்த்து வந்திருந்த பல ரசிகர்கள், பாராட்டு விழா என்ற பெயரில் பலர் பேசித் தீர்த்ததில் அதிருப்தியடைந்தனர். ராஜாவின் பாடல்களை அவரது இசைக் குழுவே இசைப்பதை நேரடியாகப் பார்ப்பது அற்புதமான அனுபவம். அந்த எதிர்பார்ப்பில்தான் ரசிகர்கள் வந்திருந்தனர் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உணரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

இடையிடையே தொழில்நுட்பக் கோளாறுகள் வேறு. எஸ்.பி.பி. வந்த பின்னர்தான் மேடையே நிறைந்ததுபோல் இருந்தது. அப்போதே மணி 11-க்கு மேலாகிவிட்டது. தேய்பிறையே இல்லாத பாடும் நிலா அல்லவா, மனிதர் அசத்திவிட்டார். அவர் சென்ற பின்னர் மீண்டும் ஒரு வெற்றிடம். அதைப் பூர்த்தி செய்ய ஒரு உஷா உதுப் தேவைப்பட்டார்.

இளையராஜாவின் இசைப் பயணத்தில் முக்கிய வழித் துணையான ஜானகியைப் பற்றி யாரும் பேசாதது ஒரு குறை. நிகழ்ச்சி முழுவதுமே சலிப்பூட்டும் நிகழ்வுகளுக்கும் அதை மறக்கடிக்கும் சிலிர்ப்பூட்டும் சம்பவங்களுக்கும் இடையிலான ஊடாட்டமே. பல குறைகள் இருந்தாலும், ஆயிரம் படங்களைக் கடந்த கலைஞனுக்காக நடத்தப்பட்ட இந்த விழாவும், இந்தத் தருணமும் மிக முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை.

படங்கள்: க.ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x