Last Updated : 26 Feb, 2016 11:52 AM

 

Published : 26 Feb 2016 11:52 AM
Last Updated : 26 Feb 2016 11:52 AM

திரையில் மிளிரும் வரிகள் 3 - யாரிடம் சென்று முறையிடுவது?

பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தின் கதாநாயகியின் பெயர் சூறாவளி. கரகாட்டக்காரியான அவளுடைய காலில் ஆணி குத்தி குருதி பெருக்கெடுத்தோடி நடக்க முடியாத நிலையிலும் சூறாவளி போல் வெறி கொண்டு ஆடிக் கீழே சாய்கிறாள்.

“முதல்ல எம் மாமன சாப்பிட வை. அதுக்கு பசிண்ணு வந்தா நான் அம்மணமாகக்கூட ஆடுவேன்” என்கிறாள். அவளைத் தூக்கிச் சுமக்கிறான் கதாநாயகன் சன்னாசி. பின்னணியில் “பாருருவாய பிறப்பற வேண்டும்.” என்ற திருவாசகப் பதிகம் மாயாமாளவகௌளையில் பெண் குரலில் ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து “பத்திலனேனும் பணிந்தலனேனும்” பதிகம் ஆண் குரலில்.

சூறாவளிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக அவளை வேறொருவனுக்கு திருமணம் செய்து வைக்கிறான் சன்னாசி. திருமணத்தின்போது மீண்டும் அதே இரண்டு பதிகங்கள். ஆனால், முதலில் ஆண் குரல். அடுத்த பதிகம் பெண் குரலில்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள். சூறாவளியின் கண்களில் தாரையாப் பெருகும் நீரைக் கண்டதும் சன்னாசியின் முகத்தில் வடிந்தோடும் கண்ணீர் ஒரு கணம் பார்வையாளர்களை உலுக்கிவிடுகிறது. திரைப்படக் காட்சிப்படுத்தலின் வலிமையா அல்லது திருவாசக வரிகளின் வலிமையா என்பதை நம்மால் பிரித்தறிய முடியவில்லை. தெரிந்தேதான் திருவாசகத்தை இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. ‘தாரை தப்பட்டை’ அவருடைய ஆயிரமாவது திரைப்படம்.

இசையும் பாடலும் ஒருபுறமிருக்க, தி. ஜானகிராமனின் ‘செய்தி’ வண்ணநிலவனின் ‘ஆடியபாதம்’ ஆகிய சிறுகதைகளைப் படித்தவர்களுக்கு பாலாவின் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தைப் புரிந்துகொள்வது எளிது.

செவ்வியல் இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் இடையில் தொடர்ந்து நடக்கும் முரண்களை, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் மூலமாகக் கச்சிதமாகக் கதையாக்கியிருக்கும் ஜானகிராமன் இறுதியில் செவ்வியல் இசையின் மேன்மையைச் செய்தியாக்கி முடித்திருப்பார்.

‘ஆடியபாதம்’ முழுக்க முழுக்க நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் ஒன்றாகக் கரகம் ஆடி ஓய்ந்துபோன மரகதமும் சிதம்பரமும் மீண்டும் சந்திக்கும் நெகிழ்வான கதை. வறுமையை மட்டுமே இருவரும் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்.

கர்நாடக இசை செழித்து வளர்ந்த தஞ்சைத் தரணியின் வடக்கு வீதியிலும் இன்னும் சில பகுதிகளிலும் ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கிறார்கள். தெருக்களின் ஓரங்கள் முழுவதும் அவர்களின் விளம்பரப் பலகைகள் காணப்படும். ‘தாரை தப்பட்டை’யின் களமும் அதுதான்.

திரைப்படத்தில் இளையராஜா பயன்படுத்திருக்கும் இரண்டு பதிகங்களுமே எண்ணப்பதிகத்தின் கீழ் வருகின்றன. மாணிக்கவாசகர் நாயகி பாவத்திலேயே இப்பதிகங்களைச் செய்து அருளியிருக்கிறார்.

திருவாசகத்துக்கு உரையெழுதிய திருவாவடுதுறை ஆதின வித்வான் ச. தண்டபாணி தேசிகர், “ ‘பாருருவாய பிறப்பற வேண்டும்’ பதிகத்தின் உட்கிடக்கை என்னவென்றால், ‘உன் மெய்யடியார்கள் கூட்டத்தின் நடுவே ஓருருவாக விளங்கும் நின் திருவருளைக் காட்டி என்னையும் உய்யக் கொண்டருளவாயாக’ என்பதுதான்” என்கிறார்.

சன்னாசியும் சூறாவளியும் ஒரு குழுவாகத்தான் இருக்கிறார்கள். பச்சை பச்சையாக, இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசுகிறாள் சூறாவளி. பொதுவாகவே கரகாட்டம் ஆடுபவர்கள் பாடுவதும் பேசுவதும் பெரும்பாலும் இரட்டை அர்த்தம் தொனிக்கத்தான் இருக்கும். அவள் தன் உட்கிடக்கையைப் பலமுறை தெரிவித்தும் சன்னாசி கண்டுகொள்ளவில்லை. காலில் காயத்தோடு ஆடிச் சாயும் தருணம் அவளின் காதலை அவன் உணர்ந்துகொள்வதற்கு வகை செய்கிறது. “என்னையும் உய்யக் கொண்டருளே” என மாணிக்கவாசகர் கதறுவது இக்காட்சிக்குப் பொருந்திவருகிறது.

ஆடிப் பிழைப்பதற்காக அந்தமான் வந்த சன்னாசியும் அவன் குழுவினரும் படும் பாட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இப்பிறவியிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று எல்லா மனிதர்களுமே இப்பதிகத்தையே பாடுவார்கள்.

இரண்டாவது பதிகத்தில் “யான் தொடர்ந்துன்னை இனிப்பிறிந்தாற்றேனே” என்கிறார் அடிகள். காதலனைப் பிரிந்து வேறொருனைத் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பெண் வேறு எதை வேண்டுவாள்? “முதல்வனே இது முறையோ” என்கிறார் மாணிக்கவாசகர். இப்பிறவியில் இனியொரு மானுடனைச் சிந்தையாலும் தொடேன் என்று கங்கணம் கட்டியிருக்கும் சூறாவளியை, வேறொருவனுக்குக் கட்டிவைத்தால் அவள் வேறு யாரிடம் முறையிடுவாள்?

படத்தின் தொடக்கத்திலேயே கிளிக்கண்ணியில் தொடங்கி அப்படியே ‘தாரை தப்பட்டை’ முழக்கத்துக்கு இசையை நகர்த்தும் இளையராஜா, படம் முழுக்க செவ்வியல் இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் பாலம் அமைக்கிறார். இருப்பினும் அவர் இசையில் ஒலிக்கும் திருவாசகப் பதிகங்கள் பக்தி இலக்கியத்தின் கூறுகளை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. அதுவும் மாயாமாளகௌளையில் இதுவரை அவர் புரிந்திருக்கும் ஜாலங்களுக்கு (பூங்கதவே தாழ் திறவாய், மருதமரிக்கொழுந்து வாசம், காதல் கவிதைகள் படித்திடும் நேரம், மாசறு பொன்னே வருக, அந்தப்புரத்தில் ஒரு மகராணி) மேலாகவே இப்பதிகங்கள் விளங்குகின்றன. திருவாசகத்தில் இன்னொரு பதிகமான “தந்தது உன்தன்னையில்” “யான் இதற்கு இலனோர் கைம்மாறே” என்கிறார் மாணிக்கவாசகர்.

இளையராஜாவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

தொடர்புக்கு: bagwathi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x