Last Updated : 19 Feb, 2016 11:22 AM

 

Published : 19 Feb 2016 11:22 AM
Last Updated : 19 Feb 2016 11:22 AM

திரையில் மிளிரும் வரிகள் 2: அமுதமும் மோகமுள்ளும்

தி. ஜானகிராமனின் ‘மோகமுள்' நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது இளையராஜா இசையமைத்த ‘சொல்லாயோ வாய் திறந்து' என்ற பாடல் பிரிவின் ஏக்கத்தைப் பாடுகிறது. சண்முகப்பிரியாவின் ரசத்தை அப்படியே பிழிந்து கொடுத்துவிட்டார் இசைஞானி. பொதுவாக பக்தியை வெளிப்படுத்தும் பாடலுக்குத்தான் சண்முகப்பிரியாவை எடுத்துக்கொள்வார்கள். அந்த ராகம் பக்தியை வெளிப்படுத்தும் அளவுக்கு இன்னொரு ராகத்தால் முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்களில் காதல் பாடல்கள் சண்முகப்பிரியாவில் இடம் பெற்றிருக்கின்றன. பக்தியின் ஒரு வெளிப்பாடுதானே காதலும் காமுமும்.

சொல்லாயோ வாய் திறந்து வார்த்தையொன்று சொல்லாயோ வாய் திறந்து

நில்லாயோ நேரில் வந்து நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து

ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை...

மனத்தை ஊஞ்சலோடு ஒப்பிடும் பாடல் வரிகள் ஏற்கெனவே ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் இடம் பெற்றது. ‘ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி நாளும் மாறுகின்ற உன் மனம்' என்று தன்னைக் கைவிட்ட கதாநாயகியைச் சாடுகிறான் கதாநாயகன். ஆனால் மோகமுள் கதாநாயகியின் மனமும் கதாநாயகனின் மனமும் ஒருவரை ஒருவர் தாலாட்டவே ஊஞ்சலாய் அலைந்து மன்றாடுகின்றன.

வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ். ஜானகியும் மலையாளப் பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாரும் பாடியிருக்கிறார்கள். இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞரான அருண்மொழியும் இப்பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் அது இடம் பெறவில்லை.

ஆகாய சூரியன் மேற்கினில் சாய

ஏகாந்த வேளையில் மோகமுள் பாய

தூண்டிலில் புழுவாக திருமேனி வாட

தாமதம் இனி ஏனோ இருமேனி கூட

அந்தி வரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்

என்று வரும் இன்ப சுகம் ஊன் உருகும் உருகும் தினம்

நாள் முழுதும் ஓர் பொழுதும் உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்.

சொல்லாயோ வாய் திறந்து

அழகு கொட்டிக் கிடக்கும் இளம் பெண் தங்கம்மாவின் கதறலே இவ்வரிகள். வறுமையின் காரணமாகக் கிழவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். கிழவனோ வாயில் சளுவாய் ஒழுக உறங்கிக்கொண்டிருக்கிறான். கதாநாயகன் பாபு ஏற்கெனவே அவளோடு உறவு கொண்டிருந்தாலும், தற்போது அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விலகி நிற்கிறான். அவன் மனமோ யமுனாவை நினைத்து “சொல்லாயோ வாய் திறந்து” எனப் பாடுகிறது.

‘மாலையும் வந்தது மாயன் வாரான்' என்கிறார் பராங்குசநாயகியாகத் தன்னை வரித்துக்கொள்ளும் நம்மாழ்வார். பிரிந்திருக்கும் காதலர்களுக்கு வாழ்க்கையின் எல்லா சிறந்த விஷயங்களுமே துயரத்தையே தருகின்றன. மாயன் வராததால் மாலை வந்ததற்கான அறிகுறிகளாக பசுக்களும் காளையும் அணைந்து நடக்கையில் தோன்றும் மணி ஓசையும் குழலோசையும், மல்லிகை முல்லை மலர்களில் தேனுண்ட வண்டுகளில் ரீங்காரமும் கடல் ஓதத்தின் ஒலியும் பாரங்குசநாயகிக்குப் பிறிவாற்றாமையை மேலிடச் செய்கின்றன.

தங்கம்மாவோ மோகமுள் தைத்துக் கிடக்கிறாள். தூண்டிற் புழுவைப் போல் துடிக்கிறாள். காதலனின் உருவமும் ஞாபகமும் எந்நேரமும் அவள் நினைவில் அப்பிக் கிடக்கின்றன.

நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.

நானொரு ஆண்டாளோ திருப்பாவை

பாட

ஏழையை விடலாமோ இதுபோல வாட

வெள்ளிநிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்

நள்ளிரவில் மெல்லிசையில் தேன் அலைகள் நினைவில் எழும்

ஓர் இதயம் உன்னால் எழுதும் இந்நேரத்தில் கண்ணா உன் மவுனத்தை தவிர்த்து

சொல்லாயோ வாய் திறந்து

பார்வையால் தூது விட்டு விட்டு ஓய்ந்துபோய், “நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட” என்று கேட்கிறாள். கிணற்றில் இருந்து தண்ணீரை இரைத்துத் தன் மேல் ஊற்றிக்கொண்டு காமத்தைத் தணிக்கப்பார்க்கிறாள். கடைசியில் ஊர்க்குளத்தில் அவள் உடல் மிதக்கிறது. அம்பின் வாய் பட்டுத் துடிப்பவர்களைப் போல் காதல் அதன் வயப்பட்டவர்களை வதைக்கிறது. இந்த வேதனை ஆண்டாளுக்கும் உண்டு. அவள் வாயாலே இப்படிக் கூறுகிறாள்:

ஆரே உலகத் தாற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்

காரேறுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும்

கிடப்பேனை

ஆராவமுத மனையான் தன் அமுத வாயிலூறிய

நீர்தான்

கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை

நீக்கிரே

ஆயர்பாடி முழுவதும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற கறுத்த எருது போன்ற கண்ணன் மீது காதல் கொண்டு துன்பப்பட்டுக் கிடப்பதாகப் புலம்புகிறாள் ஆண்டாள். ஏங்கி ஏங்கித் தளர்ந்து முறிந்து கிடக்கும் அவள் இடும்பையைத் தீர்க்க யார் இருக்கிறார்கள்? அதனால் அவளே அதற்கான மருந்தையும் சொல்கிறாள். உண்ண உண்ணத் திகட்டாத அமுதமாகிய ஆராவமுதனின் வாயில் ஊறிய அமுதத்தை எடுத்து வந்து, அது உலர்வதற்கு முன்னதாகவே கொண்டு வந்து பருகக் கொடுத்தால் அவளுடைய வலி அகலுமாம்.

ஒருவேளை கண்ணன் வாயமுது கிடைக்கவில்லையென்றால் அவன் ஊதும் வேய்ங்குழலின் துளையில் ஒழுகும் நீரைக் கொண்டுவந்தாவது முகத்தில் தெளியுங்கள் என்கிறாள் இன்னொரு பாசுரத்தில்.

ஒருவேளை ஆண்டாள் போல் தங்கம்மாவும் திருவாய்மொழியோ நாச்சியார் திருமொழியோ திருப்பாவையோ பாடியிருந்தால் அவளுக்கு பாபு கிடைத்திருப்பானோ?

- தொடர்புக்கு bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x