Last Updated : 23 Dec, 2016 10:38 AM

 

Published : 23 Dec 2016 10:38 AM
Last Updated : 23 Dec 2016 10:38 AM

தமிழ் சினிமா 2016: யார் நாயகி?

சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்?

2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்?

# சமந்தா

‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து விட்டதையும் சொல்ல வேண்டும்.

# ஏமி ஜாக்சன்

‘கெத்து', ‘தெறி' என இரு படங்களில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வந்து போனார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். தமிழ் சினிமாவில் நானும் நாயகி என்று அட்டென்டென்ஸ் போட்டிருக்கிறார். அவ்வளவுதான்.

# ஹன்சிகா

அழகு மட்டுமே நடிகைக்கான முழுத் தகுதியாகிவிடாது என்பது ஹன்சிகாவுக்குத் தெரிந்திருக்கும். ‘அரண்மனை2', ‘மனிதன்', ‘போக்கிரி ராஜா', ‘உயிரே உயிரே' என நான்கு படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் நடிக்கத் தெரிந்த நடிகையாக ஹன்சிகா வரவில்லை. வளரவில்லை.

# த்ரிஷா

15 வருட சினிமா அனுபவத்தை நிரூபிப்பதற்கான காலமும், களமும் த்ரிஷாவுக்குக் கனிந்திருக்கிறது. ஆனால் சோகம் என்னவென்றால் த்ரிஷாதான் அதற்குத் தயாராகவில்லை. ‘கொடி' படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கு போதிய வலுவும், பலமும் இருந்தும் த்ரிஷா அதைச் சரியாகக் கையாளவில்லை.

# ஸ்ரீதிவ்யா

‘பென்சில்', ‘மாவீரன் கிட்டு', ‘மருது', ‘காஷ்மோரா', ‘பெங்களூர் நாட்கள்' என ஐந்து படங்களில் நடித்தார். இதில் ‘காஷ்மோரா' தவிர மற்ற படங்களில் நடிக்க அவ்வளவு வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பளிச் தோற்றம், சின்ன புன்னகை மட்டுமே நடிப்புக்கான இலக்கணம் அல்ல. கதாபாத்திரத்தை உள்வாங்குவதே முதன்மையானது.

# ஆனந்தி

கண்களால்கூட நடிக்க முடியும் என்று முன்பு அசரவைத்த ஆனந்தி, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு', ‘கடவுள் இருக்கான் குமாரு', ‘விசாரணை' ஆகிய மூன்று படங்களில் நடித்தார். ‘விசாரணை' நாயகிக்கான களம் அமைக்கவில்லை என்பதை தவிர்த்துப் பார்த்தால், ஆனந்தி மற்ற இரு படங்களிலும் வெறுமனே கடந்து போகிறார்.

# ஐஸ்வர்யா ராஜேஷ்

‘தர்மதுரை', ‘ஹலோ நான் பேய் பேசறேன்', ‘குற்றமே தண்டனை', ‘பறந்து செல்ல வா', ‘மனிதன்', ‘கடலை' என ஆறு படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதிகப் படங்கள் நடித்த கதாநாயகி என்ற பெருமையைப் பெற்றார். ‘தர்மதுரை'யில் சில காட்சிகளே என்றாலும் ஸ்கோர் செய்தார். ஆனால், மற்ற படங்களில் காமா சோமா பாத்திரம்தான்.

# ராதிகா ஆப்தே

‘கபாலி' படத்தில் ரஜினிக்கு ஈடாக நடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும், கொஞ்சமும் சளைக்காமல் நடித்த ராதிகா ஆப்தேவின் நடிப்பு அருமை! பாண்டிச்சேரி காட்சியில் கண்கள் கசியப் பார்க்கும்போது ஈரமும் ஈர்ப்புமாய் நிறைவான நடிப்பைக் கொடுத்தார்.

# நிவேதா பெத்துராஜ்

‘ஒரு நாள் கூத்து' படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் ஆச்சரிய வரவு. சூழல், நெருக்கடி உணர்ந்து அதற்கேற்ற முகபாவங்களை, உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்தில் பல உணர்வுகளைக் கண்முன் கடத்துகிறார். அப்பா- காதலன் இடையில் தவிப்பது, பிரிவில் வருந்துவது, காதலனை விலகி இன்னொரு வனைக் கைபிடிக்கும் நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பது என நடிப்பில் புருவம் உயர்த்த வைத்தார். அவரின் நடிப்புக்காகவே ஜெயம் ரவி, உதயநிதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

# நயன்தாரா

பெரிய பட்ஜெட் படங்களின் தவிர்க்க முடியாத நாயகி நயன்தாரா. நான்கு படங்கள் நடித்தாலும் அதில் நயனுக்கான இடம் குறைவாகவே இருந்தது. 'இது நம்ம ஆளு' படத்தில் சிம்புவுடன் கெமிஸ்ட்ரியில் ஹிஸ்டரி படைத்தார். இருமுகனில் கொஞ்சமே வந்தாலும் கெத்து காட்டினார். ‘காஷ்மோரா' படத்தில் கம்பீர முகம் காட்ட நயனைத் தவிர வேறு ஆள் இல்லை என்ற அளவுக்கு வியக்க வைத்தார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப கம்பீரத்தையும், வசீகரத்தையும் அள்ளி வழங்குவதால் நயன் இப்போதும் இளமையின் வசீகர அடையாளம்.

# மற்றும் சிலர்...

பூஜா தேவ்ரியா, நித்யா மேனன், மடோனா செபாஸ்டியன், மஞ்சிமா மோகன், அமலாபால். ரம்யா பாண்டியன் ஆகியோரும் இந்த ஆண்டில் கவனம் பெற்றார்கள்.

கவனிக்க வைத்த 3 நாயகிகள்

# வரலட்சுமி சரத்குமார்

‘தாரை தப்பட்டை' படத்தில் வரலட்சுமி காதலனின் அப்பாவுடன் மது அருந்துவது, உட லைக் கேட்கும் ஆண்களைப் புரட்டி எடுப்பது, சசிகுமார் ‘இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்' என லாகவமாகப் பேசும்போது அவரை எட்டி உதைப்பது, பெயர் கேட்டால் ‘மிஸ்டர் சூறாவளி' என கெத்து காட்டுவது என அசாத்திய நடிப்பில் கவனம் ஈர்த்தார்.

# தமன்னா

பார்பி பொம்மையாகவே வந்து போன தமன்னாவுக்கு ‘தோழா', ‘தர்மதுரை', ‘தேவி' மூன்றும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட படங்கள். கிராமத்துப் பெண், நடிகை, லிவிங் டு கெதர் வாழ்வைப் பின்பற்றும் துணிச்சலான பெண் எனச் சகலத்திலும் ஒரு கை பார்த்திருக்கிறார் தமன்னா. ‘தர்மதுரை' படத்தில் சிக்கலான, கனமான பாத்திரத்தையும் மிகச் சரியாகக் கையாண்டார். உடல் மொழி, உடைகள் உட்பட எல்லாவற்றிலும் தமன்னா முன்பைவிட மெருகேறி இருக்கிறார்.

# கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்', ‘ரெமோ', தனுஷுடன் ‘தொடரி' என கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஸ்டார். சாதாரண ஹோம்லி லுக்கில் வந்து போனாலும் கீர்த்தியின் புன்னகையும், விழி மொழியும் ரொம்பவே ஈர்க்கின்றன. ‘தொடரி'யில் அளவாக நடித்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். அடுத்தடுத்து ஓவர் ஆக்டிங் நடிப்பைப் பின் தொடர்ந்தது சிக்கல். ‘ரெமோ'வில் எமோஷன் காட்சிகளில் கவனிக்க வைத்தார்.

சிறப்பிடம்: ரித்திகா சிங்

‘இறுதிச்சுற்று' படத்தின் மூலம் அறிமுகப் படலத்திலேயே ஆஹா எனச் சொல்ல வைத்தார் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையின் கதை என்பதால் நிஜ வீராங்கனை ரித்திகா நடித்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால், நடிப்பு ரீதியாகவும் அது மிகச் சிறந்த தேர்வாக இருந்ததுதான் பலம். கோபம், சண்டை, ஆவேசம் எனப் பன்முக உணர்வுகளை வெளிப்படுத்திய ரித்திகாவின் நடிப்பு அபாரம். யாருக்கும் அடங்காமல் வெடிப்பதும், நிலைமை உணர்ந்து துடிப்பதுமாக நடிப்பில் முழு ஆதிக்கம் செலுத்தினார்.

விஜய் சேதுபதியுடன் 'ஆண்டவன் கட்டளை' படத்திலும் ரித்திகா மிக அழகாக முத்திரை பதித்தார். பாஸ்போர்ட் அலுவலத்தில் நின்றுகொண்டு விஜய் சேதுபதி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதும், வெட்கமும் தயக்கமும் பூரிப்பும் புன்னகையுமாக அவர் சம்மதம் சொல்லும் அழகுக்காகவே ரித்திகாவை ரசிக்கலாம். இந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகை ரித்திகா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x