Last Updated : 06 Jan, 2017 10:25 AM

 

Published : 06 Jan 2017 10:25 AM
Last Updated : 06 Jan 2017 10:25 AM

தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: புதுமைகளின் திரைப் பிதா!

தென்னிந்திய சினிமா பேசத் தொடங்கிய பிறகு நூற்றுக்கு 99 படங்கள் கடவுளர்களின் கதைகளைக் கூறியே காலத்தை ஓட்டின. அடுத்த இடத்தில் தீய்ந்து அடிபிடித்ததுபோல ராஜா, ராணிக் கதைகளால் திரையுலகம் தேங்கிக் கிடந்தது. மாற்றி யோசித்தால் விலைபோகாது என்ற மூடநம்பிக்கை வேறு. இந்த நேரத்தில் திரையுலகையே கதைக்களமாக்கி ‘விஷ்வமோகினி’(1940) என்ற தெலுங்குப் படத்தை எடுத்து ஆச்சரியப்படுத்தினார் ஆரம்ப காலத் திரை ஆளுமை ஒருவர். அவர் ஒய்.வி.ராவ் என்று அழைக்கப்பட்ட எறகுடிப்பட்டி வரத ராவ் (Yaragudipati Varada Rao -Y.V. Rao).

அதுமட்டுமல்ல; கன்னட சினிமாவின் முதல் பேசும்படத்தை இயக்கியது, எம்.கே.தியாகராஜ பாகவதரை தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக ஆக்கியது, ஒரு காட்சியின் நிகழ்வைப் பல கேமராக்கள் கொண்டு படமாக்கி, படத்தொகுப்பு மூலம் காட்சியின் ஓட்டத்தை விறுவிறுப்பாக்கியது, பெண் நடிகரை ஆண் வேடத்தில் நடிக்க வைத்தது, தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த கதாநாயகிகளைக் காதல் மணம் புரிந்துகொண்டது என இவர் செய்த அதிரடிகள் ஏராளம்.

பன்முக ஆளுமை

நாயக நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், எடிட்டர், தயாரிப்பாளர், பட விநியோகஸ்தர் என்று பன்முகத் திறமைகளால் தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களுக்கு வளம் சேர்த்தவர் ஒய்.வி. ராவ். பிறந்தது அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்த இன்றைய ஆந்திரத்தின் நெல்லூரில். செல்வச் செழிப்பு மிக்க தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்த ராவ், பள்ளிப் படிப்பை முடித்த கையோடு தெலுங்கு பாகவத மேளா நாடகங்களில் தனது 15-வது வயதில் ஸ்திரீபார்ட் வேடம் கட்டினார். பரந்து விரிந்த நெற்றியுடன் ராவ் பெண் வேடங்களில் தோன்றியதை சக நண்பர்களே கிண்டல் செய்ய, ‘இனி நாடகம் வேண்டாம் எனக்காக சினிமா உலகம் காத்திருக்கிறது’என்று துடிப்புடன் கூறிவிட்டு கோலாப்பூருக்குக் கிளம்பினார்.

அன்று பம்பாய்க்கு நகரத்துக்கு வெளியே இந்தியாவின் அனைத்து மொழி மவுனப் படத் தயாரிப்புக் கேந்திரமாக இருந்த மற்றொரு மராட்டிய நகரம் கோலாப்பூர். ஆனால், அங்கே அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் பம்பாய்க்கு வந்தார். அங்கே இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள முடிந்ததே தவிர, ‘மதாராஸி’இளைஞரான ராவுக்குச் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை.

மதாஸிலேயே மவுனப்படத் தயாரிப்பு கனஜோராக நடக்கும்போது நாம் ஏன் இங்கே கிடந்து அல்லாட வேண்டும் என்று மதாராஸுக்குத் திரும்பினார். ராவின் எழிலார்ந்த தோற்றத்தையும் பாகவத ஹிப்பி கிராப்புகளுக்கு மத்தியில் அளவாகக் கத்தரித்த அழகான சிகையழகையும் கண்ட அந்நாளின் மவுனப்பட இயக்குநர் ரகுபதி பிரகாஷ், கதாநாயகனாக நடிக்கும் முதல் வாய்ப்பை ராவுக்கு வழங்கினார். சிவகங்கை ஏ. நாராயணன் என்ற புகழ்பெற்ற தமிழ் மவுனப் பட முன்னோடி தயாரித்த அந்தப் படம் ‘கருட கர்வ பங்கம்’. அதன் பிறகு நாராயணன் – பிரகாஷ் கூட்டு முயற்சியில் உருவான பல மவுனப் படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ்பெறத் தொடங்கினார்.

இயக்கமும் சாதனையும்

சினிமா தயாரிப்பு, திரையரங்க நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய சிவகங்கை ஏ. நாராயணன், ஹாலிவுட், லண்டன் ஆகிய நகரங்களுக்கு நேரில் சென்று சினிமாவின் அடிப்படைகளை முறையாகக் கற்றுத் திரும்பிப் படங்களை எடுத்துவந்த ஆர். பிரகாஷ் ஆகிய இரு ஆளுமைகளின் தயாரிப்பு இயக்கத்தில் நடித்ததால் ராவுக்கு சினிமா நுட்பங்கள் அத்துபடியாகின. எனவே, சினிமா இயக்கத்திலும் ஆர்வம் கொண்டார் ராவ்.

‘பாண்டவ நிர்வாணம்’ என்ற மவுனப் படத்தில் 1930-ல் நடித்து இயக்குநராகவும் மாறிய அவர், அதே ஆண்டில் ‘பாண்டவ அஞ்ஞாத வாசம்’ என்ற மற்றொரு மவுனப் படத்தையும் இயக்கி, ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இயக்க முடியும் என்றும் காட்டினார். ஒரு இயக்குநராக அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைந்தது 1932-ல் இவர் இயக்கிய ‘ஹரி மாயா’. இந்தப் படத்தில் நடித்த நாடக நடிகையான ராஜத்தையே காதல் திருமணம் செய்துகொண்டார் ராவ். ராவும் ராஜமும் சில மவுனப் படங்களில் ஜோடியாகத் தொடர்ந்தனர்.

முதல் பேசும் படம்

‘ஹரி மாயா’ படத்தின் மாபெரும் வெற்றியின் தொடர்ச்சியாக, கன்னட சினிமாவின் முதல் பேசும்படமான ‘சதி சுலோசனா’வை (1932) இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. கோலாப்பூர் சத்ரபதி சினிடோன் என்ற ஸ்டூடியோவில் 4 கேமராக்களைக் கொண்டு 80 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தார் ராவ். ராவணன், அவனது மகன் இந்திரஜித், மருமகள் சுலோச்சனா ஆகியோரைச் சுற்றிவரும் கதையில் ராவும் நடித்தார். கர்நாடக, மைசூர் சமஸ்தானம் முழுவதும் படம் புகழடைந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடப் படவுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறிய ராவ், இந்திப் படவுலகிலும் தனது திறமையை வெளிப்படுத்தத் தவறவில்லை.

சிந்தாமணியும் சினிமாவில் சினிமாவும்

மதுரைக்கு அடையாளம் அளித்த சினிமா கம்பெனிகளில் ஒன்று ‘ராயல் டாக்கீஸ் டிஸ்ரிப்யூட்டர்ஸ்’. இந்த நிறுவனத்துக்காக ‘சிந்தாமணி’ படத்தை 1937-ல் இயக்கினார். முதலில் இந்தப் படத்துக்காக செருகளத்தூர் சாமாவைக் கதாநாயகனாகத் தேர்வு செய்த ராவ், பிறகு அவருக்குப் பதிலாக தியாகராஜ பாகவதரை அமர்த்தினார். அந்தப் படத்தில் அஸ்வதாம்மா, குமாரி ருக்மணி ஆகியோரைப் பெண் கதாபாத்திரங்களுக்குத் தேர்வு செய்தார். படம் வெளியாகி வரலாறு காணாத வசூலைக் கொட்டியது.

மதுரை உட்பட மதராஸ் மாகாணத்தின் பல திரையரங்குகளில் ஓராண்டு காலம் ஓடி, தியாகராஜ பாகவதரை எம்.கே.டி என அழைக்கவைத்து அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. படத்தைத் தயாரித்த ராயல் டாக்கீஸ் நிறுவனத்துக்குக் குவிந்த வசூல் தொகையில் மதுரையில் ‘சிந்தாமணி’ என்ற திரையரங்கை கட்டினார்கள். (கடந்த அக்டோபரில் இடிக்கப்பட்டுவிட்டது) பாபநாசம் சிவன் இசையமைத்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றிபெற்று கிராமஃபோன் ரெகார்ட் விற்பனையிலும் சாதனை படைத்தது. சிந்தாமணியில் பாகவதர் பாடிய ‘ராதே உணக்குக் கோபம் ஆகாதேடி’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி, தனி இசைத்தட்டுகளுக்காகப் பாட ஒரு பாடலுக்குப் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வாங்கும் நட்சத்திரப் பாடகராகவும் அவரை உயர்த்தியது.

சிந்தாமணி படத்துக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்த ராவ் 1940-ல் இயக்கிய தெலுங்குப் படம் ‘விஷ்வமோகினி’. கதை விவாதத்தில் தொடங்கி, கதாநாயகி அறிமுகம், படப்பிடித்தளத்தில் நடக்கும் படப்பிடிப்புகள் வரை ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்ற சினிமாவின் பின்னணி ரகசியங்களை வெட்டவெளிச்சமாக்கி சினேரியோ எழுதிய ராவ், சினிமா பற்றிய முதல் இந்திய சினிமாவைத் தந்த பெருமைக்குரியவர். பாகவதரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது மட்டுமல்ல; ஆண் நடிகர்கள் மட்டுமே நாரதர் வேஷம் கட்டிவந்த சினிமாவில் தாம் இயக்கிய ‘சாவித்ரி’(1941) படத்தில் இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியை நாரதராகக் கதாபாத்திரம் ஏற்கவைத்தார்.

மறக்கப்பட்ட நூற்றாண்டு

முதல் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்ட நிலையில் குமாரி ருக்மணியைக் காதல் மணம் புரிந்துகொண்டார். அதற்கு முன் ராவ் நாயகனாக நடித்து இயக்க, அவருக்கு ஜோடியாக குமாரி ருக்மணி நடித்த 1946-ல் ‘லவங்கி’ திரைப்படம் வெளியானது. இந்த நட்சத்திர தம்பதியின் மகள்தான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடிப்புக்காகத் தேசிய விருது பெற்ற லட்சுமி. 1903-ஆண்டு பிறந்து 1973-ல் மறைந்த ஒய்.வி.ராவின் நூற்றாண்டு கடந்த 2003-ல் வந்தபோது அதைக் கொண்டாட மறந்து கடந்து சென்றது ‘ஞாபக மறதி’ மிக்க தமிழ்த் திரையுலகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x