Last Updated : 31 Jan, 2014 12:00 AM

 

Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

தமிழ் சினிமாவில் சிறுவர்கள்: கோலி சோடாவின் அடையாளம் எது?

தமிழ்த் திரைப்படங்களில் வளரிளம் பருவக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் காதல் அல்லது காமம் சார்ந்த திரைக்கதைகளிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அழியாத கோலங்கள், வைகாசி பொறந்தாச்சு, துள்ளுவதோ இளமை போன்ற படங்களை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடிகிறது. அல்லது விளிம்பு நிலையில் வாழ நேர்ந்ததால் வன்முறைக்கு ஆளாகி சமூகத்தின் குற்றச் செயல்களுடன் தொடர்புகொண்டவர்களாக மாறிவிடுவார்கள். ரேணிகுண்டா போன்ற படத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆனால் இந்தப் பாதையில் பயணப்படாமல் விளிம்பு நிலையில் வாழ நேர்ந்தாலும் சமூகம் வெறுக்கும் குணங்களைத் தங்களுக்குள் புக அனுமதிக்காத வளரிளம் பருவத்தினரைத் தனது கோலி சோடாவில் பாத்திரங்களாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய்மில்டன்.

சேட்டு, புள்ளி, சித்தப்பா, குட்டி மணி ஆகிய நால்வரும் கோயம்பேடு சந்தையில் காலம் கழிக்கும் விடலைப் பையன்கள். தங்களுக்கான அடையாளம் தேவை என்று வரும்போது சந்தையில் அவர்களுக்கு உதவும் ஆச்சி என்ற பெண்மணியின் ஆதரவோடும் நாயுடு என்னும் பெரிய மனிதரின் உதவியோடும் மெஸ் ஒன்றை நடத்துகிறார்கள். அவர்கள் வெற்றியே அவர்களுக்கு எதிராகத் திரும்ப, அவர்கள் அதை எவ்வாறு எதிர்த்து நின்றார்கள் என்பதை விவரிக்கிறது படம். விடலைக் காதல், அன்பு, அடையாளம் தேடல் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ள இந்தப் படத்தின் பின்புலத்தை நெகிழ்ச்சியோடு கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். அந்த நெகிழ்ச்சியின் மீது படரும் வன்முறையின் குரூரத்தையும் காட்டுகிறார்.

தங்களைச் சுற்றி உள்ள பெரியவர்கள் தீமையான செயல்களைப் புரிந்தாலும் வளர் இளம் பருவத்தினர் அப்பழுக்கற்றவர்களாக உள்ளனர். உளவியல் ரீதியாக இதற்கான சாத்தியமுள்ளதா என்பது ஆராயப்பட வேண்டியது. ஏடிஎம் என்று குறிப்பிடப்படும் பெண் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை உணர்ந்தவளாக இருக்கிறாள். அதற்கான நடைமுறைச் சாத்தியம் பற்றித் திரைக்கதை எதுவும் தெரிவிக்கவில்லை. அவள் வாழ்வைப் புரிந்துகொண்டவள் என்பது மட்டுமே திரைக்கதைக்குத் தேவைப்படுகிறது. தொந்தரவு தரும் எந்த விஷயத்திற்குள்ளும் திரைக்கதை செல்லவில்லை.

கோலி சோடாவைப் பார்வையாளர்கள் ரசிக்கும் பல காட்சிகள் யதார்த்தத்தில் சாத்தியமற்றவை; கறாரான கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை; இன்னும் சொல்லப்போனால் ஆபத்தானவை. ஆனால் பார்வையாளர்களுக்கு அதில் கவலையில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அதர்மத்திற்கு எதிரான வதம் அவசியம். அதைச் செய்ய சாத்தியமற்ற விடலைப் பையன்கள் செய்யும்போது கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.

ஆகிவந்த ரவுடிகளான மயில் குழுவினர் விடலைப் பையன்களை எளிதில் துவம்சம் செய்துவிட முடியும். ஆனால் பெண்களுக்கெதிராக அவர்கள் அத்து மீறும்போது அங்கே ரௌத்திரத்தை வெளிப்படுத்தும் விடலைப் பையன்கள் ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்திசெய்துவிடுகிறார்கள். இதைத்தான் காலங்காலமாகக் கதாநாயகர்கள் செய்துவந்தார்கள். பாட்ஷா திரைப்படத்தில் உள்ளே போ எனத் தனது தம்பியைப் பார்த்து ஆக்ரோஷமாகக் கூறிவிட்டு எதிரிகளைத் துவைத்தெடுக்கும் ஆட்டோ மாணிக்கம் போல் இந்தப் பையன்கள் எதிரிகளைப் புரட்டி எடுக்கிறார்கள். மாணிக்கம் கடந்த காலத்தில் ஊரையே கலங்கவைக்கும் பாட்ஷாவாக இருந்தவன். ஆனால் இந்தப் பையன்களுக்கு அத்தகைய பின்புலம் இல்லை. அவர்களது சூழல் அவர்களைப் போராடுபவர்களாக மாற்றியுள்ளது என்ற சப்பைக்கட்டு மட்டுமே உள்ளது.

யதார்த்தத்தில் செய்ய இயலாத அத்தனை மிகையான விஷயங்களையும் விடலைப் பையன்கள் செய்கிறார்கள். கதாநாயகன் காலில் கயிற்றைக் கட்டிக்கொண்டு காரை நிறுத்துவது போன்ற சிறுபிள்ளைத்தனத்தைச் சகித்துக்கொள்ள முடியாதது போன்றே இந்தப் பையன்களின் பெரிய மனுஷத்தனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வயதில் சிறியவர்களை அடித்துத் தம் பெருமையை நிலைநாட்டிவிட முடியும் என நாயுடு கூறுவது அபத்தமானதுதான். ஆனால் பையன்கள் அவரைப் பொளந்து கட்டுவது ரசிகர்களை உசுப்பேற்றிவிடுகிறது. அவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமானதா?

உருவத்தை வைத்துச் செய்யப்படும் கிண்டலுக்கு நிகரானது ஏடிஎம் என்னும் பெண் பாத்திரம் கையாளப்பட்டுள்ள விதம். உடலழகை மறுதலிப்பது போல் இந்தப் பாத்திரத்தை அமைத்துள்ளார் இயக்குநர். ஆனால் பார்க்க அழகாக இருக்கும் புள்ளியையே ஆச்சியின் மகளான யாமினி விரும்புகிறாள். ஏடிஎம்முக்கு இணை சித்தப்பாதான். ஏனெனில் அதுதான் யதார்த்தம். அந்த யதார்த்தத்தை நல்லுணர்வு என்னும் பூச்சால் மிகையாக மறைக்கும்போது வெறும் பாவனையான கதாபாத்திரமாக ஏடிஎம் உருக்கொண்டுவிடுகிறது.

நாயுடுவின் மனைவி கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவர் ஆங்காரத்துடன் ஏடிஎம்மின் கூந்தலை அறுத்தெறிகிறார். ஒரு புறம் தீயவர்கள் மறு புறம் நல்லவர்கள் என்னும் எளிய பிரிவினையின் அடிப்படையிலேயே கதாபாத்திரங்களும் அதன் குணாதிசயங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அடுத்து ஊருக்குத் திரும்ப வேண்டிய பெண் பேருந்து கிடைக்காத சூழலில் எந்தவிதக் கேள்வியுமற்று கோயம்பேடு சந்தையில் ஓரிடத்தில் தங்குகிறார் என்பதில் துளியும் நம்பகத்தன்மை இல்லை. இவை சுவாரஸ்யம் கூட்டப் பயன்பட்டுள்ள உத்திகள். ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் குறைந்தபட்ச நம்பகத்தன்மை அவசியமில்லையா?

சக்திமான் போன்ற தொலைக்காட்சிப் பாத்திரங்கள் சிறுவர்களிடம் எதிர்மறைத் தாக்கத்தையே ஏற்படுத்தின. இப்படத்தின் பல காட்சியமைப்புகள் அப்படியான தாக்கத்தை உருவாக்கக்கூடியவையே. இதற்குக் கிடைக்கும் வரவேற்பு பலத்த அதிர்ச்சியை அளிக்கிறது. வன்முறை என்பது அரிவாளும் ரத்தமும் மாத்திரமல்ல. மனத்தில் போலித்தனமான ஆக்ரோஷத்தைக் கட்டமைப்பது வளர் இளம் பருவத்தினரைத் திசைமாற்றிவிடும் ஆபத்து கொண்டது.

நாம் பார்த்துக்கொண்டிருப்பது கோயம்பேடு என்பதைப் படத்தில் உணரவே இயலவில்லை. கோயம்பேடு சந்தையைக் களமாகக் கொண்ட படத்தில் பெரும்பாலானோர் மதுரை பாஷை பேசுகிறார்கள். கானா பாலாவின் பாடல் மட்டுமே சென்னையை நினைவுபடுத்துகிறது. அரிவாள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, டாஸ்மாக் காட்சிகள் இல்லை என்பன போற்றுதலுக்குரியவைதான். ஆனால் இந்தக் கோலி சோடாவின் அடையாளம் போலி எதார்த்தமும் வன்முறை ஆவேசமும் என்பதுதான் கசப்பான உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x