Last Updated : 06 Jun, 2014 12:57 PM

 

Published : 06 Jun 2014 12:57 PM
Last Updated : 06 Jun 2014 12:57 PM

தமிழ் சினிமாவின் உலக ஆளுமை

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய அளவில், பல மொழிகளில் தன் படைப்புகள் மூலம், ஒரு புதிய சினிமா இலக்கணத்தை உருவாக்கியவர் மணி ரத்னம். அவரை ஓர் உலக ஆளுமை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

திரைப்படம் குறித்த பயிற்சியோ அல்லது எந்த இயக்குநரிடமும் உதவியாளராகவோ இல்லாமல், தான் பார்த்து ரசித்த திரைப்படங்களின் பாதிப்பில், ஒரு புது மாதிரியான சினிமாவை உருவாக்கும் எண்ணத்தில், தொடங்கியதுதான் அவரது சினிமா பயணம். பல்லவி அனு பல்லவி (1983) என்ற தனது முதல் படத்தை அவருக்குப் பரிச்சயம் இல்லாத கன்னட மொழியில் எடுத்தார். பாலு மகேந்திரா என்ற ஒளிப்பதிவு மேதையும் அனில் கபூர் என்ற பிரபல இந்திப் பட நாயகனும் அதில் பங்கேற்றதற்குக் காரணம், மணி ரத்னத்தின் திரைக்கதை. முதல் படத்தின் திரைக்கதைக்குக் கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதை விருதையும் பெற்றார்.

அடுத்து மலையாளத்தில் உணரு (1984) என்ற திரைப்படத்தை, மலையாள எழுத்து உலகின் ஜாம்பவான் தி.தாமோதரனுடன் இணைந்து எடுத்தார். நடிப்பு மோகன்லால். முதல் இரண்டு படங்களைப் பிற மொழிகளில் எடுத்தபின், 1985-ல் தமிழில் கால் பதித்த மணி ரத்னம், கோவை தம்பியுடன் இணைந்து இதயக் கோவில் (1985) என்ற படத்தை எடுத்தாலும், அவரின் முழுமையான ஆளுமை அதே வருடம் வெளிவந்த சத்யஜோதியின் பகல் நிலவு (1985) படத்தில் வெளிப்பட்டது. இந்தப் படம் அவரை ஒரு முக்கியமான இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது.

அடுத்த படைப்பான மௌன ராகம் (1986), தமிழ் சினிமாவில் மென்மையான காதல் உணர்வுகளை வலுவாக வெளிப்படுத்தும் ஒரு டிரென்ட் செட்டிங் படமாக அமைந்தது.

நாயகனை உருவாக்கிய நாயகன்

1987-ல், கமல் ஹாசனுடன் இணைந்த அவரின் நாயகன், பல சாதனைகளைப் புரிந்து, அவரை உலக அளவில் ஒரு சிறந்த இயக்குநராக மேம்படுத்தியது. டைம்ஸ் பத்திரிகை அறிவித்த உலகின் 100 முக்கியப் படங்களில் ஒன்றாக இப்படம் இருப்பதே அதற்குச் சான்று. அக்னி நட்சத்திரம் (1988), அவரை வெகுஜன இயக்குநராக அடையாளம் காட்டி மாபெரும் வெற்றி கண்டது. இன்றைக்கும், இளைஞர்களுக்குப் பிடித்த படமாக அது இருந்து வருகிறது. 1989-ல் தெலுங்கில், நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த கீதாஞ்சலி, ஒரு காதல் காவியம். பல விருதுகளுடன், இன்றும் மக்களால் போற்றப்படும் ஒரு படம். குழந்தைகளின் வாழ்வைச் சித்திரித்து 1990-ல் அவர் எடுத்த அஞ்சலி, இன்றும் நம்மை நெகிழ வைக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டியுடன் இணைந்த தளபதி (1991), வெகுஜன ரசனையையும் இலக்கியத்தையும் (மகாபாரதம்) இணைத்த ஓர் அரிய முயற்சி.

உலக இயக்குநர்

1992-ல், ஏ.ஆர். ரஹ்மானை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ரோஜா, அவரை உலக சினிமாவின் ஒரு முக்கிய இயக்குநராக அடையாளம் கட்டியது. தீவிரவாதிகளைப் பற்றியும், தீவிரவாதம் பற்றியும், புது விதமான இசையுடன், சொன்ன படம் அதுவரை வந்ததில்லை.

திருடா திருடா 1993-ல் வெளிவந்து, பாடல்களுக்காகப் பேசப்பட்டாலும், ரசிகர்கள் அவரிடம் மேலும் எதிர்பார்த்தார்கள். அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாய் பம்பாய் 1995-ல் வெளிவந்து பெரும் சாதனை புரிந்தது. ஒரு சமகால நிகழ்வை (பாம்‌பாய் மதக் கலவரங்கள்) பொறுப்புடனும், அதே சமயம் அழுத்தமாகவும் சொன்ன அந்தப் படம் பல விருதுகளையும் அவருக்குப் பெற்று தந்தது. பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.

துணிச்சல் கலைஞன்

1997-ல் அவர் எடுத்த துணிச்சலான முயற்சி, சமகால வரலாற்று ஆளுமைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இருவர். இந்தப் படம் வணிக வெற்றி பெறாவிட்டாலும், அவரைச் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் பல படிகள் ஏற்றியது. தில் சே (1998) நேரடி இந்திப் படமாக வந்து பல பாராட்டுகளைப் பெற்றது.

அலைபாயுதே (2000), நவீன இளைஞர்களின் உலகிற்கு மணி ரத்னம் தந்த ஒரு டிரென்ட் செட்டிங் படம். இளைஞர்களின் இந்தக் காலக் காதலைப் புதுமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் கொடுத்துக் காதலுக்கு மரியாதை செலுத்திய படம்.

2002-ல் வந்த கன்னத்தில் முத்தமிட்டால், ஒரு குழந்தையை மையப்படுத்தி இருந்தாலும், அவர் சொன்ன கருத்து, உலக அளவில் ஒலித்தது. ஒரு இலங்கை அகதியின், குழந்தையின் ஏக்கத்தை அவர் சொன்ன விதம் மனதைத் தொட்டது. 2004-ல் அவர் இயக்கிய நேரடி இந்திப் படம் யுவா, பல சாதனைகளைப் புரிந்து, அபிஷேக் பச்சனுக்கு இந்தி சினிமாவில் ஒரு இடத்தை ஏற்படுத்தித் தந்தது. அவர்களின் கூட்டணி 2007-ல் குரு என்ற படத்தில் தொடர்ந்து வெற்றி கண்டது. 2010-ல், அவர்கள் இருவரின் கூட்டணியில் வந்த ராவண் பெரிய சாதனை செய்யாவிட்டாலும், பேசப்படும் படமாக அமைந்தது. தமிழில், யுவா இந்திப் படத்தின் தமிழாக்கம் ஆயுத எழுத்து (2004), விக்ரமுடன் இணைந்த ராவணன் (2010) மற்றும் அவரின் சமீபத்திய கடல் (2013), ஆகியவை பெரும் வணிக வெற்றியைப் பெறாவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகவே கருதப்படுகின்றன.

மணி ரத்னத்தின் சாதனைகள்

சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வரும் மணி ரத்னத்தின் சாதனைகளாக இவற்றைக் குறிப்பிடலாம்:

தரமான சினிமாவுக்குப் பக்கம் பக்கமாக வசனங்கள் தேவையில்லை, குறைந்த வசனங்கள் கொண்ட வலுவான காட்சிகள் மற்றும் அழுத்தமான நடிப்பு மூலமும் அதே உணர்வைக் கொண்டுவர முடியும் என்று நிரூபித்தவர். இதிகாசங்களைத் தழுவி எழுதப்பட்ட சமகாலக் கதைகளை வெகுஜன சினிமாவாக்க முடியும் என்று காண்பித்த வகையில் மணி ரத்னம் ஒரு முன்னோடி.

1990 வரை ஒரு சில உலகச் சினிமா விழாக்களில் மட்டுமே தமிழ்ப் படங்கள் கலந்துகொண்டுவந்த நிலைமையை மாற்றிப் பல உலக சினிமா விழாக்களுக்குத் தன் படங்களைக் கொண்டுசென்று, அவ்விழாக்களுக்குத் தமிழ் சினிமாவை அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமாவுக்கும் அவ்விழாக்களை அறிமுகப்படுத்தியவர் மணி ரத்னம். இன்று பத்துக்கும் மேற்பட்ட உலகப் பட விழாக்கள் தமிழ் சினிமாவை வரவேற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் அவர்.

தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு என்ற எண்ணம் பரவலாக இருந்த காலத்தில், பாடல் காட்சிகளில் நவீனத்தையும், அழகையும், எளிமையும் புகுத்தி, அவர் படங்களின் பாடல் காட்சிகளுக்காகவே இன்னொருமுறை படங்களைப் பார்க்க வைத்தவர் மணி ரத்னம்.

அதே போல், மணி ரத்னம் படங்களின் சண்டைக் காட்சிகள் வலுவானவை. அவற்றில் உள்ள யதார்த்தத் தன்மையும் நவீனத் தன்மையும் பல இயக்குநர்களுக்கு ஒரு முன்னுதாரணம். பகல் நிலவு தொடங்கி, நாயகன், தளபதி, ராவணன் எனப் பல படங்களில் சண்டைக் காட்சிகளில் அவர் கொண்டுவந்த மிகையற்ற அழுத்தம் எப்போதும் பேசப்படும் ஒன்றாகவே இருக்கிறது.

மணி ரத்னத்தின் பகல் நிலவு தேவராஜன் (சத்யராஜ்) தொடங்கி, அக்னி நட்சத்திரம் சிதம்பரம் (ஜீ. உமாபதி), தளபதியின் கலிவரதன் (அம்ரிஷ் பூரி), ஆயுத எழுத்தின் செல்வநாயகம் (பாரதிராஜா) எனப் பலரும் மிகைப்படுத்தப்படாத வில்லன்கள்தான். நாம் சாதாரணமாகக் காணும் நபர்களைப்போலவே இருக்கும் அவர்களின் செயல்கள் மட்டுமே வில்லத்தனமாகக் காண்பிக்கப்படும். இதன் மூலம் வில்லன் பாத்திரங்களுக்கு நம்பகத் தன்மையைக் கொண்டுவந்தவர்.

தமிழ் சினிமாவை உலகமெங்கும் பாராட்ட, உலகத் தரத்தில் படைப்புகளைத் தந்து உலகெங்கிலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியவர் மணி ரத்னம்.

மணி ரத்னத்தின் சாதனைகள் மேலும் மேலும் தொடர இந்த நேரத்தில் அவரை வாழ்த்துவோம்.

தொடர்புக்கு: கோ. தனஞ்ஜெயன் (dhananjayang@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x