Last Updated : 07 Feb, 2014 12:00 AM

 

Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

தடுத்தார் சிவாஜி; தவித்தார் டி.எம்.எஸ்.!

சிவாஜி நடிப்பில் ‘தூக்குத்தூக்கி’ படத்துக்கு எட்டுப் பாடல்கள் என்று முடிவானது. அப்போதைய முன்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனை அணுகியது அருணா பிலிம்ஸ். “ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்” என்றார் லோகநாதன். நேரம் போனதே தவிர, பேரம் படியவில்லை. “ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற புதுப் பாடகர் வந்திருக்கிறார். அவரைக் கேட்டுப்பாருங்கள்” என்ற அவரது ஆலோசனை அனைவருக்கும் பிடித்துப்போனது. ஆளாளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.


“அறிமுகமான ‘கிருஷ்ண விஜயம்’ படத்திலேயே நான்கு பாடல்கள் பாடியவர். தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருக்கும். ஆடல்-பாடல் நிறைந்த நமது படத்துக்கு இவரது பின்னணிக் குரல் பொருத்தமாக அமையும்” என்று தயாரிப்பாளர்களின் காதில் நம்பிக்கையையும், டி.எம்.எஸ் நெஞ்சில் உற்சாகத்தையும் வார்த்தார் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.


“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா?” என்றது தயாரிப்புத் தரப்பு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகத் தலையாட்டினார் டி.எம்.எஸ். மதுரை பஜனை மடங்களில் பாடியது, அதற்குச் சன்மானமாக காப்பி ஓட்டலில் காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கியது, மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் கோவை ராயல் டாக்கீஸ் அலுவலகத்தில் வேலை பார்த்தது, இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்னி வீட்டில் எடுபிடி வேலை செய்தது, ஹெச்.எம்.வி. கிராமஃபோன் கம்பெனியில் இரண்டு பக்திப் பாடல்களைப் பாட எண்பது ரூபாய் வாங்கியது, ஒருவேளை சாப்பாட்டில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த நாட்களில் ஏ.வி.எம்.மில் கிடைத்த சூடான இட்லி, தோசை என எல்லாம் நினைவுக்கு வந்துபோயின. இனி ஏறுமுகம்தான் என்று மதுரை மீனாட்சியையும் குலதெய்வம் கள்ளழகரையும் வேண்டிக்கொண்டார்.


அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ‘பராசக்தி’யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் பாட வேண்டும் என்பது படத்தின் நாயகன் சிவாஜியின் பிடிவாதமான விருப்பமாக இருந்தது. “ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…” என்று அதிருப்தி தெரிவித்தார்.
“நமது படத்தின் நாட்டுப்புறப் பாடல்களுக்கு அவரைவிட இவரது குரல் பொருத்தமாக இருக்கும்” என்றார் ஜி. ராமநாதன். ‘மறுபடியும் காராச்சேவு, பக்கோடாதான் கதியா?’ என்று தவித்துப்போனார் டி.எம்.எஸ். “பாடுகிறேன். ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னதை அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.


மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார் ஜி.ராமநாதன். “நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க” என்ற சிவாஜியின் கரங்களை நெகிழ்வோடு பற்றிக்கொண்டார் டி.எம்.எஸ். ‘பெண்களை நம்பாதே…’, ‘ஏறாத மலைதனிலே…’ உள்ளிட்ட அத்தனை பாடல்களையும் பாடினார்.


கள்ளழகரும் மீனாட்சியும் கருணை காட்டினார்கள். `கூண்டுக்கிளி’யில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய ‘கொஞ்சும் கிளியான பெண்ணை…’ பாடலை ரசித்த எம்.ஜி.ஆர். ‘மலைக்கள்ளன்’ படத்துக்குப் பரிந்துரைத்தார். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில், தஞ்சை ராமையாதாஸ் பல்லவியில், கோவை அய்யாமுத்து சரணத்தில் உருவான ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ என்ற பாடலால், எம்.ஜி.ஆரின் முதல் கொள்கைப் பாடலைப் பாடியவர் என்கிற பெருமை செளந்தரராஜன் தோள்களில் உட்கார்ந்துகொண்டது.



படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x