Published : 26 Aug 2016 12:49 PM
Last Updated : 26 Aug 2016 12:49 PM

சென்னை 377: சினிமா சொர்க்கம்!

அன்றைய சென்னையின் மவுண்ட் ரோட்டில் (அண்ணா சாலை) தற்போது அண்ணா சிலை அமைந்துள்ள இடத்துக்குச் சற்று முன்பாக இருந்த சந்திப்பில் ஒரு ரவுண்டானா இருந்தது. மவுண்ட் ரோட்டின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக அந்த ரவுண்டானா திகழ்ந்தது. அந்த ரவுண்டானா புகழ்பெற்றிருந்ததற்கு முக்கியக் காரணம், அந்தக் கால மக்களின் கனவுலக வடிகால்களாக அமைந்திருந்த திரையரங்குகள், அந்த இடத்தைச் சுற்றிப் பெருமளவில் அமைந்திருந்ததுதான்.

1900-களில் நவீனப் பொழுதுபோக்கு வசதியாக இருந்த திரையரங்குகள், இந்தப் பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாகத் திறக்கப்பட்டன. இன்றைக்கு அங்கே ரவுண்டானா இல்லை என்றாலும், சென்னை நகரின் திரை யரங்க வரலாற்றின் சில முக்கிய அடையாளங்களை இந்தப் பகுதி தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

முதல் பால்கனி

சென்னையில் அண்ணா சாலையுடன் வாலாஜா சாலையும் எல்லிஸ் சாலையும் கூட்டாகச் சந்திக்கும் புள்ளியில் ‘மிஸ்கித்’ என்ற இசைக் கருவிகள் விற்கும் நிறுவனம் 19-ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இயங்கிவந்தது. அந்த நிறுவனம் ‘மியூஸி மியூசிக்கல்ஸ்’ என்ற பெயரில் சற்றே தள்ளியுள்ள இடத்தில் இன்றைக்கும் இயங்கிவருகிறது.

மிஸ்கித் பழைய கடையின் முதல் மாடியில் ‘லிரிக்’ என்ற அரங்கம் இருந்தது. 1913-ல் எம்பயர் சினிமா என்ற பெயரில் இங்கே திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஆனால், திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக எம்பயர் திரையரங்கு மூடப்பட்டது. அந்த இடத்தில்தான் எல்பின்ஸ்டன் நிரந்தரத் திரையரங்கு 1915-ல் நிறுவப்பட்டது. சென்னையின் முதல் மிகப் பெரிய, பால்கனி கொண்ட திரையரங்கம் என்ற பெருமையை எல்பின்ஸ்டன் பெற்றிருந்தது. அது மட்டுமல்ல, திரைப்படங்களைத் திரையிட்டு அதன் வழியாக முதலாம் உலகப் போருக்கு நிதி திரட்டிய இந்தியத் திரையரங்குகளில் இதுவும் ஒன்று.

கொல்கத்தாவைச் சேர்ந்த பார்சி வணிகர் ஜே.எஃப். மதன், நகரும் திரைகளைக் கொண்ட ‘எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கம்பெனி’யைக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடத்திவந்தார். அவரே பிறகு, ‘எல்பின்ஸ்டன் பிக்சர் பேலசஸ்’ என்ற பெயரில் நிரந்தரத் திரையரங்குகளையும் நடத்த ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் இந்தியாவில் இயங்கிவந்த மிகப் பெரிய சங்கிலித் தொடர் திரையரங்க நிறுவனம் அது. அதன் ஒரு பகுதியாகவே சென்னை எல்பின்ஸ்டன் திரையரங்கை அந்த நிறுவனம் நடத்திவந்தது.

தற்போதைய அண்ணா சிலைக்கு எதிர்ப்புறம் முன்பு இருந்த புதிய எல்பின்ஸ்டன் திரையரங்கு (வலது புறம் வெள்ளையாக உள்ள கட்டிடம்)

தப்பிப் பிழைத்த எலெக்டிரிக்

எம்பயர் எல்பின்ஸ்டன் திரையரங்குகளுக்கு முன்னதாகவே சென்னையில் இரண்டு திரையரங்குகள் செயல்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது 1911-ல் திருமதி கிளக் என்பவரால் பிராட்வேயில் திறக்கப்பட்ட ‘பயாஸ்கோப்’. ஆனால், சில மாதங்களிலேயே அது மூடப்பட்டது.

அடுத்ததாக உருவான எலெக்ட்ரிக் திரையரங்கமே சென்னையின் முதல் திரையரங்காகக் கருதப்படுகிறது. மேஜர் வார்விக், ரெஜினால்ட் அய்ர் ஆகிய இருவரும் நடத்திய இந்தத் திரையரங்கில் 1913-ல் மவுனப் படங்கள் திரையிடப்பட்டன. பழைய திரையரங்குகள் நிறைந்த மவுண்ட் ரோடு ரவுண்டானா பகுதியில் இடிக்கப்படாமல் இப்போதும் தப்பிப் பிழைத்திருப்பது எலெக்ட்ரிக் திரையரங்கு மட்டுமே. இந்தத் திரையரங்கை 1915-ல் அஞ்சல் துறை வாங்கிய பிறகு, மவுண்ட் ரோடு முதன்மை அஞ்சலகமாக அந்தக் கட்டிடம் செயல்பட்டுவந்தது. இப்போதும் இந்தக் கட்டிடம் அஞ்சல் துறை வசமே உள்ளது, அஞ்சல் தலை சேகரிப்பு மையம் அங்கே இயங்கிவருகிறது.

காலம் கடந்த திரையரங்கு

சென்னையின் மிகவும் பழமையான மூன்றாவது திரையரங்கு பிளாக்கர் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இயங்கிக்கொண்டிருந்த கெயிட்டி. 1914-ல் இதை ஆரம்பித்தவர் ரகுபதி வெங்கையா. இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட முதல் சென்னை திரையரங்கு என்ற பெருமை இதற்கு இருந்தது. சென்னையில் நீண்ட காலம் இயங்கிய திரையரங்கு என்ற பெருமையும் கெயிட்டிக்குக் கூடுதலாக உண்டு. தென்னிந்தியாவில் உருவான முதல் சங்கிலித் தொடர் சினிமா திரையரங்கு நிறுவனமும் கெயிட்டிதான். கிரவுன், ராக்சி (முன்பு குளோப்), மதுரையில் உள்ள இம்பீரியல் ஆகிய திரையரங்குகள் கெயிட்டி நிர்வாகத்தால் நடத்தப்பட்டவையே.

பயாஸ்கோப்பும் எலெக்ட்ரிக்கும் விரைவிலேயே தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டாலும், எல்பின்ஸ்டன் என்ற பெயர் மீதான மோகம் மட்டும் விடவேயில்லை. 1932-ல் பம்பாயைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஷோரப் மோடி, தற்போதைய அண்ணா சிலைக்கு நேரெதிரே புதிய எல்பின்ஸ்டன் திரையரங்கை நிறுவினார். ஹாலிவுட் படங்களுக்காக இந்தத் திரையரங்கு புகழ்பெற்றிருந்தது. சென்னை குறித்த வரலாற்று ஆய்வாளர் எஸ். முத்தையா இந்தத் தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். 1979-ல் நியூ எல்பின்ஸ்டன் திரையரங்கு இடிக்கப்பட்டு, 1981-ல் ரஹேஜா அடுக்குமாடி வணிக வளாகம் அங்கே திறக்கப்பட்டது. இப்போதும் இந்த வணிக வளாகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

கறுப்பு வெள்ளையில் எலெக்ட்ரிக் திரையரங்கின் பழைய படம். தற்போது அஞ்சல் துறை கட்டுப்பாட்டில் உள்ள எலெக்ட்ரிக் திரையரங்கக் கட்டிடம்.

குறையாத வசீகரம்

பண்டைய திரையரங்குகள் மட்டுமல்லாமல், நாடு விடுதலை பெற்ற பிறகு மவுண்ட் ரோடு ரவுண்டானாவைச் சுற்றித் திறக்கப்பட்ட திரையரங்குகளும் பல்வேறு பெருமைகளைப் பெற்றிருந்தன. சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட பெரிய திரையரங்குகளில் ஏ.சி. வசதி செய்யப்பட்ட முதல் திரையரங்கு, சாந்தி. சிவாஜி கணேசனின் திரைப்படங்களுக்காக இது பெரிதும் புகழ்பெற்றிருந்தது. 1961-ல் பாவ மன்னிப்பு தொடங்கி சிவாஜி கணேசனின் 82 படங்கள் இங்கே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு படங்கள் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டவை என்று நடிகரும் திரைப்பட ஆய்வாளருமான மோகன் வி. ராமன் கூறியுள்ளார். அதேபோல கெயிட்டி அருகே கட்டப்பட்ட காசினோ, சென்னையில் ஆர்ட் டெகோ பாணியில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு. இந்தியாவிலேயே முதன்முறையாக நான்கு திரைகளுடன் கட்டப்பட்ட திரையரங்கு தேவி.

மேற்கண்ட திரையரங்குகளுடன் எல்.ஐ.சி. அருகேயிருந்த வெலிங்டன் (1917), சித்ரா என அண்ணா சாலையின் பழைய ரவுண்டானாவைச் சுற்றியிருந்த திரையரங்குகள் வெள்ளித்திரை ரசிகர்களை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தப் பகுதியிலேயே கட்டிப்போட்டு வைத்திருந்தன. இப்போது சாந்தியும் கெயிட்டியும் இல்லாத நிலையில் தேவி திரையரங்க வளாகம், காசினோ, அண்ணா திரையரங்கு மட்டுமே இப்பகுதியில் எஞ்சியுள்ளன. இருந்தும்கூடத் தங்கள் தலைவரின் படம் ரிலீஸ் ஆகும்போது கட்அவுட் வைக்கவும், தோரணம் கட்டவும், பிளாக்கில் எவ்வளவு காசு கொடுத்து வேண்டுமானாலும் டிக்கெட்டை வாங்கிப் படம் பார்க்கவும் தயாராக இருக்கும் ரசிகர்களின் கூட்டம், இன்றைக்கும் இப்பகுதியின் வசீகரத்தில் மயங்கித்தான் கிடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x