Last Updated : 31 Mar, 2017 10:43 AM

 

Published : 31 Mar 2017 10:43 AM
Last Updated : 31 Mar 2017 10:43 AM

சினிமா ஸ்கோப் 30: சில நேரங்களில் சில மனிதர்கள்

சில வேளைகளில் சாதாரணப் படம் அநேகரால் ரசிக்கப்படும்; அநேகரால் புறக்கணிக்கப்படும் படம் கவனிக்கத்தக்க படமாக அமைந்துவிடும். இது சினிமாவின் மர்மமான அம்சங்களில் ஒன்று. தனிநபர் ரசனையைப் பொறுத்த அம்சம் இது என்பதால் ஏன், எதற்கு, எப்படி என்று எந்தக் கேள்வியையும் எழுப்ப இயலாது. புனைவும் யதார்த்தமும் சரியான கலவையில் அமையும்போது, அது பார்ப்பதற்கு உகந்த படமாகிவிடும். இந்தக் கலவை சமையலில் வெளிப்படுவது போன்ற ஒருவகையான கைப்பக்குவம்தான். எப்போதும் இந்தக் கைப்பக்குவம் ஓர் இயக்குநருக்குக் கைகொடுக்கும் என்று கூற முடியாது. மேலும், இப்படியான கைப்பக்குவத்துடன் படமாக்கப்பட்ட ஒரு படம் பெருவாரியான ரசிகர்களால் ரசிக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால், ஒரு படம் அதற்கான ரசிகர்களைச் சென்றடைவதுதான் முக்கியம். அப்படிச் சரியான ரசிகர்களைச் சென்றடைந்த படம் வெற்றிபெறும். வெற்றி என்றால் வணிகரீதியான வெற்றியல்ல; படைப்புரீதியான வெற்றி.

கிடாரியும் களியும்

சமீபத்தில் இரண்டு படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஒன்று பிரசாத் முருகேசன் இயக்கிய ‘கிடாரி’. மற்றொன்று சணல்குமார் இயக்கிய ‘ஒழிவுதிவசத்தே களி’. ‘கிடாரி’ வன்முறைப் படம் என முத்திரை குத்தப்பட்டது. ஆகவே அது பெரும்பான்மையானவர்களால் கவனிக்கப்படவில்லை. ‘ஒழிவுதிவசத்தே களி’யின் கதையோ இதற்கு நேரெதிர். படம் பார்க்கலையா எனத் துக்கம் விசாரிக்கும் அளவுக்கு விதந்தோதப்பட்டது. அதை ஒரு காவியம் என்றெல்லாம் கொண்டாடினார்கள்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்தபோது, திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு ஆகியவை பற்றிய எண்ணம் எழுந்தது. கிடாரியில் பலமான திரைக்கதை உள்ளது, ஒழிவுதிவசத்தே களியிலோ திரைக்கதை என்ற ஒன்றே முற்றிலுமாக இல்லை. ஒரு கல்யாண வீடியோ எடுப்பது போன்ற தன்மையுடன் படமெடுத்திருக்கிறார்கள். ஒழிவுதிவசத்தே களி சொல்லும் சேதி சமூகத்துக்கு அவசியமானதே. ஆனால், அது திரைப்படம் அல்ல; வெறும் கதைப் படம்.

இருவித அதிர்ச்சிகள்

ஒரு திரைப்படத்துக்குத் திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இந்தப் படம் உண்ணி ஆர் என்னும் மலையாள எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒருவகையான குறியீட்டுப் படம்தான். அதனால்தான் திரைக்கதைக்குப் பொருந்தாத அந்த கிளைமாக்ஸுடன் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான சண்டை, பாட்டு, நகைச்சுவை என்ற வகையில் அடங்காமல் புதுப் பாதையில் பயணித்த படம் இது. நான்கைந்து நண்பர்கள் அடர்ந்த வனமொன்றின் நடுவே ஒரு மாளிகையில் குடிக்கச் செல்கிறார்கள்.

அவர்களுக்கிடையேயான உரையாடல், சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே சமூகத்தைப் பற்றிய, ஜனநாயகத்தைப் பற்றிய இயக்குநரின் புரிதலை வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அதிர்ச்சி தரும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சி இருவகையானது சிலருக்கு எப்படியான படம் என்ற வியப்பு கலந்த அதிர்ச்சி, சிலருக்கு என்னடா படம் என்ற சலிப்பு கலந்த அதிர்ச்சி. இந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும்படியான திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி அமையாமல் போனதால் அது ஒரு சராசரியான படமாகவே நிலைகொண்டிருக்கிறது.

50 நிமிடங்களுக்கு மேலான ஷாட், ஸ்பாட் ரெக்கார்டிங் போன்ற முயற்சிகள் வெறும் கவன ஈர்ப்புக்கான அளவிலேயே பயன்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் அது இந்திய ஜனநாயகம் பற்றிப் பேசுகிறது, பெண்களின் நிலையைப் பற்றிப் பேசுகிறது, ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால், அது ஒரு முழுநீளத் திரைப்படமா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. அது மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட குறும்படம் என்ற அளவிலேயே உள்ளது.

லாகவமான நையாண்டி

கிடாரி துரோகத்தின் அரசியலையும் வீரத்தின் முகவரியையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. சுவாரசியமான திரைப்படத்துக்குத் தேவையான அம்சங்களை அதன் திரைக்கதை கொண்டிருந்தது. மிகவும் முதிர்ச்சியான காட்சி மொழியால் காட்சிகள் திரையில் எழுதப்பட்டிருந்தன. தனக்காக வாழ்வதற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்வதற்குமான வேறுபாட்டைச் சுட்டியபடி படம் பயணிக்கிறது. தான் வாழ்வதற்காகத் தன் குட்டியை விழுங்கும் பாம்பு போன்ற தன்மையுடன் கொம்பையா பாண்டியன் வேடம் படைக்கப்பட்டிருந்தது.

ஒரு சமூகமே வீரம் என்று கொண்டாடும் விஷயத்தை மிக லாகவமாகப் படம் நையாண்டி செய்திருக்கிறது. பழியும் வன்மமும் நிறைந்த வாழ்வில் துரோகம் சில வேளைகளில் நிழல் தரும் மரமாகவே உருக்கொண்டுவிடுகிறது. நிழல் தந்த மரம் ஐந்துதலை நாகம் என்பது புரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? அந்த அதிர்ச்சியை அதன் கிளைமாக்ஸ் தரும். வீரம் என்பது வெறும் தந்திரம் என்பதை வெளிப்படுத்தும்போது, வீரத்துக்காக மார்தட்டும் சமூகம் தலைகுனிவதே சரியானது என்பதைப் படம் உணர்த்துகிறது. குருதி நதியில் மிதந்த சடலமாகப் படம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், படம் ரத்தமும் சதையுமாகக் கையில் நெளியும் பிறந்த சிசு போன்றது.

கிடாரியில் பிரச்சினை இல்லையா, அவ்வளவு அற்புதமான படைப்பா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் மிகப் பெரிய பலவீனம் கிடாரி கதாபாத்திரத்தை சசிகுமார் வெளிப்படுத்தியிருந்த விதம். ஒரு காட்சியில்கூடத் திரைக்கதையின், கதாபாத்திரத்தின் பளுவை அவரால் தாங்க முடியவில்லை என்பதைப் படம் பார்க்கும்போது உணரலாம். இது கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம், மதயானைக்கூட்டம் போன்ற படங்களைப் போன்றதுதான். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் சுமையைப் பறவையின் இறகு போல் தாங்கியிருந்தார். ஆனால், கிடாரியில் அவர் சறுக்கியிருக்கிறார். சாதிப் பெருமைப் படக் கதாபாத்திரங்களின் தன்மை அவர் மீது ஒரு கறையாகவே படிந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

வலுவான கதாபாத்திரம் வலுவான நடிகர்

இந்த இடத்தில் ‘த ரெவனென்ட்’ படத்தின் லியோனர்டோ டி காப்ரியோ நினைவுக்கு வருகிறார். படத்தின் பளுவைத் தனியொருவராக அவர் தூக்கிச்சென்றிருப்பார். அவரும் சசிகுமாரும் ஒன்றா என்று கேட்டு அடிக்க வராதீர்கள். திரைக்கதையைச் சுமக்கும் வலுக்கொண்ட நடிகர் வாய்க்காவிட்டாலும் திரைக்கதை ஜொலிக்காது என்பதைச் சொல்லவே இந்த உதாரணம்.

மொத்தத்தில், ஒரு முழுநீளத் திரைப்படம் செய்தி சொல்லலாம்; சொல்லாமல்போகலாம். அதைவிட முதன்மையான விஷயம் அது திரைப்படமாக இருக்க வேண்டும். எவ்வளவு கலைத்தரத்துடன் படைக்கப்பட்டாலும் அது பொழுதுபோக்குக்காகவே உருவாக்கப் படுகிறது; அந்தப் பொழுதுபோக்கு பயனுள்ளதாக அமைய ஒரு இயக்குநர் பிரயத்தனப்படலாம். அப்படி அமைந்துவிட்டால் அது நல்ல படமென்று சொல்லப்பட்டுவிடும். அதன் காட்சிமொழி இயல்பாகவும் பக்குவமாகவும் வெளிப்படும்போதே அது திருப்தி தரும் படமாகும்.

இப்படியான திருப்தியைத் தருவதற்கான அடித்தளத்தை ஒரு நல்ல திரைக்கதையால் கொடுக்க இயலும். நல்ல திரைக்கதையை அதன் கதாபாத்திரங்களுக்கு உகந்த நடிகர்களுடன் பார்ப்பதற்கேற்ற பதத்திலும் முதிர்ச்சியுடனும் நல்ல திரைப்படமாக்குவது இயக்குநரின் கைகளிலேயே உள்ளது. ஆக, கிடாரி நட்சத்திரத் தேர்வில் சறுக்கியது என்றால் ஒளிவுதிவசத்தே களி திரைக்கதையில் சறுக்கியது.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x