Last Updated : 03 Feb, 2017 09:38 AM

 

Published : 03 Feb 2017 09:38 AM
Last Updated : 03 Feb 2017 09:38 AM

சினிமா ஸ்கோப் 25: துள்ளாத மனமும் துள்ளும்

ஒரு திரைப்படத்தை அப்படியே நகலெடுப்பது ஒரு வகை என்றால் அந்தப் படத்தின் தாக்கத்தில் கதை எழுதி திரைக்கதை அமைப்பது மற்றொரு வகை. இந்த இரண்டு வகைகளிலும் கைதேர்ந்தவர்கள் தமிழ்ப் படைப்பாளிகள். பிற படைப்பாளிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக உதாரணம் காட்டக்கூடிய படம் சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’. சற்றேறக் குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1931-ல் வெளியான இந்த ஹாலிவுட் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இதன் கதை, இன்றுவரை பல படங்களின் திரைக்கதைக்கு அடித்தளமாக அமைந்து வருகிறது என்பதே இதன் சிறப்பு.

சிட்டி லைட்ஸ் படத்தைப் பார்க்காதவர்களுக்காக அதன் கதையை ஓரிரு வரிகளில் பார்க்கலாம். வசிக்க வீடற்ற எளிய மனிதன் ஒருவனுக்கும் நடைபாதையில் பூவிற்றுப் பிழைப்பு நடத்தும் பார்வையற்ற பெண்ணுக்குமான உறவை மனிதநேய இழையில் தொடுத்துக் கட்டிப் பார்வையாளரின் முன்வைத்த படம் இது. இந்தப் படத்துக்குத் தான் சார்லி சாப்ளின் முதன்முதலில் பின்னணியிசை அமைத்தார். இதன் திரைக்கதையின் நேர்த்தி காரணமாக இன்றுவரை இதன் பாதிப்பில் உருவாக்கப்பட்ட எந்தப் படத்தாலும் இதைத் தொடவே முடியவில்லை. இது வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் என்றால், இதன் தாக்கத்தில் உருவான அனைத்துப் படங்களும் வீட்டில் தொங்க விடப்படும் காகித நட்சத்திரங்களாகவே காட்சிகொள்கின்றன.

மனிதநேயக் காதல்

பார்வையற்ற பெண்மீது கொண்ட பிரியம் காரணமாக அவளது வறுமையைப் போக்க உதவுகிறார் எளிய மனிதரின் வேடமேற்றிருக்கும் சார்லி சாப்ளின். தற்கொலை செய்துகொள்ள முயலும் ஒரு மில்லியனரைக் காப்பாற்றும் சாப்ளினுக்கு உதவுகிறார் அந்த மில்லியனர். ஆனால் அவர் போதையில் இருக்கும்போது மட்டுமே சாப்ளினை அவருக்கு அடையாளம் தெரியும். போதை தெளிந்தால் சாப்ளினை விரட்டிவிடுவார். இப்படியொரு விநோதக் கதாபாத்திரம் அது.

பூக்காரப் பெண்ணின் நெருக்கடியைப் போக்கவும் அவளது பார்வையைத் திரும்பப் பெறவுமான பணத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் சாப்ளின் இறங்கியபோது, எதிர்பாராத சம்பவத்தால் சாப்ளின். திருட்டுக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். பூக்காரப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வரும் சாப்ளினைக் காவல்துறையினர் பிடித்துச் சிறைக்கு அனுப்பி விடுகின்றனர்.

காட்டிக் கொடுக்கும் ஸ்பரிசம்

சிறைக்குச் சென்று திரும்பிவரும், பிச்சைக்காரர் போன்ற தோற்றம் கொண்ட சாப்ளினை பேப்பர் விற்கும் சிறுவர்கள் கிண்டல் செய்கிறார்கள், அவரது கிழிசலான உடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்துச் சிரித்தபடியிருக்கிறாள் பூக்காரப் பெண். அவளுக்கு இப்போது பார்வை வந்துவிட்டது. சாப்ளின் அவள் முன்னால் வந்து நிற்கிறார். அவர் கையிலுள்ள ரோஜாப்பூவில் ஒவ்வொரு இதழாக உதிர்கிறது. அது முழுவதும் உதிர்ந்த கணத்தில் அவர்மீது இரக்கம்கொண்டு ஒரு புது ரோஜாவைக் கொடுக்கிறாள் பூக்காரப் பெண்.

அப்போது அவருடைய கையை வருடும்போது அந்த ஸ்பரிசம் அவர் தனக்கு உதவியவர் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இருவரும் இணைகிறார்கள். இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கும் தன்மை காரணமாக இப்போது படத்தைப் பார்த்தால்கூட ஒரு புதிய படத்தைப் பார்ப்பது போல் உணர முடியும். படத்தின் ஒரு ஷாட்கூடத் தேவையற்றது எனச் சொல்ல முடியாது. அவ்வளவு கச்சிதமான படைப்பு இது.

‘சிட்டி லைட்’ஸின் தாக்கத்தில் பல திரைக்கதைகள் தமிழில் எழுதப்பட்டி ருக்கின்றன. 1954-ல் வெளியான ‘ராஜி என் கண்மணி’ இதன் தழுவல்தான். டி.ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீரஞ்சனி நடித்த இந்தப் படத்தை ஜெமினி நிறுவனம் தயாரிக்க இயக்கியவர் கே.ஜே. மகாதேவன். பின்னர் குல்ஷன் நந்தா கதை எழுத, ஏ.எல்.நாராயணன் வசனத்தில் வெளியான ‘எங்கிருந்தோ வந்தாள்’ (1970) படத்தை இயக்கினார் ஏ.சி.திருலோகச்சந்தர். இது தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் படத்தில் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கரு ‘சிட்டி லைட்ஸ்’ படத்தின் கருவைப் போன்றதே. ‘சிட்டி லைட்’ஸில் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் இதில் பித்துப் பிடித்த கதாபாத்திரம். அந்த வேடமேற்றிருப்பவர் சிவாஜி கணேசன். பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஆதரவாக வந்து அவரைக் குணப்படுத்துபவர் ஜெயலலிதா.

அவரது கதாபாத்திரம் ஒரு தேவதாசிப் பெண் போன்றது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்படியொரு சூழலில் மாட்டிக் கொள்வார் ஜெயலலிதா. மனநிலை பாதிப்பு கொண்ட சிவாஜியைக் கவனித்துக்கொள்ளும் ஜெயலலிதாவை ஒரு அசந்தர்ப்பமான பொழுதில் தனதாக்கிக்கொள்வார் சிவாஜி. ஆனால் அவருக்குப் பித்து தெளிந்த சமயத்தில் ஜெயலலிதாவை யாரென்றே தெரியாது. பின்னர் அதை யார் தெளிவுபடுத்துகிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

பித்துத் தெளிந்த பின்னர் சிவாஜி ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு கொள்வார் ஜெயலலிதாவைப் பார்த்து யாரிந்தப் பெண் எனக் கேட்பார். அப்போது ஜெயலலிதா, பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லி நடித்துக்காட்டுவார். கிட்டத்தட்ட மனப்பிறழ்வுக்குள்ளானவர் போல் நடந்துகொள்வார். இந்தக் காட்சி உங்களுக்கு ‘மூன்றாம் பிறை’ படத்தை ஞாபகமூட்டக்கூடும்.

மேலும் பல தாக்கங்கள்

பாலுமகேந்திரா கதை, திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘மூன்றாம் பிறை’ (1983). எங்கிருந்தோ வந்தாளைக் கவிழ்த்துப் போட்டால் அது மூன்றாம் பிறை. இதில் ஸ்ரீதேவி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அவருக்கு ஆதரவு காட்டுபவர் கமல் ஹாசன். இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் தன்னை யாரென்று வெளிப்படுத்த, ஸ்ரீதேவியின் முன்பு நடித்துக்காட்டுவர் கமல் ஹாசன். மனநலம் பிறழ்ந்த ஒருவன் என்றே ஸ்ரீதேவி அவரை நினைத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் கமல் அவமானப்படுவது சிட்டி லைட்ஸில் சாப்ளின் அவமானப்படுவதற்கு நிகரானது. என்ன ஒன்று ‘கமல் அளவுக்கு’ சாப்ளின் நடித்திருக்க மாட்டார். அப்படி நடித்ததால்தான் கமலுக்குத் தேசிய விருது கிடைத்தது. படத்தின் வணிக வெற்றிக்கு சில்க் ஸ்மிதா பயன்பட்டிருப்பார்.

மூன்றாம் பிறை போன்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன், சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளை உருவாக்கத் தனித் தைரியம் வேண்டும். அதைப் பெற்றிருந்திருக்கிறார் பாலுமகேந்திரா. இந்தப் படத்தை இந்தியிலும் பாலுமகேந்திரா உருவாக்கினார். நேரிடையாக சிட்டி லைட்ஸைத் தழுவி உருவாக்கப்பட்ட ராஜி என் கண்மணி தோல்விப்படம். ஆனால் எங்கிருந்தோ வந்தாள், மூன்றாம் பிறை ஆகியவை வெற்றிப் படங்கள்.

மகேந்திரன் திரைக்கதை வசனத்தில் உருவான நிறைகுடம் (1969), எழில் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் (1999), மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளிவந்த நிலவே முகம் காட்டு (1999) போன்ற பல படங்களில் சிட்டி லைட்ஸின் தாக்கத்தை உணர முடியும். கடைசி இரண்டும் தெலுங்கு, கன்னடம் என வெவ்வேறு மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்துப் படங்களையும் ஒருசேரப் பார்க்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் நீங்கள் புதிய திரைக்கதை ஒன்றையே எழுதிவிட முடியும். ஆனால், அது சிட்டி லைட்ஸைத் தாண்டக்கூடிய வகையில் அமையுமா என்பதுதான் உங்களுக்கான சவால். அந்தச் சவாலை இப்போதும் உங்களிடம் விதைக்கும் படமாக சிட்டி லைட்ஸை உருவாக்கியதுதான் சார்லி சாப்ளின் என்ற கலைஞனின் மேதைமைக்குச் சான்று.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x