Published : 15 Mar 2017 10:42 AM
Last Updated : 15 Mar 2017 10:42 AM

சினிமா எடுத்துப் பார் 98: எஸ்பி.முத்துராமன் எங்கே?

‘பாண்டியன்’ படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்ற முடிவை என்னிடம் விட்ட ஏவி.எம்.சரவ ணன் சார் அவர்களிடம், ‘‘திட்டமிட்ட படியே படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவோம். நான் நாளை மறுநாள் படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன்!’’ என் றேன். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாத சூழ்நிலையில் இருந்த நான், மூன்றாவது நாளே படப்பிடிப்பு போகும் மனநிலை வந்ததற்குக் காரணம் என் பள்ளி ஆசிரியர் நல்லமுத்து சார்தான்.

ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்து ஒவ்வோர் ஆண்டும் பாராட்டையும், பரிசையும் பெறுபவர், நல்லமுத்து சார். ஒருநாள் மாலை 3 மணியளவில் அவரது மனைவி இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. பள்ளியில் இருந்து எல்லோரும் சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தோம். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த மாணவர்கள், ‘‘இன் னைக்கு நல்லமுத்து சார் பள்ளிக்கு வர மாட்டார். விடுமுறையே எடுக்காத அவருக்கு இந்த ஆண்டு பரிசு கிடைக்காது!’’ என்று பேசிக் கொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களில், ஆசிரியர் நல்லமுத்து அவர்கள் பள்ளிக்கு வந்து விட்டார். அதனைப் பார்த்த ஆசிரியர்கள், ‘‘மனைவி இறந்துட் டாங்க? இந்த மாதிரி சூழ்நிலையில இன்னைக்கு பள்ளிக்கு வர ணுமா?’’ என்று கேட்டார்கள். அதுக்கு அவர், ‘‘இறுதி சடங்குகள் எல்லாம் நேற்றே முடிந்துவிட்டன. இன்றைய வேலைகளைக் கவனிக்க உறவுக்காரங்க இருக்காங்க. நான் இன்னைக்கு என் கடமையை செய்ய பள்ளிக்கு வந்து விட்டேன்!’’ என்றார்.

அவருடைய கடமை உணர்ச்சிதான் என் மனைவி இறந்த மூன் றாவது நாளே படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் மன நிலையை உருவாக் கியது. படப்பிடிப்பு வேலைகளை முடித்து குறிப்பிட்டபடி தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்தோம்.

‘பாண்டியன்’ படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வியாபாரம் தொடர்பான விஷயங்களை சரவணன் சார் அவர்களும், குகன் அவர்களும் பார்த்துக்கொண்டனர். ‘பாண்டியன்’ படத்தில் கிடைத்த லாபத்தை யூனிட்டுக்கு சரிசமமாக பங்கிட்டு கொடுத்தேன். அப்போது சிலர், ‘‘ரஜினிகாந்த் உங்களுக்காகத்தான் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். லாபத்தில் சரி பாதியை நீங்கள் எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகை யைக் குழுவுக்கு பங்கிட்டு கொடுத் திருக்கலாம்!’’ என்றனர். அப்படி செய்வது சரியாக இருக்காது என்று நான் அதற்கு சம்மதிக்கவில்லை.

படத்தில் கிடைத்த லாபத்தின் தொகை யால் இன்றைக்கு எங்கள் யூனிட்டில் உள்ளவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடத்துக்கு கஷ்டம் இல்லை. நான் நினைத்த மாதிரியே என் குழுவுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பட்டது எனக்கு முழு மன திருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த ரஜினிக்கும், சரவணன் சார் அவர்களுக்கும், குகனுக் கும் எங்கள் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த மாதிரி ஒரு படத்தில் வருகிற லாபத்தை பெரிய சம்பளம் வாங்கும் நடிகர்களும், லாபம் ஈட்டும் தயாரிப் பாளர்களும், இயக்குநர்களும் தங் களோடு பணியாற்றும் கலைஞர்களுக்கு ஒரு கணிசமான தொகையைக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் கலைஞர் களும், தொழிலாளர்களும், அவர் கள் குடும்பங்களும் பயன்பெறுவார் கள். உங்களை மனமார வாழ்த்து வார்கள்.

என் யூனிட்டின் கவலை தீர்ந்தது. ஆனால், என் வாழ்க்கையில் ஏற்பட்ட கவலை மனதை விட்டு போகவில்லை. மனைவிக்கு உதவி செய்ய கணவன் தேவைப்பட்டபோது நான் மனைவிக்கு உதவவில்லை. இன்றைக்கு கண வனுக்கு மனைவி தேவைப்படும்போது என்னுடன் என் மனைவி இல்லை. இதுதான் என் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருடல்.

குடிக்கு, ரேஸுக்கு அடிமை என்று சொல்வோமே அதே மாதிரி வேலை.. வேலை என்று வேலைக்கு அடிமை ஆகிவிட்டேன். குடும்பத்தைக் கவனிக்க வில்லை. இந்த வேதனையை எல்லோ ரிடமும் கூறி, ‘‘மனைவி, குழந்தைகளுக்கு என்று நேரம் ஒதுக்குங்கள்!’’ என்று வேண் டிக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது வெளியே கூட்டிச் செல்லுங்கள். வசதி இருக்கும்போது வெளியூர் களுக்குக் கூட்டிச் செல்லுங்கள். அப்படி முடியவில்லையானால், தினமும் ஒரு வேளையாவது எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து ரசித்து, ருசித்து சாப்பிடுங்கள். அந்த நேரத்திலாவது குடும்பத்தின் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் பேசிக் கொள்ளுங்கள்.

இப்படி நான் சொன்னதைக் கேட்டு பலரும் பின்பற்றி வருகிறார்கள். ‘‘நீங்க சொன்ன பிறகு என் கணவர் தினமும் எங்களுக்காக நேரம் செலவிடுகிறார்!’’ என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள். அதைக் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைப் படிப்பவர்களும் பின்பற்றலாம். பின் பற்ற வேண்டும்.

என் மனைவியின் பிரிவுக்குப் பின்னால் எனக்குள் ஒருவித மன இறுக்கம் இருக்கவே செய்தது. ‘என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியுமா?’ என்ற மனநிலைக்கு வந்தேன். ஒரு நாள் சரவணன் சார் அவர்களை சந்தித்து, ‘‘இனிமேல் தொடர்ந்து என்னால் பணியாற்ற முடியுமா என்று குழப்பமாக இருக்கிறது. என் சொந்த ஊரான காரைக்குடிக்கே போய்விடுகிறேன்!’’ என்று சொன்னேன்.

அதற்கு அவர், ‘‘நீங்கள் ஏதோ ஓர் உணர்வில் இப்படி சொல்கிறீர்கள். தினமும் 18-ல் இருந்து 20 மணி நேரம் தொடர்ச்சியாக 20 ஆண்டு காலம் உழைத்திருக்கிறீர்கள். அப்படி இருந்தவர் எப்படி காரைக்குடியில் போய் தனிமையாக இருக்க முடியும்? பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு சேஞ்சுக்கு வேண்டுமென்றால் 10 நாட்கள் ஊருக்குப் போய்ட்டு வாங்க. வந்த பிறகு தினமும் ஸ்டுடியோ வந்துடுங்க. உங்களுக்கு இங்கே ஒரு அறை கொடுக்கிறேன். அடுத்தடுத்து நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்ப்போம்.

நீங்க என் கூடவே இருக்கணும். உங்களை இழக்க நான் தயாராக இல்லை. நான் இறக்கும் வரைக்குமோ, நீங்கள் இறக்கும் வரைக்குமோ தினமும் ஒரு முறையாவது நாம் சந்திக்க வேண்டும்!’’ என்றார். இருவர் கண்களிலும் கண்ணீர். இதில் சகோதர பாசம் இல்லை. அதற்கும் மேலே!

அதே மாதிரி ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா வசதிகளுடன் ஒரு அறையை எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

‘‘எஸ்பி.முத்துராமன் எங்கே?’’ என்பவர்களுக்கு… என் முகவரி ‘ஏவி.எம் ஸ்டுடியோ. கேர் ஆஃப் ஏவி.எம்.சரவணன் சார்’ என்று பெருமை யுடன் சொல்லிக்கொண்டு இயங்கி வருகிறேன்.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. என் பிள்ளைகள் மட்டும் நம் அப்பா இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை என்பதை உணர்ந்தார்கள். எல்லோரும் பேசி என்னை சில நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். கோயம்புத்தூர், பொள் ளாச்சி, டாப் சிலிப் என்று பல இடங்களுக் குச் சென்றோம். அப்படிச் சென்றபோது ஆழியார் அணைக்கு சென்றோம். அந்த இடத்துக்குச் சென்றதும் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். அப்படி என்ன மாற்றம் நடந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x