Published : 30 Nov 2016 09:40 AM
Last Updated : 30 Nov 2016 09:40 AM

சினிமா எடுத்துப் பார் 86: சுஹாசினி ஏன் அப்படிச் சொன்னார்?

படப்பிடிப்பில் எப்போதுமே தான் சீக்கிரம் போக வேண்டும் என்று சொல்லாத சுஹாசினி, ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது, ‘‘மூணு மணிக்கு கொஞ்சம் போகணும்’’ என்று என்னிடம் சொன்னார். ‘‘ஏன்’’ என்று கேட்டேன். அவர் முகத்தில் புன்னகை கலந்த நாணம்!

‘‘இன்னைக்கு சாயங்காலம் மணிரத்னத்துக்கும் எனக்கும் திருமண நிச்சயதார்த்தம்; வீட்டுல சீக்கிரம் வரச் சொன்னாங்க’’ என்று சொல்லும்போதே வெட்கப்பட்டார். அவர் அப்படி சொன்னதும் யூனிட்டில் இருந்த எங்களுக்கெல்லாம் சந்தோஷ மாக இருந்தது. அவருக்கு வாழ்த்து களைச் சொல்லி, ‘‘ஷூட்டிங்ல இன் னைக்கு வேலை இருந்தாக்கூட அதை அப்புறம் பார்த்துக்கலாம். நீங்க உடனே கிளம்புங்க!’’ என்று சொல்லி, அவரை அனுப்பி வைத்தோம்.

திரையுலகில் இயக்குநர் மணி ரத்னம்… அவரது துறையிலும், சுஹாசினி… அவரது துறையிலும் இன் றைக்கும் தொடர்ந்து உயரத்துக்குச் செல்கிறார்கள். கலையுலகில் சிறப்பாக விளங்குவதைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் இருவரும் சிறந்த தம்பதிகள். திரைப்படத் துறையில் இந்த இரண்டு திறமையானவர்களும் ஒன்றாகச் சேர்ந்து பல நல்ல விஷயங் களைச் செய்து வருகிறார்கள். சென்னை யில் நடக்கும் உலகத் திரைப்பட விழாக்களை இருவரும் சேர்ந்து ஒருங் கிணைத்து, அதில் சிறப்பாக தங்களது பணிகளையாற்றி வருகிறார்கள். இந்த வேலைகளுக்காகவே ஒரு குழுவை உருவாக்கி, அதைத் திறம்பட கவனித்து வருகின்றனர், சுஹாசினியும் அவரது குழுவினரும்.

உலகத் திரைப்பட விழா என்றால் அப்போதெல்லாம் நாங்கள் டெல்லி, கோவா போன்ற நகரங்களுக்குச் சென்றுதான் படம் பார்ப்போம். இப்போ தெல்லாம் இங்கேயே அந்தப் படங்களைப் பார்க்கும் சூழல் உரு வாகியுள்ளது. இது, சினிமாக்காரர் களுக்கும் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், மக்களுக்கும் பெரிய உதவியாக உள்ளது. இதை நடத்துகிற ‘இந்தோ சினி அப்ரிஷியேசன்’ அமைப்புக்கும் சுஹாசினி குழுவினருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்!

இப்படி சிறப்பான பணிகளையாற்றி வரும் மணிரத்னம், சுஹாசினி தம் பதிக்கு, நந்தன் என்றொரு மகன். வெளி நாடு சென்று பெரிய அளவில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தாத்தா சாரு ஹாசன் அவர்களை நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதெல்லாம், ‘‘என் பேரன் பெரும்புள்ளியாக வருவான்!’’ என்று பெருமையாக சொல்வார். அதை கேட்கும்போது எங்களுக்குப் பெருமை யாக இருக்கும். அந்தக் கலைக் குடும்பத்தில் இருந்து இப்படி திறமை யோடு ஒரு வாரிசு வளர்ந்து வருகிறார் என்பதற்கு நம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவிப்போம்!

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு சேர்ந்து இளைய திலகம் பிரபு நடித்தார். பிரபுவுக்கு படத்தில் நல்ல ரோல். இதற்கு முன் இருவரும் சேர்ந்து என் இயக்கத்தில் ‘குரு சிஷ்யன்’ என்ற படத்தில் நடித்தனர். அது நகைச்சுவைக் களம். பெரிய அளவில் கலக்கிய படம். ‘தர்மத்தின் தலைவன்’ சென்டிமென்ட் படம். அதில் பிரபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எந்த விஷ யத்தை சொன்னாலும் அதை உள்வாங்கிக் கொண்டு சிறப்பான பங்களிப்பை ஆற்றுவார். அவரது நடிப்பில் சில இடங்களில் அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களின் சாயல் தெரியும். அவரிடத்தில், ‘‘என்ன பிரபு, அப்பா சாயல் வந்துடுதே!’ என்று சொல்வேன். அதற்கு அவர், ‘‘என்னப் பண்றதுண்ணே… அவர் ரத்தமாச்சே!’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார். அப்படிப்பட்ட பிரபுவுக்கு ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ஜோடி குஷ்பு. ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரை, நாங்கள் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினோம்.

புது வரவாக குஷ்பு தமிழுக்கு வரும் போது அவருக்கு தமிழில் ஒரு வார்த் தைக் கூட பேசத் தெரியாது. எந்த வார்த்தைக்கும் அர்த்தமும் புரியாது. எங்கள் படக்குழுவில் துணை இயக்கு நராக பணியாற்றிய லஷ்மி நாராயணன் அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளும் சரளமாக தெரியும்.

குஷ்பு பேச வேண்டிய வசனத்தை லஷ்மி நாராயணன் முதலில் ஆங்கி லத்தில் எழுதி கொடுப்பார். அதன் பிறகு ஹிந்தியில் எழுதி, அதன் அர்த்தம் என்ன என்பதை விளக்கிவிடுவார். கூடவே, அவர் பேச வேண்டியதை தமிழிலும் எழுதி கொடுத்து, அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துவிடுவார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு வேண்டிய மாதிரி குஷ்புவை நடிக்க வைப்பேன். இந்த மாதிரி மூன்று மொழிகளிலும் முறையாக பயிற்சி அளித்ததால், அவரது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து பேசி, நடிப்பது அவருக்கு எளிமையாக இருந்தது. பிரபுவோடு சேர்ந்து நடித்த காட்சிகள் சிறந்த முறையிலும் அமைந்தன. குஷ்புவின் இந்தச் சிறப்பான பங்களிப்பு எந்த அளவு புகழ் பெற்றிருக்கிறது என்றால், இன்றைக்கு அரசியல் மேடைகளில் திறம்பட பேசுகிற அளவுக்கு. அதுவும் எப்படிப்பட்ட மேடை என்றால், கலைஞர் அவர்கள் தலைமை தாங்கும் மேடையில் தமிழில் சரளமாக பேசும் அளவுக்கு. இதற்குக் காரணம், அவரது ஈடுபாடு, உழைப்பு, தன்னம்பிக்கைதான்!

குஷ்பு என்னை எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார். நானும் அவரை மனப்பூர்வமாக ஆசீர் வதிப்பேன். நன்றி மறவாத இப்படிப் பட்ட குணம் கொண்ட குஷ்பு, இயக்கு நர் சுந்தர் சி-யைத் திருமணம் செய்து கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தத் தம்பதி களுக்கு இரண்டு பெண் குழந்தை கள். அவர்களது படிப்பு, வளர்ச்சியில் அப்படி ஒரு கவனத்தை செலுத்தி வருகிறார், அம்மா குஷ்பு!

இன்றைக்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை நடிகர்களுக்கு செய்து வரும் நாசர் அவர்களுக்கு ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் வில்லன் கதாபாத்திரம். சண்டைக் காட்சியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும்போது முகத்தில் அடிபட்டு விடாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட டைமிங்கில் திரும்பும் லாவகத்தை சண்டைப் பயிற்சியாளரிடம் இருந்து நடிகர்கள் கற்றுக்கொள்வார்கள்.

பிரபுவும், நாசரும் மோதிக்கொள்ளும் ஒரு சண்டைக் காட்சியைப் பட மாக்கிக்கொண்டிருந்தோம். நாசருக்கு ஜூடோ ரத்னம் மாஸ்டர் எல்லாம் சொல்லிக்கொடுத்து, ‘‘ரெடியா?’’ என்று கேட்டார். அவரும், ‘‘ஓ.கே ரெடி!’’ என்று கூறிவிட்டு ஷாட்டுக்குத் தயாரானார். பிரபு வேகமாக கையை ஓங்கி நாசர் முகத்தில் குத்தும் காட்சி. வில்லன் நாசர், அந்த குறிப்பிட்ட டைமிங்கில் முகத்தைத் திருப்பவில்லை. பிரபுவின் குத்து நாசரின் முகத்தில் விழுந்தது. அவரது மூக்கில் இருந்து பொல பொலவென்று ரத்தம் கொட்டியது!

- இன்னும் படம் பார்ப்போம்... | படங்கள் உதவி:ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x