Published : 06 Jul 2016 10:29 AM
Last Updated : 06 Jul 2016 10:29 AM

சினிமா எடுத்துப் பார் 65: இளையராஜா பாடல்!

சில்க் ஸ்மிதா பேட்டிக்கான ஏற்பாடு ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது. அவர் வர வில்லை, ஆனால் ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி எங்களை மட்டுமல்லா மல் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சில்க் ஸ்மிதா தற் கொலை செய்துகொண்டார் என்ற செய்தி தான் அது! இரண்டு நாட்களுக்கு முன் பார்த்து பேசிவிட்டு வந்தேன். ‘ஏன், இந்தப் பொண்ணு இப்படி பண்ணிக் கிட்டாங்க?’ என்று விசாரித்தபோது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். ஒரு மாலையை வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போய் பார்த்தேன். சில்க் ஸ்மிதா தூங்கிக்கொண்டிருப்பது மாதிரியே இருந்தார்.

‘பாயும் புலி’ படப்பிடிப்பின் போது தைரியமாக காட்சி அளித்த சில்க், தற்கொலை முடிவுக்கு சென்றதை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை. அவருக்குள் ஏற்பட்ட போராட்டமும், மன இறுக்கமும்தான் அந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது என்பதை நினைத்தபோது பரிதாபமாக இருந்தது. திரையுலகில் அவ்வளவு வேகமாக வளர்ந்து வந்த பெண், அந்த வேகத்தோடு வேகமாக இந்த உலகைவிட்டுப் போய்விட்டார்.

சில்க் மட்டுமல்ல; இன்றைக்கு கலையுலகைச் சேர்ந்த பல பேர் மன இறுக்கத்தால் இந்த மாதிரி முடிவை எடுக்கிறார்கள். அதேபோல நாட்டிலும் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதுவும் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை, கணவன், மனைவி, பிள்ளைகள் குடும்பத்தோடு தற்கொலை, சமீபத்தில் காவல்துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை, தன்னை ஆபாச படமாக ஒட்டுவேலை செய்து வெளியிட்டதில் மனம் உடைந்த வினுபிரியா தற்கொலை... இப்படி ஒவ்வொரு நாளும் செய்தி வரும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

நாம் கோழைகள் இல்லை. எதையும் சவாலாக எடுத்துக்கொண்டு எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க வேண்டியவர்கள். வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம். கஷ்டமே வாழ்க்கையாக இருக்கக் கூடாது. தனியாக உயிரை உண்டாக்க முடியாத நமக்கு, உயிரை அழிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? தயவுசெய்து யாரும் தற்கொலை எண்ணத்துக்கு ஆளாக வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

கன்னடத்தில் துவாரகேஷ் என்ற ஒரு நடிகர். அவர் மிகப் பெரிய தயாரிப் பாளரும்கூட. தொடர்ந்து அங்கே சில படங்கள் எடுத்து நஷ்டத்தில் இருந்தார். அந்த நஷ்டத்தில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினார். ரஜினி, நான், தயாரிப்பாளர் துவாரகேஷ் மூவரும் சந்தித்தோம். அந்த நேரத்தில் ரஜினி தொடர்ந்து சமூகப் படங்களாக நடித்துக்கொண்டிருந்தார். அதில் இருந்து வித்தியாசம் இருக்கட்டும் என்று ‘செமி ஃபோக்லோர் சப்ஜெக்ட்’ படமாக எடுக்கத் திட்டமிட்டோம். அப்படி உருவான படம்தான் ‘அடுத்த வாரிசு’. படத்தில் ரஜினி ஹீரோ. நாயகி ஸ்ரீதேவி. ரஜினி, ஸ்ரீதேவி இருவரும் சேர்ந்து நடித்த இளவரசன், இளவரசி கெட்டப் காட்சிகள் மிகவும் அழகாக அமைந்தன.

முதல் நாள் படப்பிடிப்பு ‘ஆசை நூறு வகை’ பாட்டு. ரஜினியும், டிஸ்கோ சாந்தியும் சேர்ந்து ஆடும் காட்சியைப் படமாக்கும் வேலையில் இறங்கினோம். அந்தப் பாடலை தயாரிப்பாளர் துவார கேஷ் கேட்டுவிட்டு, ‘‘பாட்டு ஸ்லோவாக இருக்கிற மாதிரி தெரியுதே?’’ என்று ஃபீல் பண்ணினார். ‘‘இளையராஜா பாடல் அது. முதன்முறை கேட்கும்போது அப்படி தெரியும். இரண்டாவது முறை கேட்டால் இனிமையாக இருக்கும். மூன்றாவது முறை கேட்கும்போது சூப்பர் ஹிட் லிஸ்ட்ல இருக்கும்’’ என்று நானும், ரஜினியும் சொன்னோம். துவாரகேஷ் அரைகுறை மனதோடு, ‘‘உங்களுக்கெல்லாம் ஓ.கே என்றால் எனக்கு ஓ.கே!’’ என்றார். பாட்டை பட மாக்கி முடித்து பார்த்ததும் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. படம் ரிலீஸானதும் அந்தப் பாட்டும், நடனமும் சூப்பரோ சூப்பர் ஹிட்! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போது அந்தப் பாட்டை ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதுதான் இளையராஜா! அந்தப் பாடலுக்கு ரஜினி, டிஸ்கோ சாந்தி இருவரும் வித்தியாசமான நடனம் ஆடினார்கள். நடனம் புலியூர் சரோஜா.

‘காவிரியே கவிக்குயிலே’ என்ற பாடல். இந்தப் பாட்டை ஜெய்ப்பூரில் எடுக்கத் திட்டமிட்டு நானும், கேமராமேன் பாபுவும் லொக்கேஷன் பார்ப்பதற்காகச் சென்றுவந்தோம். எப்போதுமே இது மாதிரி இடங்களில் படமாக்குவதற்கு முன்பு அங்கே சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வருவது நாங்கள் வழக்கமாக வைத்திருந்தோம்.

ரஜினி, ஸ்ரீதேவி இருவருக்குமான ஜோடிப் பாடல் அது. ஜெய்ப்பூர் மாளிகை யில் பாடல் படப்பிடிப்பு. மிகப் பெரிய ஏரிக்கு நடுவே மாளிகை. ஏரிக் கரையில் இருந்து படகு வழியே அந்த அரண் மனைக்கு ரஜினியும், ஸ்ரீதேவியும் செல் வதுபோல பாடலின் ஆரம்பம் தொடங் கும். அப்போது ரஜினி, ‘‘கேமராவை எங்கே வைத்து ஷூட் பண்ணப் போறீங்க?’’ன்னு கேட்டார். இந்த ஷாட் எப்படி எடுக்கப் போகிறோம்னு நான் சொல்ல மாட்டேன். படப்பிடிப்பு முடிந் ததும் காட்டுறேன். அப்புறம் பாருங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். அவரும் சிரித்துக்கொண்டே ஷாட்டுக்கு ரெடியானார்.

அந்த மாளிகைக்குள் ஒவ்வோர் இடங்களில் ஷூட் பண்ணுவதற்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயத்திருந்தனர். ஹால் என்றால் அதற்கு ஒரு தொகை. வராண்டா என்றால் அதற்கு ஒரு தொகை. மொட்டை மாடி என்றால் அதற்கு ஒரு தொகை என்று பிரித்து வைத்திருந்தனர். தயாரிப்பாளர் துவார கேஷ், ‘‘படம் நல்லா வரணும். எங்கே வேணும்னாலும் ஷூட் பண்ணுங்க’’ என்றார். அவர் அளித்த சுதந்திரம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும், பொறுப்பையும் கொடுத்தது.

பாடலை படமாக்கி முடித்தோம். படகில் போகும் காட்சியை ரஜினிக்கு போட்டுக் காட்டினோம். பார்த்தார். ‘‘எப்படி சார் இது? முழு ஏரியையும், மாளிகையையும் இவ்ளோ உயரத்துல இருந்து காட்டியிருக்கீங்க? ’’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார். ‘‘ஏரியின் மற்றொரு கரையில் உயரமான ஒரு பாழடைந்த கட்டிடம் இருக்கிறது. அதில் இருந்துதான் இந்தக் காட்சியை படமாக்கி னோம். நானும், பாபு சாரும் லொக் கேஷன் பார்க்க வந்தபோதே இந்த ஷாட்டை அந்த பழைய கட்டிடத்தின் உயரத்தில் இருந்து எடுப்பது என்று முடிவு செய்துவிட்டோம்” என்று சொன்னேன். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் பயங்கர கிளாப்ஸ். அந்த ஷாட் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்டது என்று பலரும் கூறினார்கள். சரியான திட்டமிடல் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இது ஓர் உதாரணம்!

ஜெய்ப்பூர் படப்பிடிப்பை முடித்து விட்டு விமானத்தில் டெல்லி வந்து, அங்கே இருந்து சென்னை வர திட்டம். டெல்லிக்கு வரும் வழியில் இடையே கஜுராஹோ ஏர்போர்ட்டில் விமானம் தரை இறங்கும் சமயத்தில் தன் நிலைப் பாட்டை இழந்து தடதடவென சத்தம் வந்தது. விமானத்தில் ரஜினியின் குடும் பம், ஸ்ரீதேவியின் குடும்பம், துவாரகேஷ் குடும்பம், படக் குழுவினர் உட்பட பலரும் இருந்தோம். விமானம் இங்கும், அங்கும் அலைவதை உணர்ந்தோம். மரண பயம் வந்தது. அந்த நேரத்தில் ரஜினி என்ன செய்தார்?

- இன்னும் படம் பார்ப்போம்…

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x