Published : 29 Jun 2016 11:07 AM
Last Updated : 29 Jun 2016 11:07 AM

சினிமா எடுத்துப் பார் 64: சில்க் ஸ்மிதா ஏன் வரவில்லை?

திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களைப் பிரிந்த துக்கத்தில் இருந்து இன்னும் எங்களால் மீள முடியவில்லை. பயணங்கள், பல்வேறு பணிகள் என்று நான் இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நினைவுகளில் இருந்து மீண்டுவர முயற்சிக்கிறேன். ஏவி.எம்.சரவணன் சார் அவர்கள் முழுமையாக அந்தத் துக்கத்தில் இருந்து மீளவில்லை என்பது அவர் முகத்தில் தெரிகிறது. காலம்தான் அவர் மனத் துயரை ஆற்ற வேண்டும்.

சென்ற வாரம் கமலின் ‘சகலகலா வல்லவன்’ படத்தைப் பற்றி சொல்லியிருந்தேன். இந்த வாரம் ‘பாயும்புலி’ ரஜினி பற்றி சொல்லப் போகிறேன். ரஜினியின் நடிப்பு வேகம் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஒரு விழாவில் ரஜினி பேசும்போது, ‘‘சிவாஜிகணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். எந்த கதாபத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வார். கமலுக்கு மேக்கப் விஷயத்தில் இருந்து டெக்னிக்கல் விஷயம் வரை அத்துப்படி.

அவைகளை வைத்து நடிப்பில் வித்தியாசம் காட்டிவிடுவார். இந்த ரெண்டு பேருக்கும் நடுவில் நான் எப்படி பேர் வாங்க முடியும்? அவர்களிடம் இருந்து வித்தியாசப்பட நடிப்பில் வேகம், தனி ஸ்டைல் இதையெல்லாம் சேர்த்துக்கொண்டேன். அது மக்களுக்கு பிடித்துப்போனது. அதனால்தான் ரசிகர் மத்தியில் நிலையாக நிற்க முடிகிறது’’என்றார். அதை முழுமையாக நிரூபிப்பதற்காக எடுத்த படம்தான் ஏவி.எம்மின் ‘பாயும்புலி’.

எங்கள் படங்களில் பொதுவாக கதைக்கு மத்தியில் சண்டைக் காட்சிகள் இடம்பெறும். ‘பாயும்புலி’ படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு மத்தியில்தான் கதையே இருந்தது.

ரஜினியோடு மோத சரியான வில்லன் வேண்டுமே? தேடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் கராத்தே கலையில் பல விருதுகளைப் பெற்று புகழ்பெற்றிருந்தார், கராத்தே மணி. அவரிடம் கேட்டோம்.

‘‘ரஜினி ஹீரோ. நீங்கள் வில்லன். முழு படமும் கராத்தே, ஆயுதம் என்று சண்டையாகவே இருக்கும்’’ என்று கூறினோம். ‘சரி’ என்று அவரும் ஒப்புக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு கராத்தே மணியிடம் இருந்து போன் வந்தது. ‘‘ரஜினியோடு சேர்ந்து நடிக்கப் போறோம்னு சந்தோஷத்துலதான் சரின்னு சொன்னேன். ஊர்ல கராத்தே மணின்னு ஒரு இமேஜோட இருக்கேன். ரஜினியோட ஃபைட் பண்ணி தோத்துட்டா, ‘கராத்தே மணி தோத்துட்டாரு’ன்னு மக்கள் சொல்வாங்க. கஷ்டப்பட்டு சேர்த்து வெச்சிருக்குற பேருக்கு இழுக்கு வந்துடும்னு தோணுது. தயவுசெஞ்சு என்னை மன்னிச்சுடுங்க!’’ என்றார். அவர் சொன்னதிலும் நியாயம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொண்டோம்.

அடுத்து யாரைப் போடலாம்? எங்களுக்கு ஜெய்சங்கர் ஞாபகம் வந்தது. அவரை வில்லனாக்கிட வேண்டியதுதான்னு முடிவெடுத்தோம். சொல்லி அனுப்பியதும் ஸ்டுடியோவுக்கு வந்தார். வரும்போதே, ‘‘ ஹாய்.. ஹாய்… என்ன சரவணன் சார், கராத்தே மணி நடிக்க மறுத்துட்டாரா?’’ன்னு கேட்டுக்கொண்டே வந்தார். சினிமாவில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் அவருக்குத் தெரியாமல் இருக்காது. அவருடைய நண்பர் குழாம் அந்த அளவுக்குப் பெரிது. பத்திரிகைகாரர்களுக்குக் கூட தெரியாத பல விஷயங்களை ஜெய்சங்கர் தெரிந்து வைத்திருப்பார். விஷயத்தை சொன்னோம். ‘‘நான் நடிக்கிறேன்’’ன்னு ஒப்புக்கொண்டார். ரஜினிக்கும் ஜெய்க்கும் வைத்த சண்டைக் காட்சிகள் பயங்கர ஆக்ரோஷமாக அமைந்தன.

சண்டைக் காட்சியை அடுத்து அந்தப் படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தவை பாடல் காட்சிகள். ரஜினியும், ராதாவும் மழையில் நனைந்துகொண்டு பாடும் ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ பாடலை படமாக்கிய விதம் ரொம்பவும் வித்தியாசமாக அமைந்தது. மழைப் பாடல் என்றதும், சரவணன் சார் எங்களை அழைத்து, “வழக்கமான மழைப் பாட்டு மாதிரி எடுக்காதீங்க.

நான் சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். கேமராவில் இருந்து மழைத் துளிகள் விழுகிற மாதிரி படமாக்கியிருந்தனர். அதே மாதிரி எடுக்க முயற்சி பண்ணுங்க’’ என்றார். ஒளிப்பதிவாளர் பாபு அப்போது முதலே மூளையை கசக்கிக் கொண்டு திட்டமிட ஆரம்பித்தார். செட்டுக்குள் மழைக்கான குழாய்களை உயரத்தில் கட்டினோம். அதற்கு மேல் கோடாவை கட்டி, அதில் கேமரா பொருத்தினோம். கேமரா லென்ஸில் இருந்து மழை கொட்டுவதுபோல் அமைந்தது. ஒளிப்பதிவாளர் பாபுவின் திறமை மின்னல்போல் பளிச்சிட்டது.

கமர்ஷியல் படமாச்சே. கவர்ச்சி நடனம் இல்லையென்றால் எப்படி? சில்க் ஸ்மிதா, ரஜினி ஜோடி சேர்ந்து ஆடும் ‘ஆடி மாசம் காத்தடிக்க’ பாடல் காட்சியை அமைத்தோம். இதன் நடன அமைப்பு புலியூர் சரோஜா. சரியாக நடனம் ஆடுகிற வரை விட மாட்டார். ரஜினியும், சில்க்கும் ஆர்வத்தோடு ஆடினார்கள்.

ஊட்டியில் ரஜினியும், ஜெய்யும் கராத்தே கற்றுக்கொள்ளும் பள்ளி. அதன் தலைவராக குரு அந்தஸ்த்தில் நடிக்க தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜியை அணுகியபோது ‘‘நான் நடிக்கிறதை விட்டுட்டேனே’’என்றார். ரஜினிக்கும், ஜெய்சங்கருக்கும் குருவாக நடிக்க நீங்கதான் சரியாக இருக்கும் என்று கூறி ஏவி.எம்.சரவணன் சார் சம்மதிக்க வைத்தார்.

ஊட்டியில் லவ்டேல் என்னும் இடத்தில் உள்ள பள்ளியின் வெளிப்புறத்தில் கராத்தே பயிற்சி பெறுவதை சூரியன் உதயமாகும்போது எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்தோம். விஷயத்தை பாலாஜி சாரிடம் சொன்னதும், ‘‘ஊட்டி குளிர்ல, அதிகாலை 5 மணிக்கு கேமரா வைத்து ஷூட் பண்ணப் போறீயா? முதல்ல எல்லாரும் எழுந்திருச்சு வர்றாங்களான்னு பாரு…’’ என்று கிண்டலடித்தார். அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ரஜினி உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் படப்பிடிப்பில் இருந்தனர். எல்லோருமே பாலாஜி சாருக்காக காத்திருந்தோம். அடுத்த சில நிமிடங்களில் பாலாஜி வந்தார். எல்லோரும் ரெடியாக இருந்ததை பார்த்ததும் அசந்துபோய்விட்டார். ‘‘இவ்வளவு நாளா நான்தான் எல்லாரையும் சத்தம்போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கரெக்ட்டா அழைச்சுட்டு வருவேன்னு நினைச்சேன். இப்போதான் தெரியுது. ஏவி.எம்… ஏவி.எம்தான்!’’ என்றார்.

ஷூட்டிங்ல வேலை சரியா நடக்கலைன்னா, சின்னப்பா தேவரை அடுத்து அதிகம் ஷூட்டிங் ஸ்பாட்ல திட்டுறது பாலாஜி சார்தான். என்ன, சின்னப்பா தேவர் தமிழில் திட்டுவார். பாலாஜி இங்கிலீஷ்ல திட்டுவார். ரெண்டு திட்டுகளுக்கும் ‘ஏ’ சான்றிதழ்தான் கொடுக்கணும்.

‘பாயும்புலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. ரஜினியும், ஜெய்சங்கரும் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு சண்டைப் போடுவார்கள். கல் குவாரிப் பகுதிக்கு வரும் படத்தின் நாயகி ராதாவும், சில்க் ஸ்மிதாவும் ஜெய்யிடம் இருந்து தப்பிப்பதற்காக கல் குவாரியில் லிஃப்ட் போல் பயன்படும் ஒரு இரும்புக் கூண்டில் ஏறிவிடுவார்கள். இவர்கள் ஏறிய ஆட்டத்தில் கூண்டு குவாரிக்கு நடுவில் உயரத்தில் போய் நின்றுவிடும். ரஜினியும், ஜெய்யும் சண்டைப் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இருவரது எடை காரணமாக, அந்தக் கூண்டின் ஒரு பக்கத்து கம்பி அறுந்துவிட்டது. பயத்தில் ராதா, ‘‘நான் சாகப் போறேன்... சாகப் போறேன்’’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அதற்கு சில்க் ஸ்மிதா, ‘‘ இதுக்கு போய் ஏன் கத்துறே? அறுந்து விழுந்தா விழட்டுமே. உயிர்தானே போகும்’’ என்று தைரியமாக இருந்தார். சில்க் ஸ்மிதாவுக்கு அப்படி ஒரு துணிச்சல். ரஜினி, ஜெய்யை அடித்துப் போட்டுவிட்டு இருவரையும் மிகவும் கஷ்டப்பட்டுக் காப்பாற்றுவார்.

ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களைப் பற்றி, ‘என்றும் சினிமா’ என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கினோம். அதில் ஏவி.எம்மில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், கலைஞர்கள் எல்லோரையும் அழைத்து செட்டியார் பற்றியக் கருத்துகளைப் பேட்டி எடுத்தோம். சுமார் 200 பேர் பங்குபெற்றனர். ஏவி.எம் படங்களில் நிறைய நடித்திருந்த சில்க் ஸ்மிதாவையும் பேட்டி கொடுக்க வரச் சொல்லுங்க என்று தயாரிப்பு நிர்வாகி நாகப்பனிடம் சொன்னேன்.

பலமுறை அவர் முயற்சி செய்தும் சில்க் கிடைக்கவில்லை என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு திருமண நிகழ்ச்சி ஒன்றில் சில்க் ஸ்மிதாவை பார்த்தேன். ‘‘என்ன சில்க். எப்போ போன் பண்ணாலும் ஊர்ல இல்லைன்னு சொல்றாங்க. செட்டியாரைப் பற்றி பேட்டி கொடுக்குறதுல என்ன பிரச்சினை?’’ என்று கேட்டேன். ‘‘சத்தியமா எனக்குத் தெரியவே தெரியாது சார். யாரும் என்கிட்ட இந்த விஷயத்தைப் பத்தி சொல்லலை. ரெண்டு நாள்ல நான் வந்து பேட்டிக் கொடுக்கிறேன்’’என்று சொன்னார். ஆனால் சொன்னபடி சில்க் வரவில்லை. ஏன் என்பதை வரும் வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்...

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x