Published : 06 Apr 2016 11:08 AM
Last Updated : 06 Apr 2016 11:08 AM

சினிமா எடுத்துப் பார் 53: உழைத்து சாப்பிட்டால் சொர்க்கம்; உட்கார்ந்து சாப்பிட்டால் நரகம்!

‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினியும் ஜெய்சங்கரும் மோதும் கிளை மாக்ஸ் சண்டை காட்சிக்கு முன் ரஜினியும், ரதியும் மாறுவேடத்தில் குழுவினருடன் வந்து, ஜெய்யின் பிறந்த நாளில் நடனம் ஆடுவார்கள். நடனம் முடிந்ததும் இருவரும் வேடத்தைக் கலைப்பார்கள். அதைப் பார்த்து ஜெய் ஆத்திரமடைவார். ஜெய், ரஜினி இரு வருக்கும் பெரிய சண்டை நடக்கும். ஹீரோ - வில்லன் சண்டைக் காட்சிதான். ஆனால், ஜெய்சங்கர் வில்லனாக நடித்த தனால் இருவருக்கும் சம முக்கியத்துவம் தந்து சண்டைக் காட்சியை வித்தியாச மாக உருவாக்கி இருந்தார் ஜூடோ ரத்தினம்.

சண்டையின் முடிவில் ஜெய் தோற்றுவிடுவார். அப்போது இன்ஸ் பெக்டர் அசோகன், ஜெய்சங்கரை கைது செய்ய முற்படும்போது ஜெய் இன்ஸ் பெக்டரின் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுவார். வில்லன் வேடத்திலும் ஜெய்சங்கருக்கு கவுரவமான முடிவைக் கொடுத்தோம். படம் தமிழகமெங்கும் வெற்றிக்கொடி நாட்டியது.

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் அது. படத்தைத் திரும்பவும் பார்த்தேன். எப்படியெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எட்டு ஆண்டு கள் இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம்.குமரன், ஏவி.எம்.சரவணன், ஏவி.எம்.பாலசுப்ரமணியன் மூவரும் தயாரித்து ஏவி.எம் பேனரில் வெளிவந்த படம் ‘முரட்டுக் காளை’. என் தாய் வீடான ஏவி.எம்முக்கு நான் இயக்கிய முதல் படமும் ‘முரட்டுக்காளை’தான். அந்தப் படம் 100 நாள் கொண்டாடியது எனக்கும், என் குழுவுக்கும் கிடைத்த பெருமை.

ஏவி.எம் நிறுவனத்துக்குப் படங்கள் இயக்கிக் கொண்டிருந்தபோதே பஞ்சு அருணாசலம், மணி ஐயர், அண்ணன் அருளாளர் ஆர்.எம்.வி அவர்களுக்கும் படங்களை இயக்கினேன். நாடகங்கள் மூலமாக எனக்குப் பழக்கமான நண்பர் நடராஜன் அவர்கள், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் என்னைப் பார்க்க விரும்புவதாக அழைத்துச் சென்றார். பாலசந்தர் அவர்கள் என்னிடம், ‘‘நான் கவிதாலயா என்ற ஒரு படக் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறேன். அதில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தப் படத்தை நீங்கள் இயக்க வேண் டும்’’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி. கே.பாலசந்தர் எங்களுக்கெல்லாம் பிதாமகன், வழிகாட்டி. அவருடைய நாடகங்களையும், படங்களையும் பார்த்து பரவசப்பட்டவன் நான். அவர் படத்தை நான் இயக்குவதா என்று அவரைப் பார்த்தேன்.

பாலசந்தர் சார், ‘‘ரஜினியை வைத்து கமர்ஷியல் படங்களை நீதான் பண் ணிட்டிருக்கே. அதுக்காகத்தான் உன்னை தேர்ந்தெடுத்தேன்’’ என்றார். நான் ‘சார்’ என்று தயங்கினேன். ‘‘உன் தயக்கம் எனக்குப் புரியுது. நீ ஏவி.எம்முக்கும், பஞ்சு அருணாசலத்துக்கும் படம் இயக்குற மாதிரியே என் கம்பெனிக்கும் சுதந்திரமா பண்ணலாம். எதுலேயும் என் தலையீடு இருக்காது. சப்ஜெக்ட்டை மட்டும் நான் கரெக்ட் செய்து தருகிறேன். ஷூட்டிங் பக்கம் வரவே மாட்டேன். படம் முடிஞ்சப் பிறகு என்னிடம் படத்தை போட்டுக் காட்டு, அது போதும்’’ என்றார். எவ்வளவு பெருந்தன்மை! அவ்வளவு பெரிய இயக்குநர் எனக்கு வாய்ப்புக் கொடுத்ததை இப்போதும் பெருமை யாக எண்ணுகிறேன்.

அந்தப் படம் ‘நெற்றிக்கண்’. அப்பா, மகன் இரண்டு வேடத்தில் ரஜினி நடித் தார். அப்பாவுக்கு மனைவியாக லட்சுமி. மகனுக்கு காதலியாக மேனகா. அப்பா வுக்குச் செயலாளராக சரிதா. தங்கையாக விஜயசாந்தி. அவர் அந்தப் படத்தில்தான் அறிமுக மானார். சரத்பாபு, கவுண்டமணி இப்படி பலரும் நடித்தார்கள். ‘நெற்றிக்கண்’ கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் விசு. வசனங்களில் குறும்புகள் உருண்டோடும்.

கதை விவாதங்கள் நடக்கும்போது பாலசந்தர் மிகவும் ஈடுபாட்டோடு இருப் பார். அந்த இடத்தில் யாரும் மற்ற விஷ யங்கள் பேசுவதை அனுமதிக்க மாட்டார். தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்த நடராஜன் அவர்களைக் கேட்டு அப்போது போன் வரும். உடனே ‘‘அப்புறம் கூப்பிடச் சொல்லுங்க’’ என்று பாலசந்தர் சத்தம் போடுவார். அவரோடு இருக்கும் அந்த இரண்டு மணி நேரம் அவர் சிறந்த படைப் பாளி என்பதை எங்களுக்குக் காட்டும்.

நடைமுறையில் எப்போதும் மகன் தான் தப்பு பண்ணுவான்; அப்பா திருத்து வார். ஆனால். இந்தக் கதையில் அப்பா தப்பு பண்ணுவார். மகன் திருத்துவான். ரஜினி ஏற்ற அந்த அப்பா வேடம் ஒரு ஜாலி மைனர் பாத்திரம். மன்மத லீலைகளின் உச்சகட்டம். அதனை தன் நடிப்பின் பலவிதமான ஸ்டைல்களில் வெளிப்படுத்தினார் ரஜினி. அது மக்களுக்கு மிகவும் பிடித்துப்போய், பாராட்டப்பெற்றது. மகன் ரஜினி மிகவும் அப்பாவி. பொறுமை, நிதானமாக அப்பாவை திருத்த முயற்சிப்பார். இரு வேடத்தில் ரஜினி நடித்ததால் ஒளிப்பதிவாளர் பாபு, மிட்சல் கேமராவை வைத்து மாஸ்க் மூலமாக படமாக்கினார். இப்போது இருப்பது போல அப்போது கிராபிக்ஸ், குரோமோ போன்ற வசதிகள் எல்லாம் இல்லை. பாபுவின் திறமை வெளிப்பட்டது.

அப்பா ரஜினிக்காக டிரைவர் கவுண்டமணி ஒரு பெண்ணை அழைத் துக்கொண்டு வருவார். அந்தப் பெண் ‘‘ஐயாவுக்கு சின்ன வீடு இருக்கா?’’ என்று கேட்பார். அதுக்கு கவுண்டமணி, ‘‘சின்ன வீடா? ஒரு முனிசிபாலிட்டியே இருக்கு’’ என்று சொல்வார். அதுதான் அப்பாவின் கதாபாத்திரம். மனைவி லட்சுமி ஒரு விஷயத்தில் பொய் சொல்லிவிடுவார். உண்மையை வரவழைப்பதற்காக அப்பா ரஜினி அவரை அறைந்து அறைந்து விசாரிப்பார். இருவரின் நடிப்பும் உச்சத்தில் இருக்கும். லட்சுமி எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கக்கூடிய சிறந்த குணச்சித்திர நடிகை. அவரை நான் நடிப்பில் ‘பிசாசு’ என்றே கூறுவேன்.

நாளைக்கு பொழுது விடிந்தால் எனக்கு வயது 82. என் குடும்பத் துக்காகவும், எனக்காகவுமே வாழ்ந்த என் மனைவி கமலா இறந்த பிறகு என் பிறந்த நாளை நான் கொண்டாடுவது இல்லை. ஒவ்வொரு பிறந்த நாளி லும் சென்னையில் இல்லாமல் வெளியூருக்குச் சென்றுவிடுவேன். அதைப் போலவே இந்த முறையும் நான் வெளியூர் வந்துவிட்டேன். என்னை மனதார வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்து எனக்கு ஊக்கத்தைத் தரும்!

பிறந்த தேதிப்படி எனக்கு வயது 82. உடல் பலத்தின்படி எனக்கு வயது 52. மனசுப்படி எனக்கு வயது 32. உங்களை எல்லாம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் வழியே சந்தித்து மகிழ்வதால் எனக்கு வயது 22. வயது மனதை பொறுத்ததே தவிர, வருஷத்தைப் பொறுத்தது இல்லை.

இன்றைக்கும் எனக்கு நேரம் போதவில்லை. கம்பன் விழா, கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக் கட்டளை நடத்தும் கவியரசர் விழா, செவாலியே சிவாஜிகணேசன் அறக் கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான நிதியுதவி, உரத்த சிந்தனை நிகழ்ச்சிகள், நாட்டிய விழாக்கள், கல்லூரிகளிலும், பள்ளி களிலும் மாணவர்களைச் சந்தித்து விழிப்புணர்வை உண்டாக்குவது... இப்படி நேரத்தைப் பயனுள்ள நேரமாக்கிக் கொண்டிருக்கிறேன். என் கடமை பணி செய்து கிடப்பதே!

உழைத்து சாப்பிட்டால் சொர்க்கம். உட்கார்ந்து சாப்பிட்டால் நரகம். இதுவே என் பிறந்தநாள் செய்தி! அடுத்த வாரம் சந்திப்போம்.

- இன்னும் படம் பார்ப்போம்...

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x