Published : 03 Feb 2016 11:14 AM
Last Updated : 03 Feb 2016 11:14 AM

சினிமா எடுத்துப் பார் 44: ஸ்ரீதேவியால் அழகான ஸ்விம்மிங் ஃபூல்!

நான் எழுதும் ‘ப்ரியா’ ஷூட்டிங்கில் கலந்துகொள் ளாமல் அழுது கொண்டிருந்த தேவியைப் பார்க்க அவர் அறைக்குப் போனேன். அவருடைய தாய் ராஜேஸ்வரி என்னிடம் ‘‘ஸ்விம்மிங் டிரெஸ் போட்டுக்க மாட்டேன்’’ என்று அழுகிறாள் என்றார். நான் தேவியிடம் இந்தப் பாடலை நீச்சல் குளத்தில் எடுக் கணும். அதுக்கு ஸ்விம்மிங் டிரெஸ்தான் இயற்கையா இருக்கும். டபுள் பீஸ் ஸ்விம்மிங் டிரெஸ் வேண்டாம். சிங்கிள் பீஸ் ஸ்விம்மிங் டிரெஸ் போட்டுக்க’’ என்றேன். ஆனாலும் தேவி அரை மனதுடன் ஸ்விம்மிங் டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டார்.

ஸ்விம்மிங் டிரெஸ்ஸில் தேவி வந்ததும் அந்த அழகான ஸ்விம்மிங் ஃபூல் கூடுதல் பேரழகு பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் இளமை ததும்பும் ‘டார்லிங்… டார்லிங்… டார்லிங்…’ என்ற துள்ளல் பாடல், பாபுவின் ஒளிப்பதிவில் கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியாக அமைந்தது.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சிங்கப்பூர், மலேசியப் பெண்களைத் தேடி னோம். அவர்களில் அஸ்னா என்ற பெண்ணை தேர்ந்தெடுத்தோம். படத்தில் அஸ்னாவுக்கு ரஜினி தமிழ் கற்றுக் கொடுப்பது போலவும், ரஜினிக்கு அஸ்னா மலேய மொழி கற்றுக் கொடுப்பது போலவும் காட்சிகள் வைத் தோம். இளையராஜா அதனை பாடலி லேயே இணைத்துக்கொண்டார். ‘என் உயிர் நீதானே.. உன் உயிர் நான்தானே…’ என்கிற அந்தப் பாடல் காட்சி அழகு நிறைந்த பூங்காக்களிலும், கிராண்ட் வீல் சுற்ற ரஜினியும் அஸ்னாவும் பயணிப்பதைப் போலவும் எடுக்கப் பட்டது.

ரஜினி, அஸ்னா வரும் அந்தக் காட்சியை கேமராவை தலைகீழாகக் கவிழ்த்து வைத்து எடுத்தோம். அப்போது கேமரா லென்ஸ் முன்னால் வைத்திருந்த ஃபில்டர் கீழே விழுந்துவிட்டது. அது உடைந்து சுக்கல் சுக்கலாக ஆகியிருக் கும் என்று பயத்தோடு தேடிப் பார்த் தோம். எங்கள் துணை இயக்குநர் வி.பி.மூர்த்தி, ‘‘கண்டுபிடித்தேன்... கண்டுபிடித்தேன்…’’ என்று கத்தினார். அந்த ஃபில்டர் எந்த சேதாரமும் இல்லாமல் ஒரு செடியின் மேல் உட்கார்ந்திருந்தது.

படப்பிடிப்புக்கு மத்தியில் சுவையான சில கலகல விளையாட்டுகளும் அரங் கேறும். எங்கள் மேக்கப் மேன் முத்தப்பா கருப்பாக இருப்பார். இல்லை இல்லை… அட்டக் கருப்பு! கதாநாயகி அஸ்னாவோ சிவப்பு. இல்லை இல்லை… சிவப்போ சிவப்பு! இவர்கள் இரண்டு பேரையும் பார்த்ததும் எங்களுக்கு ஓர் எண்ணம் உண்டானது. அந்தக் கருப்பையும் இந்தச் சிவப்பையும் கையைக் கோத்துக் கொண்டு சிங்கப்பூர் கடைத் தெருக்களில் நடக்க வைத்தால் எப்படியிருக்கும்?! அதை உடனே பரிசோதித்து பார்த்தோம். அஸ்னாவின் கைகளை இணைத்துக் கொண்டு முத்தப்பா காதல் ஜோடியைப் போல் நடக்க, அந்தக் கடைத் தெருவே அவர்களைத்தான் பார்த்தது. அதனை கண்டு படப்பிடிப்புக் குழுவே சிரித்து மகிழ்ந்தது.

சிங்கப்பூரில் உள்ள டைகர் பாம் கார்ட னின் சைனீஸ் மண்டபங்களில் ‘ஏ… பாடல் ஒன்று… ராகம் ஒன்று’ என்ற பாடலை படமாக்கினோம். அதை பகோடா டைப் மண்டபம் என்று சொல்வார்கள். அந்த மண்டபங்களுக்கு பொருத்தமாக ரஜினி, தேவி இருவரையும் சரித்திர கால உடைகளை அணிய வைத்து அழகு பார்த்தோம். ரஜினிக்கு எப்போதும் சரித்திர நாயகனாக நடிப்பதில் ஆசை உண்டு. ரஜினியும் தேவியும் அந்த உடையில் ராஜா - ராணியாகவே காட்சி அளித்தார்கள். கண்கவர் லொகேஷன், அழகு மின்னும் உடையலங்காரம், இனிமை மிதக்கும் பாடல்கள், கைதேர்ந்த நடிகர்கள், அசத்தலான நடனம், அழகிய ஒளிப்பதிவு என இத் தனையும் சேர்ந்தால் படமும், பாடல் களும் ஹிட் ஆகாதா, என்ன?

‘ப்ரியா’ படப்பிடிப்பு சமயத்தில் சிங்கப் பூரில் அந்த நாட்டின் சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தேறியது. அந்த விழாவை படமாக்க வேண்டும் என்று சிங்கப்பூர் சுற்றுலாத் துறையில் அனுமதி கேட்டோம். ‘‘அணி வகுப்புகளுக்கும் பார்வையாளர்களுக் கும் இடையூறு இல்லாமல் நீங்கள் படமெடுத்துக் கொள்ளலாம்’’ என்று அனுமதி கொடுத்தார்கள். சாலையோரங் களில் மக்கள் உட்காருவதற்காக கேலரி அமைத்திருந்தார்கள். அந்தக் கேலரியில் நம் நடிகர்களும் நடிகைகளும் உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்ப்பது போல ஏற்பாடு செய்தேன். டிராகன் நடனம் உட்பட பலவிதமான ஆடல் கலைகள் சிங்கப் பூர் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்டன. எல்லாமுமே பார்ப் பதற்கு பிரம்மாண்டமாக இருந்தன.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த தேவியை வில்லன்கள் கடத்துவது போல கதை நகரும். சுதந்திர தின காட்சி களை அந்த விழாவில் எடுத்துக்கொண்டு, தேவியை வில்லன்கள் கடத்தும் அந்த கேலரி காட்சியை ஏவி.எம் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்தோம். உண்மையான விழாவையும், செட் போட்டு எடுத்த ஷாட்டுகளையும் சிறந்த முறையில் ஆர்.விட்டல் எடிட் செய்து கொடுத்தார். சிங்கப்பூரில் நடப்பதுபோலவே அமைந்திருந்தது. தொழில் நுணுக்கத்துக்குக் கிடைத்த பெருமை அது!

அந்தச் சுதந்திர தின விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ பேசும்போது, ‘‘படிப்பின் மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் டாக்டர்களை, இன்ஜினீயர்களை, வக்கீல்களை, கட்டிடக் கலை நிபுணர் களை, விஞ்ஞானிகளை உருவாக்க முடி யும். ஆனால், பொது வாழ்க்கை யில் சேவை செய்ய விரும்புகிறவர் களையும், அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களையும் நான் எப்படி அடையாளம் காண முடியும்? தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக முழுமையாக அர்ப்பணிக்கக் கூடிய இளைஞர்களை மக்கள் சேவைக்கும், அரசியலுக்கும் வருமாறு அழைக் கிறேன்’’ என்றார். அவர் சொல்லியது நம் நாட்டு இளைஞர்களுக்கும் பொருந்தும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பத்திரிகை யாளர்கள் ‘‘உலகத்தில் உங்களுக்கு யாரை சந்திக்க வேண்டும் என்று ஆசை?’’ என்று கேட்டபோது. அதற்கு ரஜினி, ‘‘சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவை சந்திக்க ஆசை’’ என் றார். உண்மையிலேயே லீ குவான் யூ உலக நாடு களில் சிறந்த நாடாக சிங்கப் பூரை உருவாக்கியிருக் கிறார். நாங்கள் சிங்கப்பூரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹாங்காங் சென்றோம்.

அங்குள்ள பல மலைகளை உள்ளடக் கிக்கொண்ட ஓஷன் பார்க் என்ற பூங்கா உலகத் திலேயே சிறந்த பூங்கா. அதைப் பார்த்த ரஜினி ‘‘இங்கு சில காட்சிகளை எடுக்கலாமே’’ என்று தனது ஆசையை வெளியிட்டார். அங்குள்ளவர்கள் அதற்கு அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்றார்கள். என்ன செய்தோம்?

- இன்னும் படம் பார்ப்போம்…

படம், உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x