Published : 18 Nov 2015 10:45 AM
Last Updated : 18 Nov 2015 10:45 AM

சினிமா எடுத்துப் பார் 34: காதல் பூக்கும் தருணம்!

‘பெத்த மனம் பித்து’ படம் வெற் றிக்குப் பிறகு எங்கள் குழுவின் மேல் நம்பிக்கை வைத்து, அடுத்தடுத்து படம் எடுக்க அட்வான்ஸ் கொடுக்க பலர் முன் வந்தார்கள். நல்ல கதை, நல்ல கம்பெனி என்று பார்த்து இறங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். இந்நிலையில் ‘விக்டரி மூவிஸ்’ பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த விஜய பாஸ்கர் படம் எடுக்க ஆசையோடு எங்களை அணுகி ‘‘என் கையில் 25 ஆயிரம் ரூபாய் உள்ளது. தொழிலும் தெரியும், எல்லா விநியோகஸ்தர்களும் நல்ல பழக்கம், படம் தொடங்குவோம்’’ என்று சொல்லி அவர் பெயரிலேயே ‘விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ என்ற கம்பெனியை ஆரம்பித்தார்.

அப்போது பஞ்சு அருணாசலம் நகைச் சுவை கதைகளை எழுதி நல்ல பெயர் பெற்று வந்தார். கவியரசு கண்ணதாச னின் அண்ணன் கண்ணப்பனின் மக னான பஞ்சு அருணாசலம், கண்ணதாச னிடம் உதவியாளராக இருந்துவந்தார். பின்னர் ஒருகட்டத்தில் படங்களுக்கு வசனம் எழுதச் சென்றார். அவர் எழுதிய முதல் மூன்று படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. அதனால் ‘பாதி படம் பஞ்சு அருணாச்சலம்’ என்றே அவருக்கு பெயர். அதன் பிறகு நகைச்சுவை கதை களுக்குத் திரைக்கதை எழுதி வெற்றி பெற்றார். சினிமா உலகில் தோல்வி களைக் கண்டு அஞ்சாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெற்றவர் பஞ்சு அருணாசலம்.

அவர் எங்களுக்கு முதன்முதலில் எழுதி கொடுத்த படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘எங்கம்மா சபதம்’. இதில் முத்து ராமன், சிவகுமார், ஜெயசித்ரா, விதுபாலா, மனோரமா, அசோகன் நடித் தார்கள். இசை விஜய பாஸ்கர். கன்னடத் திரை இசையுலகில் புகழ் பெற்றிருந்த அவரை ‘கன்னடத்து எம்.எஸ்.வி’ என்றே அழைப்பார்கள். அவருடைய இசையில் ‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’என்ற அருமையான பாடலுக்கு, சென்னை கடற்கரையில் இரவு 9 மணி முதல் 2 மணி வரையில் சிவகுமார், ஜெயசித்ரா இருவரையும் நடிக்க வைத்து படமாக் கினோம். சிவகுமாருக்கு அப்போதுதான் திருமணம் முடிந்திருந்தது. அவர் என் அருகில் வந்து ‘‘சார் இந்த ராத்திரி நேரத் துல படப்பிடிப்பு வைக்கிறீங்களே’’ என்றார். ‘‘மனைவியைக் காக்க வைப்பதிலும் ஓர் இன்பம் இருக்கு’ என்று சொல்லி நாங்கள் அவரை கிண்டலடித்தோம்.

‘எங்கம்மா சபதம்’ நகைச்சுவை பட மாக உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே கதை மீண்டும் ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் எடுக்கப் பட்டதில் இருந்து பஞ்சு அருணாசலத் தின் கதை ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம்.

‘எதையும் பெரிதாக பொருட்படுத் தாத இளம் வயதில் காதலில் இறங்கும் போது, அது ஆத்மார்த்தமான காதலாக மலராமல், டைம் பாஸ் காதலாக முளைத் தால் அதன் விளைவு என்னவாகும்?’ என்பதைப் பின்னணியைக் கொண்ட கதைதான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’. எங்களை ‘கமர்ஷியல் இயக்குநர்’ என்று சிலர் சொல்கிறார்கள். கருத்துள்ள, கதை அம்சம் கொண்ட படங்களை நாங்களும் எடுத்துள்ளோம் என்பதற்கு 1975-ல் எடுக்கப்பட்ட ‘மயங்குகிறாள் ஒரு மாது’ ஒரு சாட்சி!

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ‘‘சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவை முழு படத்துக்கும், குறிப்பிட்ட தொகைக்கு வாடகைக்குத் தரத் தயாராக இருக் கிறார்கள். அங்கு படமெடுக்க முன்வந் தால் ராமப்பாவிடம் சொல்லி, முழு உதவியும் வாங்கித் தருகிறேன்’’ என்றார். தயாரிப்பாளர் விஜய பாஸ்கருக்கு ஒரே கொண்டாட்டம். அங்கு போய் ‘மயங்கு கிறாள் ஒரு மாது’ படப்பிடிப்பைத் தொடங்கினோம். படப்பிடிப்புக்கான அத்தனை வசதிகளையும் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் செய்து வைத்திருந்தார். அப்போது சென்னை யில் மின் தடை (கரண்ட் கட்) இருந் தது. ஆனால், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மின் தடையே இல்லை. காரணம், ஸ்டுடியோ முழுவதும் ஜெனரேட்டர் வசதி செய்திருந்தார் சுந்தரம். அவரெல்லாம் சினிமாவின் தீர்க்கதரிசி!

‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் முத்துராமன், விஜயகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெய லட்சுமி ஆகியோர் நடித்தனர். சுஜாதா ஒரு கல்லூரி மாணவி. அவர் அணிய வேண்டிய உடைகளை மேக்கப் அறை யில் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார். ‘‘மாடர்ன் டிரெஸ் எனக்கு வேண் டாம். சேலை கட்டிக் கொள்கிறேனே’’ என்றார். ‘‘அது கவர்ச்சி உடை இல்லை. கல்லூரிக்கு அணிந்து செல்கிற சுடிதார் போன்ற உடைதான்’’ என்று எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் பிடிவாதமாக மறுத்தார். சுஜாதாவின் அறைக்கு அருகில் இருந்த குணச்சித்திர நடிகை காந்திமதியிடம் ‘‘என்ன செய் வீர்களோ தெரியாது. சுஜாதாவிடம் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறி, அந்த உடையை அணிவித்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன். அடுத்த சில மணித் துளிகளில் சுடிதார் உடையில் வந்து நின்றார் சுஜாதா. சாமர்த்தியமான பேச்சிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்தார் காந்திமதி.

படத்தில் விஜயகுமாருக்கும் சுஜாதா வுக்கும் காதல் பூக்கும். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தன் வீட்டுக்கு சுஜாதாவை அழைத்து வருவார். இனிமையான தனிமை காதலர்களை எல்லை மீற வைத்துவிடும். அதன் விளைவு, கரு கலைப்பு வரைக்கும் சென்றுவிடும். அப்போது சுஜாதாவுக்கு சிகிச்சை செய்த டாக்டர் எம்.என்.ராஜம், ‘‘நடந்ததை மறந்து விடு. இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. இனி, அடுத்து உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்’’ என்பார் சுஜாதாவிடம்.

கதாநாயகன் முத்துராமன் வீட்டில் இருந்து சுஜாதாவைப் பெண் பார்க்க வருவார்கள். சுஜாதாவுக்கு பேரதிர்ச்சி. டாக்டர் எம்.என்.ராஜத்தின் தம்பிதான் மாப்பிள்ளை முத்துராமன். எம்.என்.ராஜம் சுஜாதாவை வீட்டுக்குள்ளே தனியாக அழைத்துச் சென்று, ‘‘அன்று சொன்னதைத்தான் இப்போதும் சொல் கிறேன். என் தம்பியைத் திருமணம் செய்துகொண்டு, நல்லபடியாக வாழ்க் கையைத் தொடங்கு’’ என்று கூறி திருமணம் செய்து வைப்பார்.

தேங்காய் சீனிவாசன் எதிர்பாராத விதமாக தான் எடுத்த விஜயகுமார், சுஜாதா இணைந்திருந்த புகைப்படங் களை வைத்துக்கொண்டு, சுஜாதாவை பிளாக்மெயில் செய்வார். சுஜாதா மனதள வில் உடைந்து, உடல்நிலை பாதிக்கப் பட்டு இறந்துவிடும் நிலை யில் தன் கணவ னிடம், தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பார். அதற்கு முத்துராமன், ‘‘உன்னை பெண் பார்க்க வரும்போதே எனக்கு அந்த உண்மை தெரியும். நீயும், என் அக்காவும் பேசியதை நான் அன்றைக்கு கேட்டேன். தெரியாமல் செய்த தவறை மன்னிப்பதுதான் மனித குணம்’’ என்று அவரை ஏற்றுக்கொள்வார். சுஜாதா இறுக்கம் குறைந்து உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார். இதோடு படம் முடியும். இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் ‘‘தவறு செய்த கதாநாயகி சாக வேண்டும். அப்படி கதையை முடித்தால் படத்தை வாங்கிக்கொள்கிறோம்’’ என்றார்கள்.

எங்களுக்கு மிகுந்த பண நெருக்கடி. நாங்கள் என்ன செய்தோம்?

- இன்னும் படம் பார்ப்போம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x