Published : 02 Sep 2015 10:44 AM
Last Updated : 02 Sep 2015 10:44 AM

சினிமா எடுத்துப் பார் 24- உதய சூரியனின் பார்வையிலே எம்.ஜி.ஆர்!

‘அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.

இந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.

சரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே?’’ என்றார். சிக்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே?’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.

ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.

‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா?’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..!’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்!

இயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.

‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பனி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.

விமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.

படத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்.

முந்தைய அத்தியாயம்:>சினிமா எடுத்துப் பார் 23- எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x