Last Updated : 14 Jul, 2017 10:56 AM

 

Published : 14 Jul 2017 10:56 AM
Last Updated : 14 Jul 2017 10:56 AM

சினிமாலஜி 12 - பசங்க நடிச்சா, சிறுவர் சினிமாவா?

சினிமாலஜி வகுப்பில் ஏதோ ஒரு புள்ளியில் சிறுவர் சினிமா குறித்த பேச்சு தொடங்கியது. பார்த்தா சமீபத்தில் பார்த்த ‘கட்டு’ (Gattu) எனும் படம் பற்றி ஆர்வத்துடன் பேசினான்.

“ரொம்ப சிம்பிளான கதை. குழந்தைத் தொழிலாளி சிறுவன் ‘கட்டு’தான் புரொட்டகனிஸ்ட். தன் ஏரியாவில் யாராலும் அறுக்க முடியாத காளி எனும் காத்தாடியை காலி பண்ணனும்றதுதான் அவனோட லட்சியம். அதுக்கான வியூகம் வகுத்து ஒரு பள்ளியில் மாணவன் போல் நடித்து உள்ளே நுழைகிறான். நாம எதிர்பார்க்குற கிளைமாக்ஸ்தான். ஆனா, அதுல இருந்த மிக எளிமையான டுவிஸ்ட் வேற லெவல். சிறுவர்கள் கொஞ்சம்கூடப் போரடிக்காம ரசிக்கக்கூடிய படம். இதுலயும் சமூக அக்கறை சார்ந்த அம்சங்கள் உள்ளே இருக்கு. ஆனா, அதெல்லாம் சினிமா மொழியில் கலந்திருக்கே தவிர நேரடியாகப் பாடம் நடத்துற மாதிரி நாடகத்தனம் இல்லை”.

“நல்லது. இப்ப என்ன சொல்ல வர்ற?” - பார்த்தாவைப் பக்குவமாகக் கிளறினாள் ப்ரியா.

“தமிழ்ல சிறுவர் இலக்கியத்துல மட்டும் இல்லை; சிறுவர் சினிமாவிலும் பயங்கர வறட்சி. உண்மையிலேயே சிறுவர் சினிமாவுக்கு இருக்குற பெரிய மார்க்கெட் பத்தின புரிதலே இங்க இல்லைன்னு தோணுது” என்று மையப்புள்ளியை நோக்கி நகர்ந்தான் பார்த்தா.

தனக்குச் சாதகமான இடம் கிடைத்துவிட்டதாக நினைத்துப் புகுந்த ப்ரேம், “இதுக்கும் எங்க மணி சாரின் தேவை எப்பவும் இருக்கு. ‘அஞ்சலி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’-னு அப்பப்ப சிறுவர்களுக்கான சினிமாவை உயிர்ப்பித்தவர்” என்றான் பெருமிதமாக.

கொந்தளிப்பு கவிதா வெகுண்டெழுந்தாள்.

“ ‘அஞ்சலி’யைக் குழந்தைகள் படத்துக்குள்ள அடக்கிட முடியாது. இங்கே நிறைய பேருக்கு எது சிறுவர் சினிமான்னே தெரியலைன்னு தோணுது. குழந்தைகளை வெச்சு எடுத்துட்டா, அது சிறுவர் சினிமா ஆயிடுமா? ‘அஞ்சலி’யும் ‘கன்னத்தில் முத்தமிட்டா’லும் சிறுவர் கதாபாத்திரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பெரியவர்களுக்கான படங்கள். இதோட கம்பேர் பண்ணும்போது, ராம நாராயணன் ஓரளவுக்குக் குழந்தைகள் ரசிக்கிற மாதிரியான படங்களைக் கொடுத்துருக்காருன்னு சொல்வேன்”.

“ஆனா, ‘அஞ்சலி’க்கு மூணு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கே” என்று முட்டுக்கொடுத்தான் ப்ரேம்.

“சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த ஆடியோகிராஃபி, சிறந்த தமிழ்ப் படம் ஆகிய பிரிவுகளில்தான் ‘அஞ்சலி’க்கு விருது கிடைச்சிருக்கு. சிறந்த சிறுவர் சினிமாவுக்கு இல்லை” என்று அடக்கினாள் கவிதா.

“சரி, ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்துக்கு அந்தப் பிரிவுல தேசிய விருது கிடைச்சிருக்கே” என்று ஆர்வமாகத் தகவல் சொன்னான் மூர்த்தி.

“ஆமா, ஆனா அந்தப் படத்தோட ஒரிஜினல் வெர்ஷன் மலையாளம். அதுக்குதான் நேஷனல் அவார்டு. சிறுவர் சினிமா பிரிவுல 1953-ல் இருந்தே தேசிய விருது தர்றாங்க. அதுல விருது வாங்கின ஒரே தமிழ்ப் படம் ‘காக்கா முட்டை’. இந்த விருதுதான் அளவுகோல்னு சொல்லலை. ஆனா, இந்த ஒரு பிரிவில் விருது வாங்குறதுக்கு எவ்ளோ நாள் ஆயிருக்கு. சினிமா என்பது நம்ம ஊருக்கு மிக முக்கியமான ஒண்ணு. அதுலயும் சிறுவர்கள் கண்டுகொள்ளப்படுகிறது இல்லைன்றது எவ்ளோ பெரிய ஏமாற்றம்”.

இது தனக்குப் பிடித்தமான களம் என்பதால் சற்றே விரிவாகப் பேசினாள் மேனகா.

“சமீப ஆண்டுகளில் வந்ததுல ‘சைவம்’ ஓரளவு ஓகே. ‘காக்கா முட்டை’ நல்லா ஓடின பிறகும்கூட சிறுவர்கள் சினிமா வராதது வருத்தத்துக்கு உரியது. இந்த வறட்சிதான் அடல்ட் காமெடி பேய்ப் படங்களுக்குக் குழந்தைகளை அழைச்சிட்டுப் போக வேண்டிய அவலச் சூழலுக்குக் காரணம். அதுகூடப் பரவாயில்லை. ரத்தம் தெறிக்கிற ‘பாகுபலி’ போன்றவற்றைக் குழந்தைகளுக்கானதா மாத்துறது எவ்வளவு பெரிய அநியாயம்?

இன்னொரு பக்கம், குழந்தைகளை வைச்சு உணர்வுபூர்வமான படங்களைத் தர்றாங்களே தவிர, குழந்தைகளுக்கான படைப்புகளைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. ‘தங்க மீன்கள்’ எல்லாம் இந்த வகையறாதான். சரி, தமிழ் சினிமா துறையினரால உருப்படியான 10 படங்களைத் திரட்டி ‘சில்ரன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ ஒண்ணு நடத்தக்கூடிய திறன் இருக்கா?”


கட்டு

“நீங்கள்லாம் பாண்டிராஜ் என்கிற சமகால இயக்குநர் இங்கே இருக்குறதை மறந்துட்டுப் பேசுறீங்க?” - என்று கதறினான் ஜிப்ஸி.

“ஓ... பாண்டிராஜ்தான் சமகால தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த சிறுவர் சினிமா படைப்பாளின்னு சொல்ல வர்றியா?” என்று கேட்டான் பார்த்தா.

“அப்படி இல்லை. அவர்தான் குழந்தைகளை வெச்சி, குழந்தைகளை மையமா வெச்சி இப்போதைக்குத் தமிழ்ல படங்கள் கொடுத்துட்டு இருக்கார். அவரோடதும் சிறுவர் சினிமா தானே?”

“வாப்பா... சிறுவர் சினிமாவோட மார்க்கெட் வேல்யூ தெரிஞ்ச டைரக்டர்னு வேணுன்னா அவரைச் சொல்லலாம். பசங்க-ன்னு படத்துக்குப் பேரு வெச்சா, அது குழந்தைகள் சினிமா ஆகிடாது. குழந்தைகளோட உலகத்தை மையமாக வெச்சிட்டு, பெரியவர்களுக்கு எடுக்கப்படுற படங்கள் அவை. அதுவும், சினிமாவுக்குள்ள வசனம் மூலமா அட்வைஸ் பண்றது இன்னும் ஓவரு” என்று உக்கிரமாகப் பேசினாள் மேனகா.

“இவங்களே இங்க சிறுவர் சினிமா இல்லைன்னு பொலம்புவாங்களாம்; கொஞ்சமா ட்ரை பண்றவங்களையும் கழுவியூத்துவாங்களாம். என்னங்கடா உங்க லாஜிக்?"

“உன்னோட ஆதங்கம் புரியுது ஜிப்ஸி. சிறுவர் சினிமாவே இல்லைன்னாலும் பரவாயில்லை. ஆனா, போலியான சில்ரன்ஸ் ஃபிலிம்ஸுக்கு ஊக்கம் கொடுக்குறதை ஏத்துக்க முடியாது. ஆனா, நல்ல கதையும் திரைக்கதையும் கிடைச்சா, ஈரானிய சினிமா ரேஞ்சுக்கு அற்புதமான சிறுவர் சினிமா கொடுக்கக் கூடிய திறமை, இயக்குநர் பாண்டிராஜுக்கு இருக்குன்னு நம்புறேன். காத்திருப்போம்” - சற்றே அமைதியானாள் மேனகா.

“பசங்க பார்ட் ஒண்ணு நிஜமாவே ரொம்ப நல்ல படம். அதுல குழந்தைகள் போர்ஷன் எல்லாமே டாப் க்ளாஸ். ஆனா, பசங்க பார்ட் டூ இருக்கே... அதுவும் சூர்யா வர்ற காட்சிகள் எல்லாமே செத்துச் செத்துப் படம் பார்க்க வேண்டியதாப் போச்சு. ஒண்ணு குழந்தைகளுக்கான படமா இருக்கணும்; இல்லைனா, குழந்தைகளும் பெரியவங்களும் பார்க்கக்கூடிய சிறுவர் சினிமாவா இருக்கணும். இதுல எதுலயுமே சேர்த்துக்க முடியாத அளவுக்குக் குழப்பமான படங்களை எப்படிக் குழந்தைகள் சினிமா லிஸ்ட்ல சேர்க்க முடியும்?” என்றான் பார்த்தா.

“சரி, நீயே ஒரு உதாரணம் சொல்லேன்...” - இது ஜிப்ஸி.

“காக்கா முட்டை... மையக் கதாபாத்திரங்களே சிறுவர்கள்தான். அவங்க பார்வையிலதான் கதை நகருது. இந்தப் படத்தைப் பார்க்குற குழந்தைகள் ரொம்ப ஈஸியா தன்னைப் படத்துக்குள்ள நுழைச்சிகிட்டு சினிமாவை உள்வாங்க முடியும். அதேநேரத்துல, வெறும் பார்வையாளரா இருக்குற பெரியவங்களால இந்தப் படம் பேசின சமூக - அரசியல் பார்வையைப் புரிஞ்சிக்க முடியும்” என்று விவரித்தான் பார்த்தா.

“அதெல்லாம் முடியாது. எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர் பாண்டிராஜை ‘குழந்தைகளுக்கான படைப்பாளி’ன்னு நீ சொல்லியே ஆகணும். அதுவரை உன்னைவிட மாட்டேன்” என்று அடம்பிடிக்கவே ஆரம்பித்துவிட்டான் ஜிப்ஸி.

பார்த்தா சற்று யோசித்தான்.

“தமிழ் சினிமாவின் குழந்தைகள் படைப்புக்கான குழந்தைத்தனம் மிகுந்த படைப்பாளி இயக்குநர் பாண்டிராஜ்தான். அவரும் இன்னும் வளரணும். அவர் போலவே மேலும் சிலரும் சிறுவர் சினிமா நோக்கி நகர்ந்தால் மகிழ்ச்சிதான்.”

ஜிப்ஸிக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை.

தொடர்புக்கு - siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x