Last Updated : 21 Apr, 2017 11:11 AM

 

Published : 21 Apr 2017 11:11 AM
Last Updated : 21 Apr 2017 11:11 AM

சினிமாலஜி 02 - சரணாகதி ஆவதுதான் பெண்களின் விதியா?

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)

மாணவர்களின் பக்கம் வந்து அமர்ந்தார் மணி ரத்னம். ‘ராவணன்' முதல் ‘காற்று வெளியிடை' வரை சமீபத்திய வர்த்தகப் பின்னடைவுகளுக்குத் திரைக்கதையில் அவர் சொதப்பியதே காரணம் என நினைத்த பிரேம் எழுந்தான்.

“சார், ஹாலிவுட்ல பெரும்பாலும் ஒரு இயக்குநர் இயக்கம் மட்டும் பார்த்துக்குறார். இங்கேதான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே ஒருத்தரே செய்றார். உங்க கிட்ட ஒரு நல்ல ஸ்கிரிப்ட் அனுப்பினா, அதை இயக்குவீங்களா?”

“ம்ம்ம்.... (உற்சாகமாக). எழுதுவது கஷ்டமான விஷயம். ஆனா, அந்த ஸ்கிரிப்ட் எனக்கு ஈடுபாட்டைத் தரணும். அப்படி இருந்தா, நீங்க ஸ்கிரிப்ட்டை எனக்கு நேராவே வந்து தரலாம்...”

“உங்க படக் காட்சிகளைப் பார்த்தவுடனே இது மணி ரத்னம் படம்னு தெரிஞ்சிடுதே... நீங்க அழகுணர்ச்சியோட வைக்கிற வழக்கமான ஃப்ரேம்தான் க்ளிஷே ஆகிடுதோ?” என்றான் ரகு.

“சினிமாவுக்கு ஃப்ரேம் ரொம்ப முக்கியம். அது கதையையும் காட்சியையும் சொல்றதுக்கான கருவிகளில் ஒண்ணு. நான் வளர்ந்தபோது எனக்குப் பிடிச்ச ‘சிட்டிசன் கேன்' மாதிரியான படங்கள், குரோசோவா படங்கள் எல்லாமே என் மனசுல பதிஞ்சது. என் முதல் படத்தோட கேமராமேன் பாலு மகேந்திரா. அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். நாம பார்க்கும் படங்களில் ஒரு ஃப்ரேம் ரொம்ப பாதிச்சா, அது நம்ம மனசுக்குள்ள இருக்கும். அதையெல்லாம் ரசிக்க ஆரம்பிச்சுதான் நம்ம டேஸ்டை டெவலப் பண்ணிக்கிறோம்” என்றதும், “ஓஹ்ஹ்... அதான் அகிரா குரோசாவா வைத்த ஃப்ரேம்களின் பாதிப்பில் இருந்து இன்று வரை இவர் மீளவில்லையோ?!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் பார்த்தா.

“சரி சார். ஒரு கதைக்கான கருவை எங்கிருந்து பிடிக்கிறது?” - ஜிப்ஸி

“என்னை ஏதோ ஒரு விஷயம் பாதிக்குது. அது அரசியலா இருக்கலாம். உணர்வுபூர்வமான சமூகப் பிரச்சினையா இருக்கலாம். அதுபத்தி உடனே கருத்து சொல்றதைவிட, முழுசா புரிஞ்சுட்டு, மனசுக்குள்ளயே ரொம்ப நாள் டிராவல் பண்ணிட்டு, தேவைப்படுற இடத்துல ஒரு சினிமாவுக்குள்ள அதைக் கொண்டுவருவேன். இலங்கைத் தமிழர் பிரச்சினை எப்பவோ ஆரம்பிச்சுது. ஆனா, அதை ஒரு கதைக்களமா நான் ரொம்ப லேட்டாதான் எடுத்துக்கிட்டேன். ஒரு சின்னக் குழந்தைக்கும் பயலாஜிக்கல் அம்மாவுக்கும் இடையிலான உறவு சம்பந்தமா ‘டைம்' பத்திரிகையில் ஒரு செய்திக் கட்டுரை வந்தது. அதுல இருந்த நேர்மையான உணர்வுகளை எடுத்து, இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பின்புலமா வெச்சு ‘கன்னத்தில் முத்தமிட்டால்' திரைக்கதையை அமைச்சேன்.”

“ஆனா, உங்க படத்துல வர்ற கதாபாத்திரங்கள் எல்லாமே எலைட்டாவே இருக்காங்களே. விளிம்பு நிலை...?” என்று கவிதா கேள்வியை முடிப்பதற்குள் மீண்டும் முகம் மாறினார் மணி ரத்னம்.

அதை கவனித்த பிரேம், “பகல் நிலவு, நாயகன், அஞ்சலி, தளபதி, திருடா திருடா, ஆய்த எழுத்துல வர்ற மாதவன் - மீரா ஜாஸ்மின் போர்ஷன், கடல்... இதுல வர்ற முக்கியக் கதாபாத்திரங்கள் எல்லாரும் எலைட்டா?” என பதில் கேள்வியை முன்வைத்தான்.

சற்றே நிதானம் அடைந்த மணி ரத்னம், “நீங்க எலைட்னு எதைச் சொல்றீங்கன்னு சரியா தெரியல. நீங்க சொல்ற மாதிரி மனிதர்கள் பத்தி பாலா போன்ற இயக்குநர்கள் ரொம்ப அழகாவே பண்றாங்களே. எல்லா விதமான மக்களோட உணர்வுகளையும் சினிமா பிரதிபலிக்கணும். ஒரு மகாராஜாவைப் பற்றி கதை இருந்தாலும், அதுக்குள்ள உண்மை இருக்கணும். மகாராஜாவைப் பத்தி கதை எடுக்காதீங்கன்னு சொல்லக் கூடாது. எந்த ஒரு படைப்பாளியையும் அவரோட பின்னணியை வெச்சு மதிப்பிடுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. படைப்பாளி, படைப்பு ரெண்டுமே வேற வேற” என்றபோது அவரிடம் ஒருவித அலுப்பு தெரிந்தது.

“ஒரு படம் எடுக்கும்போது, இந்தத் தவறுகள் எல்லாம் பண்ணக் கூடாதுன்னு உங்களோட அனுபவத்தை வெச்சு சொல்ல முடியுமா?” - இது பிரேம்.

“நிச்சயமா. நாம நிறைய சோதனை முயற்சி செய்றோம். அதைச் செய்யும்போதே தவறுகள் நமக்குத் தெரியவரும். ஆனா, கால் வைச்சுட்டதால பின்வாங்க முடியாது. ‘ராவணன்' நல்ல உதாரணம். இரண்டு மொழிகளில் எடுக்கும்போதே நேட்டிவிட்டி பாதிக்கப்பட்டுச்சு. அப்படி இருந்தும் இயன்ற வரை நம்பகத்தன்மையோட கொடுக்க முயற்சி பண்ணினோம். சினிமாவுல மிகைப்படுத்துறது இருக்கலாம். இருக்குறதை இருக்கறபடியே காட்ட இது ஒண்ணும் டாக்குமென்ட்ரி இல்லை.”

“காற்று வெளியிடைக்கு வருவோம். பலருக்கும் நெருக்கமாவே இல்லையே. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு” என்று கொளுத்திப் போட்டான் ராஜேஷ்.

“ஸீ... இது உறவுக் கதை. காஷ்மீரும் காலகட்டமும் களம், பின்னணி மட்டும்தான். ஃபைட்டர் பைலட், டாக்டர்ன்றது அவங்க ரெண்டு பேரு கதாபாத்திரங்களை வரையறுக்குற விஷயம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டதை கவிதா ஏற்கவில்லை.

“லீலாவின் தன்மானத்தை வி.சி. காயப்படுத்திட்டே வர்றான். ஆனா, உறுதியா எதிர்வினையாற்றாமல் இறுதி வரை சரணாகதி ஆவதுதான் பெண்களோட விதியா?” - ஆம், இது கவிதாதான்.

இதைக் கேட்டுப் படபடப்புடன் பேசத் தொடங்கிய ரகு, “எனக்கு இது அற்புதமான படம். அவ்வளவு ஆழமாக ஒரு தீர்க்கமான காதலை சமீபத்துல எந்தப் படத்துலயும் பார்க்கலை. ஆண்களிடம் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம், கயமை, கர்வம், சுயநலம் எல்லாத்தையும் பிரதிபலிக்கிற வி.சி., தன்னிடம் லீலா காட்டிய பேரன்புல எல்லா எதிர்மறை மனோபாவத்தையும் துறந்துட்டு சரணாகதி ஆகிறான்...” என்று இழுக்கும்போதே மணி ரத்னம் இடைமறித்தார்.

“ஒரு சினிமாவைத் தங்களோட பார்வைக்கு ஏற்ற மாதிரி எப்படி வேணுன்னாலும் அணுகிக்கலாம். உங்களை மாதிரி ஆரோக்கியமா விவாதிக்கலாம். ஒரு படத்தை எடுத்தவனே இதுல நான் இதைத்தான் சொன்னேன்னு சொன்னா, அப்புறம் அதைப் பத்தி பேச ஒண்ணுமே இருக்காது.”

“அதெல்லாம் ஓகே சார்... நம்பகத்தன்மை பத்தி சொன்னீங்க. காற்று இடைவெளியில் பாகிஸ்தான் ஜெயில்ல இருந்து அவ்ளோ ஈஸியா கிளம்பி வர்ற மாதிரி ஃபீல் இருந்துச்சே?” என்று சன்னமாகக் கேட்டான் பார்த்தா.

சளைக்காத மணி ரத்னம், “அதுக்குப் பின்னால ஒரு உண்மைக் கதை இருக்கு. பாகிஸ்தானில் போர்க் கைதியாக இருந்த திலீப் பாரூல்கர் 1972-ம் ஆண்டு மல்விந்தர் சிங் கிரேவால், ஹரிஷ் சின்ஜி ஆகிய சக கைதிகளுடன் ராவல்பிண்டி சிறையிலிருந்து தப்பித்தார். அதை 'Four Miles to Freedom' என்ற புத்தகம் முழுசா விவரிக்கும்” என்று பின்னணி உண்மைக் கதை குறித்து விரிவாக கோனார் உரையாற்றியபோது பார்த்தா முனகியது:

அப்படின்னா, ‘இந்தப் படத்தில் வரும் கதை, கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருந்திருந்தா, அது தற்செயல்'னு டிஸ்க்ளைமர் போடுறதே ஒரு தற்செயலா?

“இருவர் படம் வெளிவந்து சரியா ஓடவும் இல்லை. பலரும் கழுவியூத்தினாங்க. ஆனா, இன்னிக்கு எங்களுக்கு அந்தப் படமே பாடம் நடத்துது. எல்லாருமே கொண்டாடுறாங்க. நீங்க ரொம்ப அட்வான்ஸா இருக்கீங்க. அதான் விஷயம்” என்று புகழாரம் சூட்டிய அதேநேரத்தில் பார்த்தா பதிந்துகொண்டிருந்த ஃபேஸ்புக் நிலைத்தகவல்:

“காற்று வெளியிடை ரீலீஸை 2027-க்கு ஒத்திவைத்திருந்தால் படம் வேற லெவல் ஹிட் உறுதி என்கிறான் நண்பன் பிரேம்.”

அந்தப் பதிவுக்கு சிரிப்பு விருப்பங்கள் பெருகிக்கொண்டிருந்த வேளையில், சிறப்பு வகுப்புக்கு மணி ரத்னம் வழங்கிக்கொண்டிருந்த முடிவுரை:

“டெக்னாலஜி டெவலப்மென்ட்ஸ் நடந்துட்டே இருக்கு. அதனால படம் எடுக்குறது ஈஸினு நினைக்காதீங்க. சினிமா இன்னும் துல்லியமா இருக்கணும்னு ஆடியன்ஸ் எதிர்பார்ப்பாங்க. அது மிஸ் ஆச்சுனா நாம ஃபெயில் ஆயிடுவோம். சோ, டெக்னாலஜிலயும் அப்டேட்டா இருக்கணும், எமோஷன்ஸையும் ரியலிஸ்டிஸையும் கூடுதலா கவனிக்கணும்!”

அதைக் கேட்ட பார்த்தாவும் பக்குவம் உணர்ந்தவனாக மணி ரத்னத்தைப் பார்த்தான்!

- தொடர்புக்கு siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x