Last Updated : 27 Jun, 2014 11:13 AM

 

Published : 27 Jun 2014 11:13 AM
Last Updated : 27 Jun 2014 11:13 AM

சர்வதேச சினிமா: காதலும் கணிதம் போல

கெய்கோ கிகாஷினோ (Keigo Higashino) என்னும் ஜப்பான் எழுத்தாளரின் நாவலான ‘த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ 2005-ல் வெளியானது. பெரிய வரவேற்பு பெற்ற இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு ஹிரோஷி நிஷிடானி என்னும் இயக்குநர் ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்ற ஜப்பானியத் திரைப்படத்தை உருவாக்கினார். இது 2008-ல் வெளிவந்தது. உலக நாடுகளில் இந்தப் படம் பெரிதாகக் கவனிக்கப்படாவிட்டாலும் ஜப்பானிய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அளித்த ஏகோபித்த வரவேற்பு காரணமாக அந்த ஆண்டின் வசூல் சாதனை படைத்த படங்களில் இதுவும் ஒன்றானது.

பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக இருக்கும் டெட்ஷியா இஷிகாமி சமூகத்தைப் புறக்கணித்துத் தனித்து வாழ்பவன்; கணித மேதை. வாழ்வில் கணிதம் தவிரப் பிறிதொன்றை நினைத்தே பார்க்காதவன். வாழ்வில் சலிப்பும் மனக்கசப்பும் கொண்டு திரியும் அவனது வாழ்வில் வருகிறாள் அவள். அவனது அனைத்துக் கவனங்களையும் ஒருசேர ஈர்த்துக்கொள்கிறாள் அவள். கணிதம் பரவிக் கிடந்த அவனுக்குள் காதல் வேர் விடுகிறது. அந்தக் காதலின் ஊடாகப் பயணப்படும் திரைக்கதையை ஒரு த்ரில்லராகப் படமாக்கியுள்ளார் இயக்குநர். காட்சிகளில் தென்படும் அடர்த்தியான இருளும் மெல்லிய ஒளியும் படத்தை மர்மமானதொரு தளத்திற்கு நகர்த்திவிடுகின்றன. தீவிர அக உணர்வு சார்ந்த இப்படத்தைத் திரைக்கதைக்குத் தோதாக வழக்கத்திலிருந்து மாறுபட்ட நிதானத்துடன் படமாக்கியிருக்கும் உத்தி படத்தின் செய் நேர்த்தியையும் நுட்பத்தையும் எளிதில் உணர்த்துகிறது.

இஷிகாமியின் பிரியத்திற்குரியவளான யாசுகோ ஹனவோகா ஒரு ரெஸ்டாரண்டை நடத்திவருகிறாள்; விவாகரத்து பெற்றுத் தனியே தன் மகள் மிஸாடோவுடன் வாழ்கிறாள். ஆனால் அவளுக்குத் தொடர்ந்து தொல்லை தந்துகொண்டிருக்கிறான் அவள் கணவன். ஒரு கணத்தில் நேரும் அசம்பாவிதத்தால் அவள் கணவனைக் கொன்றுவிடுகிறாள். அவள் மாத்திரமல்ல அவளது பராமரிப்பில் இருக்கும் அவளுடைய மகளும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டுவிடுகிறாள். இந்தக் கொலையைப் பார்த்துவிடுகிறான் இஷிகாமி. யாசுகோ ஹனவோகாவின் மீது கொண்ட அளவற்ற வாஞ்சையால் அவளையும் அவளது மகளையும் கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்க விரும்புகிறான். அதற்காகத் தனது கணித மூளையைப் பயன்படுத்துகிறான். இந்தக் கொலைக்குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரிக்கு உதவ வருகிறான் இஷிகாமியின் கல்லூரி நண்பனான, இயற்பியல் பேராசிரியர் மானபு யுகாவா.

அன்பு, நட்பு, காதல், பரிவு, துரோகம், கோபம், கழிவிரக்கம் ஆகிய மனித உணர்வுகள் சார்ந்த பயணத்தில் புத்தியும் அறிவும் குறுக்கிடுகின்றன. இதனால் அம்மனிதர்களுக்குள் ஏற்படும் உளவியல், வாழ்வியல் போராட்டங்கள் இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிகைப்படுத்தப்படாத உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளார் இஷிகாமியாக நடித்திருக்கும் ஷினிச்சி சட்சூமி. அதிர்ந்து பேசாத குரல் தொனிக்க அவர் பேசும் விதம் அவருக்குள் உறைந்து கிடக்கும் தீவிர உணர்ச்சியைக் கண்களில் கசியவிட்டபடியே இருக்கிறது. கிட்டத்தட்டத் தன்னை மோப்பம் பிடித்துவிட்ட மானபு யுகாவாவுடன் பேசும் தருணத்திலும் யாசுகோ ஹனவோகா தன்னைவிட்டுப் பிரிந்துவிடுவாள் என்று கலக்கம் கொள்ளும் நிலையிலும் அவர் நிதானத்தைக் கைவிடுவதே இல்லை. 38 வயது கணித ஆசிரியர் வேடத்தை நுட்பமாகக் கையாண்டுள்ளார் ஷினிச்சி சட்சூமி.

வழக்கமான பாதையில் அடிபிறழாமல் தினந்தோறும் நடைபெறும் அவரது வாழ்க்கைச் சம்பவத்தில் காணப்படும் அமைதி அடி நெஞ்சில் கலக்கத்தை உண்டு பண்ணிக்கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒரு துயரம் அவரது இதயத்தை எப்போதும் துளைத்துக் கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்திடும் விதமாக ஒலிக்கும் பின்னணியிசை சில இடங்களில் மௌனமாகிவிடுகிறது. அப்போதெல்லாம் துயரம் அதன் உச்சத்திற்குச் சென்றுவிடுகிறது.

நான்கு வார்த்தைகள் தேவைப்படும் இடங்களில் கதாபாத்திரங்கள் இரண்டு வார்த்தைகளே பேசுகின்றன. வசனங்களும் ஷாட்களும் மிகச் சிக்கனமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. இதனால் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு வசனமும் பார்வையாளரின் கவனத்தைக் கோருகின்றன. ஒரு த்ரில்லரை உணர்வுபூர்வ திரைப்படமாக்கியதில் ஒளிப்பதிவும் இசையும் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்களித்துள்ளன.

இஷிகாமியும் மானபு யுகாவாவும் பனி பொழியும் மலைமீது ஏறிச் செல்லும் காட்சி படத்தின் அழகியலையும் செறிவையும் உயரத்திற்குக் கொண்டுசெல்கிறது. தனது காதலியைக் காப்பாற்றும் பொருட்டு காதலன் இஷிகாமி எடுக்கும் முடிவு மானபுவை மட்டுமல்ல பார்வையாளரையும் பரிதவிக்க வைத்துவிடுகிறது. தனது வாழ்வைப் பொருள்மிக்கதாக மாற்றியவளுக்காகத் தனது வாழ்வை ஒரு பொருட்டாக நினைக்காமல் இஷிகாமி மேற்கொள்ளும் முடிவு துக்கம் மேலிடச் செய்கிறது. படம் முடிந்த பின்னர் மனத்தில் சூல் கொள்ளும் இறுக்கம் சில புதிர்கள் அவிழ்க்கப்படாமலே இருந்திரக் கூடாதா என்னும் ஏக்கத்தை உருவாக்குகிறது.

பின்குறிப்பு:தென் கொரிய இயக்குநர் பாங் யுன்ஜின் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘த பர்பெக்ட் நம்பர்’ என்னும் திரைப்படமும் இதே நாவலை அடிப்படையாகக் கொண்டதே. கேரளாவில் சமீபத்தில் பெரிய வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் இதைத் தழுவியே எடுக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x