Published : 08 Jun 2017 03:47 PM
Last Updated : 08 Jun 2017 03:47 PM

கோலிவுட் கிச்சடி: கணினியும் அரிவாளும்

கணினியும் அரிவாளும்

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்க மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதில் ஐடி ஊழியர் தோற்றத்தில் காட்சியளிக்கும் சிவகார்த்திகேயனின் ஒரு கையில் லேப் டாப் பையும் மற்றொரு கையில் ரத்தம் தோய்ந்த வீச்சரிவாளும் இருக்கின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில் ஆயுதபூஜை தினத்தில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைக்கிறது.

மட்டைக்குப் பதிலாக பைக்!

மூன்று தென்னிந்திய மொழிகளில் தயாராகிவரும் ‘டீம் 5’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, பேர்லேமேனி (கேரள வரவு) என இரண்டு கதாநாயகிகள். சுரேஷ் கோவிந்த் எழுதி இருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீசாந்த் கையில் கிரிக்கெட் மட்டைக்குப் பதிலாக பைக்கைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பைக் ஸ்டண்டை மையமாகக்கொண்ட கதை. சாகச விரும்பிகளான ஐந்து நண்பர்களைச் சுற்றி நடக்கும் கதை. ஸ்ரீசாந்த் டூப் இல்லாமல் பைக் ஸ்டண்டுகளில் அசத்தியிருக்கிறாராம்.

விருதுக்கான நடிப்பு

றிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் விதார்த்தின் பேச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. “ இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு எனக்கு மேலும் நான்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. படப்பிடிப்பில் இருக்கும்போதே கதை பற்றியும் படமாகிவரும்விதம் பற்றியும் தெரிந்துகொண்டே, எனக்கு இந்த வாய்ப்புகள் வந்து சேர்ந்திருப்பதை நான் உறுதிப்படுத்திக்கொண்டேன். இதில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இயக்குநராகப் பல தேசிய விருதுகள் பெற்ற அவருக்கு நடிப்புக்காக இந்தப் படம் தேசிய விருது பெற்றுத் தரும் என்பது என் நம்பிக்கை! இந்தப் படத்தைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கும் ஒரு படத்திலும் நான் நடிக்கிறேன்” என்றதும் விழா அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

விஜய் உடன் வடிவேலு

தாநாயகனாக நடித்து சூடுபட்ட வடிவேலு, கதாநாயகனுடன் இணைந்து நகைச்சுவைக் கூட்டணி என்ற தனது பாணியை விஷாலின் ‘கத்திச் சண்டை’ படத்தில் மீண்டும் தொடங்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் தற்போது வடிவேலுவுக்கு முன்னணிக் கதாநாயர்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. அவற்றில் ஒன்று அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 61-வது படம். கடைசியாகக் ‘காவலன்’ படத்தின் விஜய் உடன் நடித்திருந்தார் வடிவேலு.

மீண்டும் இயக்கம்

ரசியல் களத்தில் அதிகக் கவனம் செலுத்திவரும் ‘நாம் தமிழர் ’கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் திரை இயக்கத்துக்குத் திரும்பியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடிக்க சீமான் இயக்கவிருக்கும் படத்துக்கு ‘கோபம்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் தவிர விஜய் ஆண்டனி நடிக்கும் ஒரு படத்தையும் சீமான் அடுத்து இயக்குவார் என்ற தகவலும் கிடைக்கிறது.

சூரியின் காடு!

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் உதயநிதியுடன் சூரி அமைத்த நகைச்சுவைக் கூட்டணி சமீபத்தில் பேசப்பட்டது. சந்தானம் நாயகன் ஆகிவிட்டதால் அந்தக் குறையைத் தனது மண்வாசனை மிக்க நகைச்சுவையால் நிரப்பிவரும் சூரியின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது ‘சவரிக்காடு’. எம்.என். கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் இந்தப் படத்தில் ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். “காட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த நகைச்சுவை த்ரில்லர் படத்தில் சூரியின் ராஜாங்கம்தான் பிரதானம் என்கிறார் இயக்குநர்.

200 கதாபாத்திரங்கள்

விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனைந்துவரும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. இதை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்து இயக்கும் படத்துக்கு ‘கடவுள் ஏன் கல்லானான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக நம்மிடம் தெரிவித்தார். “200 கதாபாத்திரங்கள் இடம்பெற இருக்கும் இந்தக் கதையையும் கிராமத்துப் பின்னணியில் உருவாக்கவிருக்கிறேன்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x