Published : 23 May 2014 09:40 AM
Last Updated : 23 May 2014 09:40 AM

கோச்சடையான் திறக்கும் கதவுகள்

இந்திய ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக கோச்சடையான் மீது குவிந்திருக்கும் நேரம் இது. ‘பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங்’ தொழில்நுட்பத்தின் மூலம் முழுமையாகத் தயாராகியிருக்கும் முதல் இந்தியத் திரைப்படம். இந்தியர்களின் கைவண்ணம் எப்படியிருக்கும், அதையும்தான் பார்த்துவிடலாமே என்ற எதிர்பார்ப்பை உலகம் முழுவதுமே உருவாக்கியிருக்கிறது. இந்த நேரத்தில் கோச்சடையான் படத்தின் தொழில் நுட்பத்தில் பணியாற்றிய லண்டனைச் சேர்ந்த சென்ட்ராய்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பில், சென்னை வந்திருந்தார்.

சென்னையைச் சேர்ந்த பிக்சல் கிராஃப்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து நேரடியாகத் தமிழ் அனிமேஷன் படங்களை உருவாக்கும் புதிய முயற்சியைத் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார்.

கோச்சடையான் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றியும், கோச்சடையான் இந்திய டிஜிட்டல் சினிமாவுக்கு எவ்வகையில் முன்னோடியாக இருக்கும் என்பது பற்றியும் அவருடன் பிரத்யேகமாக உரையாடினோம். பில் உடன் பிக்‌சல் கிராஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் எஸ்.குமாரும் உடன் இருந்து சில கேள்விகளுக்குப் பதில் அளித்தார்...

முதலில் பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் என்றால் என்ன என்பதைப் பற்றி எளிமையாகக் கூற முடியுமா?

பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் பற்றி சொல்லும் முன்பு உங்களுக்கு இன்றைய டிஜிட்டல் சினிமாவின் அடிப்படையாக இருக்கும் வெர்ச்சுவல் உலகம் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

‘வெர்ச்சுவல் உலகம்’ என்பது நவீன காலத் திரைப்படங்களின் முக்கிய அங்கமாகவும், தொழில் நுட்பமாகவும் ஆகியிருக்கிறது. வெர்ச்சுவல் உலகம் என்றதும் இது ஏதோ நமக்குத் தெரியாத உலகமாக இருக்கிறதே என்று நீங்கள் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நம்மைவிட நமது குழந்தைகளுக்கு வெர்ச்சுவல் உலகம் என்பது நன்றாகவே பழகியிருக்கிறது. 3டி முறையில் அனிமேஷன் செய்யப்பட்ட, கற்பனையை மிஞ்சும் கதைக் களங்களில் அவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கேம்களில் பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ரோமில் இருக்கும் ’ கலோசியமும்’, சீனாவில் இருக்கும் பெருஞ்சுவரும், இந்தியாவில் இருக்கும் தாஜ்மஹாலும் மாபெரும் கட்டிட அமைப்புகளாகத் தெரியாது. அவர்கள் பார்க்கும் அனிமேஷன் படங்களிலும், அனிமேஷன் விளையாட்டுகளிலும் உருவாக்கப்படும் வெர்ச்சுவல் உலகங்கள் பிரம்மாண்டமானவை. இவை அனைத்துமே பல நூறு மில்லியன் டாலர்களைக் கொட்டி, கலை இயக்கம் மூலம் உருவாக்க ப்பட்ட செட்ஸ் மற்றும் பிராப்பர்ட்டிகள் அல்ல. எல்லாமே வெர்ச்சுவல் உலகில் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டங்கள். நீங்கள் வரலாற்றில் இழந்த எந்தவொரு பிரம்மாண்ட உலகத்தையும் இதில் கொண்டுவரலாம்.

கோச்சடையான் படத்தின் வெர்ச்சுவல் உலகம் உங்களை மிரள வைக்கும். பிரமாண்டமான அரண்மனைகள், ஆடைகள், போர் கருவிகள், யானைகள், குதிரைகள், தேர்கள் என்று எல்லாம் வெர்ச்சுவல் உலகில் தயாரானவைதான்.

என்னதான் பிரம்மாண்டமான வெர்ச்சுவல் உலகைப் படைத்தாலும் அதில் உயிருள்ள கதாபாத்திரங்கள் தேவையல்லவா? அதற்குத்தான் மனிதர்களை நடிக்க வைத்து, நாம் உருவாக்கும் வெர்ச்சுவல் கதாபாத்திரங்களுக்கான உடல்மொழியை அப்படியே காப்பி செய்துகொள்கிறோம். இப்படி பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் செய்யப் பட்ட பத்துவிதமான கோப்புகளை வெர்ச்சுவல் கதாபாத்திரத்துக்குள் மெல்ல மெல்ல உள்ளீடு செய்து, அந்தக் கதாபாத்திரத்தை லைவ் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரத்தமும் சதையும் கொண்ட மனித நடிகரின் கதாபாத்திரம் போன்ற பார்பெக்‌ஷனை கொண்டு வருகிறோம்.

மோஷன் கேப்சரிங் தொழில்நுட் பத்தில் நடிக்கப் பயிற்சி தேவையா?

கண்டிப்பாக வேண்டும். தொழில்முறை நடிகர்கள் முதல்முறையாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் நடிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கான முதல் சவால், முகத்தில் காட்ட வேண்டிய உணர்ச்சி மற்றும் கண்ணசைவு, கை, கால்களில் காட்ட வேண்டிய அசைவுகள் ஆகியவற்றைக் கவனத்துடன் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருக்கும். இதற்காக முகத்தில் 16 இடங்களிலும், ஒட்டுமொத்தமாக உடல் முழுவதும் 54 இடங்களிலும் அசைவுகளைத் துல்லியமாகப் பதிவுசெய்ய சென்சார் புள்ளிகளை ஒயர்கள் மூலம் இணைந்துவிடுவோம். எனவே உடலின் எந்த அசைவும் மோசன் கேப்சரிங் செய்யும்போது தப்பிக்காது. தொழில்முறை நடிகர்கள் தவிர, மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் நடிப்பதற்காகவே பயிற்சிபெற்ற நடிகர்கள் தற்போது லண்டன் மற்றும் ஹாலிவுட்டில் பெருகிவருகிறார்கள். நாங்கள் வரைந்து உருவாக்கும் ’ போட்டோ ரியலிஸ்டிக் வெர்ச்சுவல் நடிகர்களுடன் இவர்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

கோச்சடையான் போன்று தொழில்நுட்பம் இணையும் படத்திற்குத் திரைக்கதை எழுதுவதில் தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கல்கள் உள்ளதா?

அதைச் சிக்கல் என்று சொல்வதைவிடத் தொழில்நுட்பம் எனும் சிறகுகளை அணிந்து கொண்டு கற்பனை உலகில் பறந்து வருவது என்று நவீன அழகியலாகப் பார்க்கலாம். வெர்ச்சுவல் உலகில் படைக்கப்படும் ஒரு 3டி அனிமேஷன் படத்தில் கதாசிரியருக்குக் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே கிடையாது. இதனால் கதாசிரியன் தனது கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் பூட்ட வேண்டிய அவசியமில்லை. வெர்ச்சுவல் உலகின் தேவைகளுக்காகத் திரைக்கதாசிரியர் வெர்ச்சுவல் உலகைப் படைக்கவிருக்கும் தொழில்நுட்பக் குழுவுடன் பயணிக்க வேண்டியது மிக மிக முக்கியமானது.

கோச்சடையான் படத்தின் மூலம் இந்தியாவில் மோசன் கேப்சரிங் அனிமேஷன் படங்கள் பெருக வாய்ப்பிருக்கிறதா?

கோச்சடையான் இந்திய ரசனையில் மட்டுமல்ல, பட உருவாக்கத்திலும் பல புதிய கதவுகளைத் திறந்துவிடுவது உறுதி. முக்கியமாக ஆசியாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நம்பி, தனது ஆடியன்ஸை திருப்திப்படுத்த நினைத்தது, இந்த நவீனத் தொழில்நுட்பத்துக்குக் கிடைத்த வெற்றி. ஹாலிவுட்டுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் படம் வெளியாகும்போதே கோச்சடையான் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் வெளியாவதும் இந்திய கேமிங் சந்தையில் மிகப் பெரிய மைல்கல்.

அடுத்து கமல்ஹாசன் தனது கனவுப்படமான ‘மருதநாயகத்தை’ 3 டி அனிமேஷன் மூலம் இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்க முடியும். இந்தியாவில் வெர்ச்சுவல் ஃபிலிம் மேக்கிங் மூலம் உருவாக்க வேண்டிய பிரம்மாண்டமான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. இவைகளை உருவாக்கப் பல நூறு மில்லியன் டாலர்கள் தேவையில்லை. நீங்கள் கற்பனை செய்த ஒரு கதைக்களத்தை உருவாக்கப் பத்து முதல் இருபது கோடி ரூபாய் இந்தியப் பணம் இருந்தால் போதும். மொத்தப் படத்தையுமே உலகத்தரத்தில் உருவாக்கிவிடலாம்.

தமிழக நிறுவனத்துடன் இணைந்து என்ன செய்யப்போகிறீர்கள்?

சென்ட்ராய்ட் இந்தியா என்ற இந்த நிறுவனம் தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு உலகத் தரமான நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதுடன், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்கும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். 1996-ல் லண்டன் பைன்வுட் ஸ்டுடியோஸில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், ஹாரி பாட்டர், 2012 உட்படப் பல ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளது. தற்போது கோச்சடையான் திரைப்படத்திற்குப் பணிபுரிந்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் எங்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பிக்சல் கிராஃப்டுடன் இணைந்து தமிழ் சினிமாவிற்கு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அளிக்கும் அதேநேரம், நேரடியாகவும் அனிமேஷன் படங்களை இங்கேயே தயாரிக்க இருக்கிறோம்.

இதற்கு முதல் படியாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சில தமிழ் புத்தகங்களின் எழுத்தாளர்களிடம் அதன் அனிமேஷன் படமாக்கல் உரிமைக்காகப் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் இன்னும் மகிழ்ச்சிகரமான செய்திகளை உங்களுக்கு எங்களால் தர முடியும். இப்போதைக்கு கோச்சடையான் பிரம்மாண்டத்தை ரசியுங்கள். அது இந்தியர்களாகிய உங்களது பெருமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x