Last Updated : 18 Sep, 2015 10:54 AM

 

Published : 18 Sep 2015 10:54 AM
Last Updated : 18 Sep 2015 10:54 AM

காற்றில் கலந்த இசை-22 கடற்கரையில் வீசும் இசைத் தென்றல்

பொதுவாக ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால், தனது காதலின் நினைவுகளைக் கைவிட்டுக் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதுபோல் சித்தரித்த திரைப்படங்களுக்கு மத்தியில், கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, தனது காதலனின் நினைவாகவே வாழ்ந்து மடியும் பெண்ணைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஆனந்த ராகம்’(1982). பரணி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சிவகுமார், ராதா, சிவச்சந்திரன் நடித்திருந்தார்கள். ஆதரவற்ற மீனவ இளைஞராக வரும் சிவகுமாருக்கும், அவரது நண்பர் சிவச்சந்திரனின் தங்கை ராதாவுக்கும் இடையில் மலரும் காதலைப் பற்றிய கதை. தென்னங்கீற்றின் தென்றல் தவழும் மீனவ கிராமத்தில் நிகழும் இந்த எளிய கதைக்குத் தனது உயிர்ப்பான இசை மூலம் காவிய அந்தஸ்தைத் தந்தார் இளையராஜா.

படத்தின் தொடக்கத்தில் வரும் ‘கடலோரம் கடலோரம்’ பாடலை ஜேசுதாஸும், இளையராஜாவும் பாடியிருப்பார்கள். எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் கடல் அன்னையின் புகழ் பாடும் இந்தப் பாடலை உற்சாகமாகப் பாடியிருப்பார்கள் இருவரும். மாலை நேரச் சூரிய ஒளியின் பின்னணியில் பொன்னிறத்தில் மின்னும் கடலுக்கு முன் படமாக்கப்பட்ட அந்தப் பாடலில், பொங்கும் அலையின் கட்டற்ற வீச்சை இசையாக்கியிருப்பார் இளையராஜா. சின்னச் சின்ன இசைத் துணுக்குகளில் கடல் கண் முன் விரியும்.

இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மேகம் கறுக்குது… மழை வரப் பாக்குது’ பாடல், கடலோர கிராமத்தின் நாட்டுப்பாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எளிய பாடல். சில்லென்று காற்று வீசும் கடற்கரையில் ஒரு மீனவர் பாடிச் செல்லும் பாடலைத் தொடர்ந்து சிவகுமார் பாடுவார். பாடலை இளையராஜா தொடங்கிவைக்க, கைமாற்றிக்கொள்ளப்படும் மலர் போல அதைச் சுகமாகச் சுமந்தபடி பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

பாடல் வரிகளே சூழலின் தன்மையை உணர்த்திவிடும் என்று சமாதானமாகிவிடுவதில்லை இளையராஜா. சூழலுக்கு மிகப் பொருத்தமான இசைக்கோவைகளுடன் பாடலை மிளிரச் செய்துவிடும் அந்தக் கலைஞர், இப்பாடலில் சந்தூர், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை அடக்கமாக ஒலிக்க விட்டிருப்பார். பள்ளி மாணவியான ராதா, அந்த நாட்டுப்பாடலை சிவகுமாரிடமிருந்து கற்றுக்கொண்டு பள்ளி விழாவில் பாடிக்காட்டுவது போல் அமைக்கப்பட்ட காட்சி அது. பாந்தமும் அன்பும் நிறைந்த இளைஞரின் மனதை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஜேசுதாஸ். காதல் அரும்பிய மலர்ச்சியில் குதூகலிக்கும் இளம் பெண்ணின் பாவங்களைக் குரலில் காட்டியிருப்பார் ஜானகி.

1967-ல் வெளியான ‘மிலன்’ இந்தி திரைப்படத்தில் முகேஷ் லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா… பவன் கரே சோரு’ பாடலின் தாக்கம் இப்பாடலில் உண்டு என்று சொல்பவர்கள் உண்டு. படகோட்டி ஒருவன் தனது காதலிக்கு நாட்டுப்புறப் பாடலைக் கற்றுத்தருவதைத் தவிர இரு பாடல்களுக்கும் இடையில் வேறு பொருத்தங்கள் இல்லை. காதல் மையம் கொள்ளும் பாடல் என்றாலும், மெல்லிய சோகத்தை மீன்பிடி வலையைப் போல் நெய்திருப்பார் இளையராஜா. காதல் தோல்வியில் சிவகுமார் பாடும் ‘கனவுகளே கலைந்து செல்லுங்கள்’ பாடலை, தனிமையின் துயரம் தரும் வலியுடன் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

இப்படத்தின் பிரதானப் பாடல் ‘ஒரு ராகம் பாடலோடு’. ஜேசுதாஸ், ஜானகி பாடிய இப்பாடல் மெல்லிய தென்றலின் வருடலும், கடலலையின் ஸ்பரிசமும் நிறைந்த தேவகானம். அர்ப்பணிப்பான காதல் உணர்வும், ஆழமாக வேர்பிடித்துவிட்ட உறவின் மேன்மையும் நிரம்பிய பாடல் இது. பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். அந்தக் குரல்களின் கருவி மொழியைப் போல் புல்லாங்குழலும் சேர்ந்து ஒலிக்கும்.

காதலின் மயக்கத்தில் சூழலை மறந்து வேறு உலகத்துக்குள் நுழையும் ஜோடியின் மனப்பிரதிகளாகப் பாடியிருப்பார்கள் ஜேசுதாஸும் ஜானகியும். காதலுக்கு வாழ்த்துச் சொல்லும் தேவதைகளின் குரல் போல், பெண் குரல்களின் ஹம்மிங் ஓரடுக்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பல்லவியைத் தொடர்ந்து ஒலிக்கும் முதல் நிரவல் இசை, தரையிலிருந்து மேலேறிப் பறக்கும் பறவையைப் போல் படரும். சிதார், வயலின்(கள்), புல்லாங்குழல் என்று காதலுக்காகவே படைக்கப்பட்ட இசைக் கருவிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

இரண்டாவது நிரவல் இசையைத் தொடங்கும் சிதார், காதலின் மவுனத்தைக் கலைப்பதுபோல் பரிவுடன் ஒலிக்கும். கைகூடாத காதல் என்பதை உணர்த்தும் விதமாக, பாடல் முழுவதும் மெல்லிய சோகத்தை இழையவிட்டிருப்பார் இளையராஜா. ‘ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்துவந்த சொந்தம்’ எனும் வரியில் ஏழைக் காதலனின் உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பார் கங்கை அமரன். அந்த வரியைப் பாடும்போது ஜேசுதாஸின் குரலில் காதலையும் மீறிய கழிவிரக்கத்தை உணர முடியும்.

காற்றின் அலைகளில் அசைந்தாடும் சிறகு, மேலும் கீழுமாக ஏறி இறங்குவதைப் போல், பாடலும் அலைபாய்வதை உணர முடியும். கடைசி முறையாகப் பல்லவியைத் தொடங்கும் ஜானகி, ‘ஒரு’, ‘ராகம்’, ‘பாடலோடு’ என்று வார்த்தைகளுக்கு இடையில் சற்று இடைவெளி விடுவார். காதலன் மீதான அன்பின் வெளிப்பாட்டில் திணறும் குரல் அது.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x