Last Updated : 12 Jun, 2015 01:02 PM

 

Published : 12 Jun 2015 01:02 PM
Last Updated : 12 Jun 2015 01:02 PM

காற்றில் கலந்த இசை 8- இசைக் குறிப்புகளால் எழுதப்பட்ட நாட்குறிப்பு

பணி நிமித்தமாகத் தொலைதூரப் பிரதேசங்களுக்கு இடம்பெயரும் மனிதர்கள், சொந்த ஊர் நினைவுகளை ஜியாமெட்ரி பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட பொன்வண்டைப் போல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இளம் பிராயத்து நினைவெனும் வானத்தில் அந்த வண்டு பறந்து செல்லும்போது, அதைப் பிணைத்திருக்கும் நூலைப் பற்றிக்கொண்டு கூடவே பறந்து செல்வதும், வலிநிறைந்த நினைவுகளுடன் அதைப் பார்த்துக்கொண்டே நிற்பதும் அவரவரின் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. பழுப்பேறிய பசுமை நிறத்தில் உறைந்திருக்கும் அவ்வாறான நினைவுகளை மீட்டுத் தரும் பாடல் ‘அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா’. பாடல் இடம்பெற்ற திரைப்படம் 1981-ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்டு’.

சிவசங்கரி எழுதிய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ‘உதிரிப் பூக்கள்’ அஸ்வினி, சுரேஷ் (அறிமுக நடிகர்) ஆகியோருடன் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு என்று சிறந்த நடிகர்கள் நடித்திருந்தனர்.

வட நாட்டு இளைஞனான நாயகன், பெரும் பணக்காரரான தன் தந்தையின் பிற்போக்குத்தனத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியவன். தமிழகத்தில் வெள்ளந்தி மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பில் ஒரு அறையில் தங்கியிருப்பான். அந்த மனிதர்களுக்கும் அவனுக்கும் இடையில் மலரும் உறவு, காதல் என்று நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை.

அள்ளித் தந்த ராஜா

பிறந்து வளர்ந்த ஊரின் வீடுகள், தெருக்கள், குளங்களை வெவ்வேறு வடிவங்களில் கனவுகளில் காண்பவர்கள் எங்கும் நிறைந்திருக்கி றார்கள். அந்தக் கனவுகளைப் பதிவு செய்த பாடல் ‘அள்ளித் தந்த பூமி’. பூர்வீக வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மனதுக்குப் பழக்கமான தெருக்களை, வீடுகளைப் பார்த்தபடி பழைய நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் அனுபவத்தை இந்தப் பாடல் தரும். நினைவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் இசையிழைகளை நெய்திருப்பார் இளையராஜா.

அலைபாயும் பல்வேறு எண்ணங்கள் ஓரிடத்தில் கலந்து பிரிவதைப் பாடலின் நிரவல் இசைக்கோவைகள் உணர்த்திவிடும். நிரவல் இசையில் முதல் சரணத்துக்கு முன்னதாக இளம் வயதின் பசுமையான நினைவுகளை அசைபோட்டபடி எலெக்ட்ரிக் கிட்டார் ஒலிக்க, அந்நினைவை வருடிச் செல்வதுபோல், ஒரு வயலின் கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.

‘இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்’போன்ற ஆத்மார்த்தமான வரிகளை எழுதியவர் மதுக்கூர் கண்ணன். கடந்து சென்ற வாழ்வின் மகிழ்ச்சியான கணங்களையும், துயர நினைவுகளையும் தனது குளிர்ந்த, தணிந்த குரலில் பதிவுசெய்திருப்பார் மலேசியா வாசுதேவன். காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் கோட்டைகள் நிறைந்த நகரின் பின்னணியில் அசோக்குமாரின் ஒளிப்பதிவு, படம் வெளியான சமகாலத்திலேயே அப்பாடலுக்குக் காவியத் தன்மையைத் தந்துவிட்டது.

ஈரம் படிந்த இசை

தன் குழந்தையின் அழகை வர்ணித்துத் தாய் பாடும் ‘மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே’ பாடல், இளையராஜா தந்த தாலாட்டுகளில் ஒன்று. வீணை மற்றும் கிட்டாரின் மெல்லிய உரையாடலுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுவதும், வாழ்க்கையின் சுகந்தங்களையும் சிடுக்குகளையும் சித்தரிக்கும் இசையைத் தந்திருப்பார். நாயகனுக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஒலிக்கும் பாடல் இது.

சற்று முன்னர் பெய்த மழையின் ஈரம் படிந்த தெருக்களின் வழியே நடந்து செல்லும் நாயகன் ஒருபுறம், குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் அவனது குடும்பம் மறுபுறம் என்று இருவேறு மனநிலைகளை இசையாக்கியிருப்பார் இளையராஜா. உமா ரமணனின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது.

முதல் நாள் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, மறுநாள் காலையில் எந்த வித அலுப்பும் இல்லாமல் புத்துணர்வுடன் இந்தப் பாடலை ‘கம்போஸ்’ செய்திருந்தார் இளையராஜா என்று, ஒலிப்பதிவுக் கூடத்துக்கு உமா ரமணனுடன் சென்றிருந்த அவருடைய கணவர் ஏ.வி. ரமணன் குறிப்பிட்டிருக்கிறார். பாடலில் தோன்றும் குழந்தையை ‘நடிக்க’ விடாமல் அதன் போக்கில் இருக்கவைத்து, யதார்த்தமாகப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.

நாயகன் வட நாட்டுக்காரன் என்பதால், முழுக்க முழுக்க இந்தியிலேயே எழுதப்பட்ட பாடலும் படத்தில் உண்டு. ‘கேஸே கஹூ(ம்)… குச் கே(ஹ்) ந சகூ(ம்)’ (‘எப்படிச் சொல்வேன், எதையும் சொல்ல முடியவில்லையே’) என்று தொடங்கும் இந்தப் பாடலை எஸ். ஜானகியுடன் கஜல் பாடகர் புபேந்தர் சிங் பாடியிருப்பார்.

நெகிழ்வூட்டும் இசைக் கூறுகள் நிறைந்த பாடல் இது. பி.பி.ஸ்ரீநிவாசும் தீபன் சக்கரவர்த்தியும் சரி விகிதத்தில் கலந்த குரல் புபேந்தருடையது. பல மொழிகள் அறிந்த பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் எழுதிய பாடல் இது. ‘பாடுதம்மா காற்றின் அலைகள்’ எனும் டைட்டில் பாடலைத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பாடியிருப்பார் புபேந்தர் சிங்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x