Last Updated : 28 Aug, 2015 12:46 PM

 

Published : 28 Aug 2015 12:46 PM
Last Updated : 28 Aug 2015 12:46 PM

காற்றில் கலந்த இசை 19: ஓடையில் உறைந்திருக்கும் கண்ணீர்

தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால் முதல் ஐந்து இடங்களுக்குள் வரக்கூடிய படம் ‘அவள் அப்படித்தான்’ (1978). ருத்ரய்யா இயக்கியிருந்த இப்படத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ப்ரியா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வாழ்க்கை முழுவதும் வஞ்சகத்தையும் ஏமாற்றத்தையும் மட்டுமே சந்தித்த நாயகி, ஆண்களை முற்றிலுமாக வெறுப்பவள். பரிதாப உணர்ச்சி காதல் அல்ல என்று தன்மானத்துடன் வாழும் பெண்ணின் வாழ்க்கையை மிகையில்லாமல் பதிவுசெய்த படம் இது.

கதை சொன்ன விதத்தில் இருந்த முதிர்ச்சி அன்றைய ரசிகர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது எனலாம். பின்னர், விமர்சனங்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளப்பட்டு மெல்ல மெல்ல வெற்றியடைந்தது இப்படம். நாடகப் பாங்கிலான எந்த முத்திரையும் இல்லாமல் இயல்பான மனிதர்களைத் திரையில் பார்க்கும் அனுபவத்தை இப்படம் வழங்கியது. மனித உறவுகளின் சிடுக்குகளை, நுட்பமான வலைப் பின்னல்களை, வெடிக்கக் காத்திருக்கும் மனதின் ஊசலாட்டங்களைத் தனது இசை மொழியில் அற்புதமாகப் பதிவுசெய்திருந்தார் இளையராஜா. குறைந்த இசைக் கருவிகளைப் பயன்படுத்தி உணர்ச்சிபூர்வமான இசை வடிவங்களை உருவாக்கியிருந்தார்.

விம்மிக் கொண்டிருக்கும் மனதை வருடிக் கொடுக்கும் மயிலிறகைப் போன்ற பாடல்களைக் கேட்கும்போது மனதின் பாரம் லேசாகி மிதக்கத் தொடங்கும். முள் குத்திய பாதத்தை வருடியபடி அதன் மெல்லிய வலியை ரசிப்பதைப் போல், வலி நிறைந்த நினைவுகளை ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்ட பாடல்களைக் கேட்டபடி அசைவற்று அமர்ந்திருப்பதும் தனி அனுபவம்தான். அப்படியான அனுபவத்தைத் தரும் பாடல் கங்கை அமரன் எழுதிய ‘உறவுகள் தொடர்கதை’.

மனதைப் போர்த்தியிருக்கும் துயரப் படலத்தை மெல்ல விலக்கியபடி காற்றில் பரவுவதுபோன்ற பியானோ இசைத் துளிகளுடன் பாடல் தொடங்கும். நாயகியின் துயர அனுபவங்களைத் தனதாக்கிக்கொண்டு, இசை வழியே ஆறுதலை வழங்கும் குரலுடன் பாடியிருப்பார் ஜேசுதாஸ். ‘இனியெல்லாம் சுகமே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பனிப்புகையின் சுருள் திரள் ஒன்று நம்மை உரசியபடி நகர்ந்து செல்வது போன்ற மென்மையுடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. நகரும் கண்ணாடி இழைத் திரையைப் போன்ற தூய்மையுடன் கூழாங்கற்களின் மீது வழிந்தோடும் ஓடையை உருவகப்படுத்தும் இசைக் கலவை, புல்லாங்குழல் இசையைத் தொடரும்.

‘வேதனை தீரலாம்… வெறும் பனி விலகலாம்’ எனும் வரி ஒலிக்கும்போது அந்த வார்த்தைகளின் நம்பகத்தன்மையை ஆமோதிப்பதைப் போல், கிட்டார் இசை மெலிதாக ஒலிக்கும். இரண்டாவது சரணத்தில், ‘நதியிலே புதுப்புனல்… கடலிலே கலந்தது’ எனும் வரி ஒலிக்கும்போது இதே கிட்டார் இசை, பாறையில் பட்டுத் தெறிக்கும் ஸ்படிக நீரின் துளியைப் போல் சிதறும்.

அமைதி, பாந்தம், அரவணைப்பு என்று அன்பின் வெவ்வேறு வடிவங்கள் இப்பாடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கும். எனினும் படத்தில் இப்பாடலைப் பாடும் சிவச்சந்திரன், பின்னர் ப்ரியாவின் ஆன்மாவைத் தனது வார்த்தைகளால் சிதைத்துவிடுவார். பிற்பாடு அவர் மாறிவிடுவார் என்பதற்கான எந்தத் தடயமும் இப்பாடலில் இருக்காது. ஆறுதல் தேடி அலையும் மனது, மனிதர்களின் விசித்திரப் போக்கைக் கணிக்கத் தவறுவதிலும், மீண்டும் மீண்டும் காயப்பட்டுக்கொள்வதிலும் ஆச்சரியமில்லை. அந்த வகையில் இப்பாடலில் இழைந்தோடும் தூய அன்பே மிகப் பெரிய வலியாக அமைந்துவிடும்.

‘உறவுகள் தொடர்கதை’, ‘மனதில் என்ன நினைவுகளோ’, ‘வான் நிலா நிலா அல்ல’, ‘என்னுள்ளில் எங்கோ’ போன்ற அற்புதமான பாடல்களில் தோன்றும் அதிர்ஷ்டம் வாய்த்ததற்கு சிவச்சந்திரன் செய்த புண்ணியம் என்னவென்று தெரியவில்லை.

இந்திய நடிகர்களில் கமல் ஹாசன் அளவுக்குக் குரல் வளமும் இசை நுணுக்கமும் கொண்டவர்கள் மிகக் குறைவு. முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும் பிரத்யேகக் குரல் அவருடையது. இப்படத்தில் அவர் பாடியிருக்கும் ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடலை கஜல் பாணியில் இசையமைத்திருப்பார் இளையராஜா. கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட பெண்ணின் மனப் போராட்டத்தையும், பெண்ணின் ஒழுக்க விதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஆண் மையச் சமூகத்திடம் இருப்பதையும் கவலையுடன் அலசும் நாயகனின் மனப்பதிவு இப்பாடல்.

நிரவல் இசைக்கோவையில் துயரம் தோய்ந்த மனதின் விசும்பலை வெளிப்படுத்தும் வீணையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. சரணங்களின் வரிகளுக்கு இடையில் கசியும் ஒற்றை வயலின், உறைந்த கண்ணீரை வழியச் செய்துவிடும். பெண்ணின் வலியைப் புரிந்துகொண்ட ஆண் மனசாட்சியின் ஓலத்தை மென்மையான பாடலாகக் கேட்கும் அனுபவத்தைக் கமலின் குரல் பதிவுசெய்திருக்கும்.

இப்படத்தில் எஸ். ஜானகி பாடிய ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பாடலைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். நினைத்துப் பார்க்க முடியாத கடந்த காலமும், நிச்சயமற்ற எதிர்காலமும் இரு பக்கமும் அழுத்த. நிகழ்காலத்தில் தடுமாறி நிற்கும் பெண்ணின் மனப் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில், குழப்பமான மனநிலையும் இயலாமையும் கலந்த உணர்வை இசைக் கருவிகளின் மூலம் உருவாக்கியிருப்பார் இளையராஜா. உணர்வுபூர்வமான இசைக் கலைஞனுக்கே உரிய படைப்புத் திறனின் ஒரு துளி அது.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x