Last Updated : 10 Jul, 2015 12:29 PM

 

Published : 10 Jul 2015 12:29 PM
Last Updated : 10 Jul 2015 12:29 PM

காற்றில் கலந்த இசை 12: ஐரோப்பிய நிலத்தின் தெய்வீக ராகங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள், கதாபாத்திரங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கொண்டாட்டமாகச் சித்தரித்தவை. வெளிநாட்டு மண்ணில் விமானம் தரையிறங்குவது தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் அந்நிய மண்ணை வியந்து ரசிக்கும் இந்திய மனது வெளிப்படும்.

அந்த வரிசையில் இடம்பெறும் படம் ‘உல்லாசப் பறவைகள்’(1980). கமல்ஹாஸன், ரதி, தீபா பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படத்தை சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் படமாக்கப்பட்ட இப்படத்தில் மேற்கத்திய இசையில் தனக்கு இருக்கும் மேதமையை முழு வீச்சில் வெளிப்படுத்தினார் இளையராஜா. நுட்பங்கள் நிறைந்த விரிவான இசைக்கோவை கொண்ட பாடல்களும் பின்னணி இசையும் நிறைந்த படம் இது.

மாமா மியா

‘அம்மாடி’ எனும் வியப்புச் சொல்லின் இத்தாலி மொழி வடிவமான ‘மாமா மியா’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தி இளையராஜா உருவாக்கிய பாடல், ‘அழகு ஆயிரம் உலகம் முழுவதும்’. முகப்பு இசையிலேயே ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. மெலிதாக ஒலிக்கத் தொடங்கும் பியானோவுடன், வெவ்வேறு இசைக் கருவிகள் ஒவ்வொன்றாக இணைந்துகொண்டே வரும்.

பல்லவி தொடங்குவதற்குச் சற்று முன்னர் வரும் அந்த பிரம்மாண்டமான வயலின் இசைக் கோவை நம்மைக் காற்றில் தூக்கிச் செல்லும். ஆண் தன்மை கொண்ட குரலுடன் ‘பபபப்பா..’ என்று ஜானகி ஹம்மிங் செய்யும் பாடல்களில் இதுவும் ஒன்று. மெல்லிய குளிர் காற்று வீசும் ஐரோப்பிய நகரங்களின் பின்னணியில் துள்ளலாக ஒலிக்கும் பாடல் இது.

பரிவின் இசை

மனநோயால் பாதிக்கப்பட்டி ருக்கும் கமலுக்கு ஆறுதல் தரும் மனதுடன் ரதி பாடும் ‘நான் உந்தன் தாயாக வேண்டும்’ பாடல், ஒரு வித்தியாசமான தாலாட்டு. வேகமான தாளக்கட்டின் மேல் விரிந்து செல்லும் இசைக்கோவைகளுக்கு நடுவில் தாயின் பரிவுடன் காதலி பாடும் பாடல் இது. நுட்பமான பாவங்களுக்குப் புகழ்பெற்ற ஜானகி இப்பாடலுக்கு மேலும் மேன்மை சேர்த்திருப்பார். விரிந்திருக்கும் கடலின் மீது ஒவ்வொன்றாக விழும் தூறல் போல், மிக மென்மையான இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் அன்பின் சாரல் நிறைந்த இசையைத் தந்திருப்பார் இளையராஜா.

சுகந்தத்தின் மணம்

மற்ற பாடல்களாவது ஐரோப்பாவின் எந்த நகரத்தின் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகளின் பின்னணியில் பொருந்திவிடும். ஆனால், ‘அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே’ பாடல் ஐரோப்பிய நகரம் ஒன்றில் (ஆம்ஸ்டர்டாம் இணையக் குறிப்பு ஒன்று) நடக்கும் மலர்க் காட்சியின் பின்னணியில் பிரத்யேகமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மலர்க்காட்சிக்குப் பொருத்தமானதாக இப்பாடலை இளையராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.

மலர்க் காட்சியின் ஊர்வலத்தில் இசைக்கப்படும் தாள வாத்தியங்களுடன் தொடங்கும் பாடலில் மலர்களின் சுகந்தமும் குளுமையும் நிரம்பித் ததும்பும். முதலாவது நிரவல் இசையில் புல்லாங்குழல் ஊர்வலத்தின் பின்னே தொடரும் ‘லலலல்லால லாலா’ எனும் சங்கமக் குரல்கள் நிஜ வாழ்வில் தேவதைகளின் இருப்பை நம்பச் செய்யும்.

தேவதைகளின் பாடல்

படத்தின் ஒரேயொரு ‘உள்ளூர்ப் பாட’லான ‘தெய்வீக ராகம் தெவிட்டாத’ பாடலைக் குரலுலகின் தேவதை ஜென்ஸி பாடியிருப்பார். ‘ஓஓஓ..ஏஏஏ’ என்று தொடங்கும் ஜென்ஸியின் ஹம்மிங்குக்குப் பின்னர் ஒலிக்கும் இசை நம் உணர்வுகளை மீட்டிச் சிலிர்க்க வைக்கும். காதலை ரகசியமாக உணர்த்தும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து ‘செந்தாழம் பூவைக் கொண்டு’ என்று சரணத்தைத் தொடரும் ஜென்ஸியின் குரல், தனிமையின் வலியை மென்மையாகப் பதிவுசெய்யும்.

இயற்கையின் நுட்பமான கூறுகளை உள்வாங்கி அதை இசை வடிவமாகத் தரும் இளையராஜாவின் மேதமைக்குச் சான்று இப்பாடல். பாடல்களில் பால் வித்தியாசம் உண்டா தெரியாது. ஆனால், இது ஒரு பெண்பால் பாடல் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ரதிக்கு இப்பாடலைக் கமல் பாடிக்காட்டும் காட்சியில் அத்தனை உணர்வுடன் இப்பாடலை ஒரு ஆண் பாடவே முடியாது என்று தோன்றும்.

செந்தேன் மலர்

பெண் குரல்களின் தனிப்பாடல்கள் நிறைந்த இப்படத்தின் ஒரேயொரு டூயட் பாடல் ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’. தமிழ்த் திரையிசையின் இணையற்ற ஜோடியான எஸ்.பி.பி.- ஜானகி பாடிய இப்பாடல் இளைய ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. ‘ஜெர்மனியின் செந்தேன் மலர்’ எனும் பதமே, மனதுக்குள் பரந்த மேற்கத்திய நிலத்தின் வசீகரச் சித்திரத்தை விரிக்கும்.

ஆர்ப்பாட்டமான சாக்ஸபோன் இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் இனிமையின் கொண்டாட்டம் தான். ஜெர்மனி என்று பாடல் வரி சொன்னாலும் பிரான்ஸ், நெதர்லாந்து என்று வெவ்வேறு நாடுகளின் நகரங்களில் படமாக்கியிருப் பார்கள். இரண்டாவது நிரவல் இசையில் துள்ளும் கிட்டார் இசையைத் தொடர்ந்து குளிர் காற்றில் பரவும் வயலின் இசைக் கோவை தமிழ்த் திரை யிசையின் மகத்தான சாதனை.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x